Friday, March 7, 2008

இது கொஞ்சம்...ரொம்ப டூ மச்சா இல்ல?

விளையாட்டுகள் பல விதம். இது டூமச் ரகம். இண்டோர் கேம்ஸ் எப்படியல்லாமோ விளையாடியிருப்போம். இப்படி விளையாடியிருக்கிறீர்களா?

விளையாட்டுப் பிள்ளைகளான நாங்கள்....முந்தின பதிவுகளிலேயே தெரிந்திருக்கும், பலவகை இண்டோர் கேம்ஸ்களை ஆர்வத்தோடு ஆடுவோம்.

அதில் ஒன்று....'க்ரூயிஸர்' இப்போது அதன் பெயர் 'பாட்டில்ஃபீல்ட்'. அப்போதெல்லாம் இதற்கென்று எந்த ஒரு சாதனமும் கிடையாது. பேப்பரில் சதுரங்கக் கட்டங்கள் மாதிரி 9க்கு9-என்று வரைந்துகொண்டு இடமிருந்து வலமாக, R S T U V W X Y Z என்றும் மேலிருந்து கீழாக, 1 2 3 4 5 6 7 8 9 என்றும் ஆளுக்கொன்றாக குறித்துக வத்துக்கொண்டு கொண்டு ஆடவாரம்பிப்போம்.

கடல் போர் தான் இந்த ஆட்டத்தின் கரு. இருவரும் ஒருவர்க்கு ஒருவர் தெரியாமல் தத்தமது கடற்படையை கட்டங்களுக்குள் அமைத்துக்கொள்ளவேண்டும்.

ஷிப்-----4 கட்டங்கள்
க்ரூயிஸர்-3 கட்டங்கள்
டெஸ்ட்ராயர்--2 கட்டங்கள்
சப்மெரின்-----1 கட்டம்

இவற்றை நம் விருப்பம் போல் படுக்கை வசமாகவோ அல்லது நிற்கும்வசமாகவோ அமைத்துக்கொள்ளலாம். இப்போது ஆட ரெடி.

ஒருவர் பேப்பரை ஒருவர் பார்க்காமல் அமர்ந்து கொண்டு குண்டு வீச ஆரம்பிக்க வேண்டும்.
அதாவது ஷாட்ஸ்!! ஒரு நேரம் 3 ஷாட்ஸ்தான் அனுமதி.

முதலில் ஆடுபவர், S6, S7, S8 என்று கொடுத்தால்...எதிராளி அதை தன் பேப்பரில் அந்தந்த கட்டங்களில் குறித்துக் கொள்ள வேண்டும். உடனே அதன் முடிவுகளைச் சொல்ல வேண்டும்.

அது கப்பல் அடி, கப்பல் அடி, கப்பல் அடியாகவும் இருக்கலாம். அல்லது க்ரூயிஸர் முங்கிடுச்சு-ஆகவும் இருக்கலாம் அல்லது டெஸ்ட்ராயர் அடி,அடியாகவும் இருக்கலாம் அல்லது சப்மெரின் முழ்கிடுச்சு என்றும் இருக்கலாம் அல்லது மூன்று ஷாட்ஸும் வாஷவுட்-ஆகவும் ஆகலாம்.

இது மாதிரியான முடிவுகளை சொல்ல ஷாட் வாங்கியவர் அதைத்தன் பேப்பரிலும் குறித்துக் கொண்டு, தன்னோட ஷாட்ஸ்களை மற்றவர்க்கு கொடுக்கவேண்டும். அவரும் அதை வாங்கிக்கொண்டு முடிவுகளைச் சொல்லவேண்டும்.

இப்படியாகத்தானே மாறிமாறி ஷாட்ஸ்கள் கொடுத்து வாங்கி யார் மற்றவர் கடற்படையை முற்றிலும் அழிக்கிறார்களோ அவர்தான் வின்னர்.

இதிலென்ன டூமச்? இருக்கிறது. என் திருமணத்துக்கு முன் நானும் என் தங்கையும் ஆர்வத்தோடு விளையாடும் ஆட்டம் இது.

