திரைப்படங்களுக்கு மட்டும்தான் ‘மேகிங் ஆஃப்’ உண்டா என்ன? என் கொலுவுக்கும் அது உண்டே!!!!
என்னோட கொலுவில் பொம்மைகள் தவிர பேக் ட்ராப் வருடாவருடம் விதவிதமாயிருக்கும். எந்த வருடம் நேரமின்மையால் ஐடியா கோடவுன் ஷட்டவுன் ஆகிவிட்டது. ‘என்ன இன்னும் யோசிக்கவில்லையா?’ என்று கேள்விகள் வட்டமிட்டன.
நான் சொன்னேன்....அம்மா அவளுக்கு வேண்டியதை என்னிடமிருந்து வாங்கிவிடுவாள். ஆகவே பொறுங்கள்.
திடீரென்று கோடவுன் திறந்தது. ஐடியாவும் வந்து விழுந்தது. அண்ணன் வீட்டில் நடமாடிய மயில்கள் என் மனதை வருடிக்கொண்டேயிருந்தன.
ஸோ....மயிலே பேக் ட்ராப்பாகியது.

டிவியில் ஆர்ட் அட்டாக் என்றொரு நிகழ்ச்சி வருமே!! பேப்பர்களை கச்சா முச்சா என்று கசக்கி பெவிக்காலும் டிஷ்யூ பேப்பரும் கொண்டு வித வித மான உருவங்கள் செய்து கலரடித்து செய்வார்களே, அதைப்போல் மயிலின் உருவம் செய்து சுவற்றில் ஓட்டினேன். பின் அண்ணன் வீட்டில் மயில்கள் உதிர்த்துப் போட்ட மயிலிறகுகளையும் பத்தாததுக்கு விலைக்கு வாங்கியும் ஒட்டினேன். என்னிடமிருந்த கிரிஸ்டல் கற்களை வெள்ளை சார்ட் பேப்பரில் கண்கள் வரைந்து அதில் ஒட்டி கண்களாகப் பொருத்தினேன். பாசி வைத்த குண்டூசிகளை கொண்டைகளாக சொருகினேன். டிப் டீயோடு வரும் குச்சிகளை கால்களாக அமைத்து சேர்த்தேன். அம்புடுதேன்......மயில் அழகாக தன் தோகையை விரித்தாடியது என் கொலுவுக்கான பேக் ட்ராப்பில்.

கொலு வைக்க படிகள் அடுக்கப் பட்டன.

பச்சரசி நிரப்பி மாவிலை சொருகி தேங்காய் வைத்து பூப்போட்டு குங்குமம் இட்டு கலசம் தயார். அதை நல்ல நேரத்தில் மேல் படியின் நடுவில் பிரதிர்ஷ்டை செய்து முப்பெரும் தேவிகளை அமர செய்தாயிற்று.

பூரண கலசம்.

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி....என் அம்மாவும் வந்தாச்சு.

இந்த வருடம் மைலாப்பூர் குளத்தருகே வாங்கிய புது பொம்மைகள்.

ஆஞ்சனேயர், ஜெய் ஜெய் ஜெய் ஸ்ரீராம்.....என்று நெஞ்சைப் பிளந்து சீதா ராமரைக் காட்டும் நெஞ்சை உருக்கும் காட்சி!! இதுவும் புதுசு.

இரண்டாம் படியில் மதினி பரிசளித்த அண்ணாமையார்- உண்ணாமுலை அம்மை.

அண்ணாமலைக்கு அரோஹரா!!!!


முழுமை அடைந்த கொலு, நீரில் மிதக்கும் விளக்குகளுடன்.

ஆஹா...! பூஜைக்குத்தயார்!

ஒன்பது நாட்களும் விளக்கேற்ற ஏதுவாக எம்மாம் பெரிய தீக்குச்சி!!!


ப்ளேம்லெஸ் காண்டில்.

பேரன் கொலுவுக்காக மனமுவந்து தந்த அவனது டாய். அனிமேனி!! பக்கத்தில் அவனது பேவரைட் ‘தாமஸ் டிரைன்.

வாருங்கள்...எல்லோரும் வந்து சந்தனம் குங்குமம் எடுத்துக்கொள்ளுங்கள்!!
அதோடு ரவா கேசரி, பூம்பருப்பு சுண்டல் பிரசாதம். வேண்டிய மட்டும் எடுத்து சாப்பிடுங்கள். காரணம் அவை அக்ஷ்ய பாத்திரங்களாக்கும்!!!!

பதிவுலக அன்பர்கள், மற்றும் அனைவருக்கும் என் அன்பான நவராத்திரி தின வாழ்த்துக்கள்!!!