இப்பதிவு அப்படியல்ல. பெரியவர்களும் சரி, குழந்தைகளும் சரி.....ஏன்? ‘ஏம் பேச்சை நானே கேக்கமாட்டேன்’ என்பது போல் நான் செய்ததை நானே சாப்பிடமாட்டேன், என்றுதான் சொல்ல வேண்டும்.
எப்போதும் ‘டீல்’ மட்டும் சொல்வதற்குப் பதில், ‘நோ டீல்’ லும் சொல்லலாமே என்று எண்ணிய எண்ணம்தான் இப்பதிவு. அதாவது நான் ‘சொதப்பியதையும்’ சொகுசாக சொல்லப் போகிறேன்.
நள்ளிரவு.....!!!இந்த செவத்துக்கொழியெல்லாம் சிகுசிகுசிகுனு சத்தம் போடுமே! அம்மாதிரியான ஓர் இரவு. ஊரெல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில். அப்போது மெல்ல சத்தம் செய்யாமல் ஓர் உருவம் அந்த அறைக்குள் நுழைகிறது. அறைக் கதவை சாத்தி....”டொப்” ஒண்ணுமில்ல ஸ்விட்ச்! அந்த உருவம் லைட்டைப் போடுகிறது.
ஏதோ ரெண்டு மாவு டப்பாக்களை எடுத்து அதிலிருந்த மாவுகளை ஏதோ ஓர் அளவில் ஒரு பாத்திரத்தில் கொட்டி உப்பும் வெண்ணையும் போட்டு தண்ணீர் விட்டு கட்டியாகப் பிசைகிறது. அடுப்பில் எண்ணை சட்டியை வைத்து, அது காய்ந்ததும் பிசைந்து வெச்ச மாவை உருட்டி முறுக்கு குழாயில், தேன் குழல் அச்சைப் போட்டு கொதிக்கும் எண்ணையில் பிழிகிறது. நன்று வெந்ததும் எடுத்து எண்ணை வடிய டிஷ்யூ பேப்பரில்(ரொம்பத்தான் ஒழுங்கு) போடுகிறது. மொதல் ஈடு ஆறியதும் எப்படி இருக்கிறது என்று ருசி பார்க்காமல் மொத்த மாவையும் பிழிந்தெடுக்கிறது.
ஆறியதும் ஒரு முறுக்கை...இல்லல்ல தேன் குழலாம்!!!!எடுத்து வாயில் வைத்து கடிக்கிறது. ’கடக்’ ஆடிக்கொண்டிருக்கும் பல் ஒன்று முறுக்கோடு வெளியில் வருகிறது.
ஐயையோ!!!நமக்கும் இப்படி ஆச்சேன்னு திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி, அத்தனை தே. குழலையும் சில்வர் தூக்கில் போட்டு லாஃட்டில் தொங்கவிடுகிறது.
தீபாவளிக்கு எண்ணைச் சட்டி வைக்கவேண்டுமே என்ற நெனப்பில் பகலெல்லாம் விட்டுவிட்டு ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மேல் வந்த ஞானோதயத்தால் வந்த விளைவு....தேன் குழலுக்கு தூக்குதண்டனை!!!!!
கொடுத்தது.....அடியேள்தான்!!!!
அளவுகள் ஒன்றுக்கொன்று முறுக்கிக்கொண்டதால் வந்த விளைவு.
சேரீ, எப்பவும் ஜெயிச்சுக்கிட்டே இருக்கணுமின்னால் முடியுமா? தோல்வி தந்த சுவையையும் ருசிக்கணும்.
சேரீ.....முறுக்குத்தான் முறுக்கிக்கிச்சு. இனிப்பாவது செய்யலாமே என்று ஒரு பல்ப் எரிந்தது. நார்மல் ஸ்வீட் என்றால் நல்லா வரும். ரங்ஸுக்கு சுகர். ஆகவே செயற்கை இனிப்பு சேர்த்து இனிப்பு செய்தால் என்ன என்ற எண்ணம் காலை ஒரு மணிக்கு வந்தது. ஏற்கனவே ஊற வைத்திருந்த பாதாம் பருப்பு ஒரு கப் இருந்தது. ஆஹா! அவருக்கு பாதாம் ஸ்வீட் செய்து தரலாமே என்ற நல்ல எண்ணம் அந்த கெட்ட நேரத்தில் உதித்தது.
பாதாமை நன்கு மிக்ஸியில் அரைத்து, சத்தம் அக்கம்பக்கம் கேக்குமே என்கிறீர்களா? அதான் வெடியெல்லாம் போட ஆரம்பிச்சாச்சே!!!!
அமெரிக்காவில்லிருந்து உறவுக்காரர் கொண்டு தந்த ’ஸ்ப்ளண்டர்’ செயற்கை இனிப்பு ஒரு பாக்கெட் இருந்தது. சர்க்கரை என்றால் இவ்வளவுக்கு இவ்வளவு என்று அளவு தெரியும். இதை எவ்வளவு போடுவது? நூறு கிராம் நார்மல் சுகர் என்றால் ஸ்ப்ளண்டர் ஒரு ஸ்பூன் போடலாமா? ஓகே...நொழஞ்சாச்சு...ஆனது ஆச்சு என்று சுமாரான அளவில் செயற்கை சர்க்கரையை பாதாம்பேஸ்டில் கலந்து பாலில் ஊற வைத்த குங்குமப்பூ(ரொம்பத்தான்!) வைத்து அடுப்பில் வைத்து கிளற ஆரம்பித்தேன்.
நெய்யை கொண்டா கொண்டா என்று குடித்தது. ஒரு வழியாக திரண்டு வரும்போது இறக்கி ஆற வைத்தது.
துண்டு போட்ட பின்.
காலையில் பூஜைக்கு வீட்டில் செய்த பலகாரமாக இதுவாச்சும் இருக்குதேன்னு அப்போ ருசி பாக்க வில்லை. காலையில் குளித்து முடித்து பூஜையும் முடித்து , பாதாம் ஸ்வீட்டை மட்டும் தட்டில் எடுத்துக்கொண்டு போய் ரங்ஸிடம் பெருமையாக, ‘ நான்...நானே கிச்சனில் வேறு யாரும் செய்யாமல் செய்தது. உங்களுக்காகவே நேச்சுரல் சுகரில் செய்தது.’ சாப்பிட்டுப் பார்க்கும்படி தந்தேன்.
ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டு சுவைத்துவிட்டு என்னைப் பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்தார். என்னவென்று புரியாமல் நானும் வாயில் போட்டுப் பார்த்துவிட்டு, ஆமாம் பாதாம் ஸ்வீட் அசட்டு இனிப்பு இனித்தது!!!!!
அடடா..! சாமிக்கும் நெய்வேத்தியம் செய்தோமே..! சாமி என்ன சிரிப்பு சிரித்தாரோ...?