திருமணத்துக்குப் பிறகு ஒரு முறை ஊருக்குப் போயிருந்தபோது நானும் அவளும் க்ரூயிஸர் ஆட ஆரம்பித்தோம். பாதி ஆட்டத்தில் நான் தூத்துக்குடி திரும்ப வேண்டியதாயிற்று. அப்போது அங்கு தானிருந்தேன். என்ன செய்வது? நாம் தொடருவோம் என்றபடி ஊர் வந்துசேர்ந்தேன்.

தந்தையார் டிரான்ஸ்போர்ட் பிசினஸிலிருந்தது எங்களுக்கு வசதியாய் போயிற்று. திருநெல்வேலிக்கும் தூத்துக்குடிக்கும் ஒரு நாளைக்கு 2-3 பஸ்கள் ஷண்டிங் அடித்துக்கொண்டிருக்கும்.

காலை முதல் பஸ்ஸில் என்னோட ஷாட்ஸ்களை ஆபீஸ் பையன் கண்டக்டரிடம் சேர்ப்பித்துவிடுவான். அதே பஸ் திரும்பும்போது தங்கையிடமிருந்து இதே போல் அங்குள்ள ஆபீஸ் பாய் கண்டக்டரிடம் சேர்ப்பித்துவிடுவான். இப்படியே ஒருவரிடமிருந்து ஷாட்ஸுக்கான ரிசல்ட்டும் பதில் ஷாட்ஸும் ஷண்டிங் அடித்து ஆட்டம் முடிய 10 நாட்களாவது ஆகும்.

தொடங்கி பாதியில் ஊர்திரும்பிய ஆட்டம் ஒரு வாரத்தில் முடிந்தது. "ஹை! இது நல்லாருக்கே!"
என்று அடுத்த ஆட்டமும் ஆடுவோம். அப்பாவுக்கோ அண்ணன்மார்களுக்கோ இது தெரியாது.
ஏதோ அக்கா தங்கை பாச மழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணிக் கொள்வார்கள். அந்த மழையும் உண்டு.

அப்போதுள்ள மனநிலையில் அது டூமச்சாக தெரியவில்லை. வாழ்கை சுகமானது என்று எண்ணியிருந்த காலம்.

இபோது நினைத்துப் பார்த்தால் டூமச் இல்லை த்ரிமச்...ஃபோர்மச்............டென்மச்சாகத்தெரிகிறது.

Thursday, March 6, 2008

மார்ச் மாத-PiTக்கு இரண்டாவது பதிவு

என் இரண்டாவது பதிவு உங்கள் பார்வைக்கு.


தொடர்விளையாட்டோ..பங்களிப்போ...நானும் வாரேன்!!

கண்மணியின் அழைப்பு...தொடர்விளையாட்டு...என்ன விளையாட்டு.
சின்னதில் பாடிய அர்த்தமுள்ள(!)பாடல்கள்.

எனக்கு ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே!!

குத்தடி குத்தடி சைலக்கா
குனிந்து குத்தடி சைலக்கா
பந்தலிலே பாவக்கா
தொங்குதடி லோலாக்கு
பைய வேணா பாத்துக்கோ
பணத்த வாங்கிப் போட்டுக்கோ
சில்லறயை மாத்திக்கோ
சிலுக்கு சட்டை போட்டுக்கோ
ஜில்ஜில் ஆடிக்கோ



தோசையம்மா தோசை
அரிசிமாவும் உளுந்தமாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு ஒன்னு
அண்ணனுக்கு ரெண்டு
எனக்கு மட்டும் நாலு


காக்கா காக்கா கண்ணாடி
காசுக்கு ரெண்டு முட்டாயி
குண்டாங்குண்டாங் தலகாணி
குதிரை மேலே சவ்வாரி
ஏண்டியக்கா அழுகிறாய்
காஞ்சிபுரம் போகலாம்
ல்ட்டு மிட்டாய் வாங்கலாம்
பிட்டுபிட்டு தின்னலாம்
எங்க வீட்டு மாடியிலே
தாம்தூம் குதிக்கலாம்

டக்குடக்கு கடிகாரம்
தட்டு நிறைய பணியாரம்
குட்டிகுட்டி சுண்டெலிகள்
எட்டிஎட்டிப் பார்த்தனவே
டண்டண் என்றது கடிகாரம்
தாவி வந்தது கரும்பூனை
கண்டு மிரண்ட சுண்டெலிகள்
காற்றாய் பறந்து மறைந்தனவே
(hickary dickary dog..ன் மொழிபெயர்ப்பு மாதிரியில்ல?)

பண்டாண்டா....எவண்டா அது?

மழலை மொழி படிக்கலாமா? அட்மிஷன் இலவசம்!!

ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தாள் அண்ணன் மகளும் அவளின் இரு சுட்டிப்பசங்களும்.
மதியம் உணவு முடித்து நாங்கள் பெட்ரூமில் ஓய்வாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

திடீரென்று ஆரம்பித்தான் சின்னவன் ஷன்னு. "பண்டாண்டா...பண்டாண்டா..!"
'என்னதுடா பண்டாண்டா' என்று அவன் அம்மாவும் என் மகளும் கேட்டனர்.

இருவரும் மாறிமாறி கேட்க கேட்க அவனும் 'ஆத்தா வையும் காசு கொடு..ஆத்தா வையும் காசு கொடு..' என்பது போல் 'பண்டாண்டா..பண்டாண்டா..' என்றே சொல்லிக்கொண்டிருந்தான்.

நான் இருவரையும் கம்முன்னு இருக்கச் சொல்லிவிட்டு, அவனைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு, 'கண்ணா! பண்டாண்டா எங்கேயிருக்கு? காட்டு பார்க்கலாம்?' என்றேன்.

அவன் கையாலேயே வழிகாட்டி என்னை இட்டுச் சென்ற இடம்...சமையலறை. அவன் காட்டிய பண்டாண்டா....அங்கு பழக் கூடையில் நமட்டு சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்த.....
ஒரு சீப்பு...'வாழைப்பழம்!!' பனானாவாம்!!!!

'பிள்ளைகளா!! இங்கு வந்து பண்டாண்டா பாருங்கோ...' என்று கூவினேன். இருவரும் வந்து பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர். மறக்க முடியாத...'பண்டாண்டா!'


இதே போல் எங்க வீட்டு குழந்தைகளின் மறக்க முடியாத மழலைச் சொற்கள் சில:

fee துட்டு தா-----கண்டக்டர், விசில் அடித்து டிக்கெட்டுக்கு காசு கேட்பவர்.
ஏவோட சாஞ்சக்கா----என்னோட சாய்வு நாற்காலி
பீ இந்தோ-----எவ்வளவு அழுக்கானாலும் கையில் இடுக்கிக்கொள்ளும் தலையணை.
பூ நந்னை-----சாஃட்டான தலையணை.
பண்டாண்டா----வாழைப்பழம்
ஆஞ்சுப்பி-----விரல் சூப்பும் போது கையில் இடுக்கிக்கொள்ளும் துணி.
சாக்கா------சாக்லேட்

இன்னும் நிறைய இருக்கு. ஆனால் மறந்துடுத்து.

இந்த 'ஆஞ்சுப்பி'க்குப் பின் ஒரு சுவாரஸ்யமான கதையே இருக்கு!
பண்டாண்டா ஷன்னுதான் ஆஞ்சுப்பிப் பையன்.


இதுதான் 'ஆஞ்சுப்பி!'

எப்போதும் ஆஞ்சூப்பியும் கையுமாக அலையும் மூன்றரை வயது குழந்தை. என் பேரன் பிறந்த
பதினைந்து நாளில் st.louis-லிருந்து SFO-க்கு தன் பெற்றோர் மற்றும் அண்ணன் சகிதம் பார்க்க வந்திருந்தான். குட்டிப்பாப்பாவைப் பார்த்ததும் என்ன நினைத்தானோ தன் அம்மாவைப் பார்த்து ,"amma! i want to gift somthing to the baby." என்றான். "good what are you going to gift?"

"MY AANCHUPPI! I DO'NT WANT ANYMORE!" என்றானே பார்க்கலாம். அது இல்லாமல் அவனை சமாளிக்கப்பட்ட பாடு அவளுக்குத்தானே தெரியும். எப்ப எங்கே கேட்டாலும் கொடுக்கத்தோதாக கைப்பையில் ஒரு பிட், பாண்ட் பாக்கெட்டில் ஒன்று, அப்பாவின் பாக்கெட்டிலும் ஒன்று, கார் டஷ்போர்டில் ஒன்று என்று ஸ்டோர் செய்திருந்தாள். ஆச்சரியத்துடன் கேட்டாள், 'really? are you sure?' 'yea! i mean it!' என்றான் தோரணையாக.

அவனுடைய விலை மதிப்பில்லாத ஆஞ்சூப்பியை குட்டிப்பாப்பாவின் கையில் திணித்து அதை உபயோகிக்கும் விதத்தையும் பாப்பாவுக்கு அவன் டெமோ செய்து காட்டியது கண்கொள்ளாக் காட்சி!!!!!

அந்த ஆஞ்சூப்பியை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

Wednesday, March 5, 2008

மார்ச் மாத PIT- போட்டிக்கான...என்னோட பிரமிப்பு...அல்ல..அல்ல..'பிரதிபலிப்பு' ப்படங்கள்.



இவையிரண்டும் சிகாகோ டவுண்ட்டவுனிலுள்ள ' மில்லீனியம் பார்ர்கில்' கண்ணைக்கவரும் ஜெல்லிமீன் வடிவில் உள்ள ஒரு டூம்!! இதன் நட்டநடுவில் போய் அண்ணாந்து பார்த்தால் தெரியும் பிரதிபிம்பங்கள் அற்புதம்!!

வீட்டிலுள்ள வண்ணவண்ண மேஜைவிளக்கு.

இதுவும் சிகாகோவில் காண்டினி பார்க்கில் உள்ள 'ராபர்ட் ஆர். மெக்கார்மிக் மியூசியத்தில்' எடுத்தது.

கீழ் வரும் இரண்டும் சிகாகோ டவுண்ட்டவுனிலுள்ள 'மேரி பியர்' என்னுமிடத்தில், நம்மைக் கோமாளி போல் காட்டும் கண்ணாடிமுன் எடுத்தது.


முதல் மூன்று படங்களும் போட்டிக்கு...மற்றவை பார்வைக்கு.
இதில் படங்களிலுள்ள தேதி நேரம் இவற்றை மாற்றத் தேவையான மென்பொருள் இல்லாததால்(எனக்கும் தெரியாததால்)
அப்படியே தந்திருக்கிறேன். நடுவர்கள் விதிவிலக்கு தருவார்கள் என்று நம்புகிறேன். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பங்கெடுத்ததே திருப்தி!!!!!!!!

Sunday, February 24, 2008

எங்காத்துக்காரியும் படிக்கப்போனாள்!!

உள்ளூக்குள் ஆசையும் ஆர்வமும் பொங்கிவழிந்தால் எந்த வயதிலும் படிக்கலாம். சமீபத்தில் பத்திரிகையொன்றில் 90-வயது மூதாட்டி ஒருவர் உலகில் இருக்கிற பட்டப்படிப்பெல்லாம் படித்து முடித்து முதலாவதாக தேறி எல்லோரையும் பிரமிக்க வைத்தார். அவரிடம் எதிர்காலக்கனவு(!?)என்னவென்று கேட்டபோது.... சொந்தமாக பிசினஸ் செய்து பெரிய ஆளாக வேண்டும் என்று சொல்லி அதிபிரமிக்கவைத்தார்!!!!

பெரிய கனவென்று ஒன்றுமில்லை. ஆனால் ஜாக் ஆஃ ஆல் டிரேட் ஆக இல்லாவிட்டாலும் மாஸ்டர் ஆஃ நத்திங் ஆகவாவது இருக்கலாமென்ற எண்ணம்தான். பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றதும் வீட்டில் சும்மா பொழுது போக்கிகொண்டிருந்த என்னை ஏதாவது கோர்ஸ் போகிறாயா என்று கேட்டார் ரங்கமணி. ஓஓஓஓஓஓஓஓஓஒகே! என்றேன்.

மறுநாளே கம்ப்யூட்டர் கோர்ஸுக்கும் இண்ட்டீரியர் டிசைன் கோர்ஸுக்குமான விண்ணப்பபாரங்களோடு வந்தார். கம்ப்யூட்டர் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன், அடுத்த கோர்ஸ் கொஞ்சம் வரைய வருமென்பதால்.

முதலில் கம்ப்யூட்டர் கோர்ஸ் தேர்ந்தெடுத்தேன். திநகரில் 'கம்ப்யூட்டர் பாயிண்டில்' நுழைவுத்தேர்வு. ஒரு ஹாலில் அமர வைத்து கேள்வித்தாளை கொடுத்துவிட்டு போய்விட்டார்
ஆசிரியர். கேள்விகளை மேய்ந்ததில் எல்லாம் அப்ஜெக்டிவ் கேள்விகள். கொஞ்சம் லாஜிக்கலாகயிருந்தது. பேப்பரை கொடுத்துவிட்டு வெளியே காத்திருந்தேன்.

இன்ஸ்ட்ரக்டர் வெளியே வந்து 'குட்!' என்று சொல்லி அட்மிஷனை உறுதி செய்து, பணம் கட்டிவிட்டு மறுநாளிலிருந்து வரச் சொன்னார்.

மறுநாள் என்னை திநகரில் விட்டுவிட்டு அம்பத்தூர் சென்றுவிட்டார். வகுப்பில் நுழைந்தேன்.
இளம் பெண்களும் பையன்களுமாக இருக்க 'நானொருவள் மட்டிலும்' பேரிளம் பெண்!!ஹி..ஹி..!

எல்லோருக்கும் பொதுவாக ஒரு 'ஹாய்!' சொல்லிவிட்டு இருக்கையிலமர்ந்தேன். ஸ்ஸர் வந்து ஒரு கம்ப்யூட்டருக்கு இருவர் வீதம் அமரச்சொன்னார். என்னருகில் மாலதி என்ற 20வயதுப்பெண் இருந்தாள். முதலில் அனைவரும் என்னை 'ஆன்டி..ஆன்டி..'என்றே அழைக்கவாரம்பித்தனர். ஆகா...! இது சரிப்படாதே! நம்மோட நண்டு மணியடித்தது.

நானே என்னோட மனவண்டியில் ரிவர்ஸ் கியர் போட்டு என்னோட 22-ஆவது வயதுக்குப் போயிருந்தேன். மறுபடி கல்லூரி நாட்களுக்குள் நுழைந்தாற்போன்ற ஒரு புத்துணர்வு!!!!! ஆன்டியாவது..?
பிள்ளீங்களா!!என்னை நீங்கள் 'நானானி' என்றே அழைக்கலாம். அதுதான் எனக்கும் பிடிக்கும் என்றேன். ஓகே! நானானி! உங்களை அப்படியே கூப்பிடுகிறோம்!' என்றார்கள் கோரஸ்ஸாக.

பிறகென்ன? என்னோட நக்கல், நையாண்டி,கடிஜோக்ஸ் மூலம் அவர்களில் ஒருத்தியாக என்னை இணைத்துக்கொண்டேன்.....இணைத்தும் கொண்டார்கள். 'நானானி! இப்போதே இப்படியென்றால் கல்லூரி நாட்களில் எப்படி கலக்கியிருப்பீர்கள்? ' என்றார்கள் இப்போதும் நான் அந்நாட்களில்தான் இருக்கிறேன் என்றேன்.

முதல் சிறிது நாட்கள் இப்படி கலகலவென்று ஓடியது. பிறகு சீரியஸ்ஸாக பாடம் படிக்கவாரம்பித்தோம்.

பெரிய எக்ஸ்பர்ட் ஆகும் அளவுக்கு நமக்கு சரக்கு இல்லை. ஆனாலும் கம்ப்யூட்டர் ஆபரேட் செய்வது, சின்னச்சின்ன ப்ரோக்ராம் எழுதுவது என்று கற்றுக்கொண்டேன். நமக்கு அது போதும்.

எனக்கும் மாலதிக்குமான ப்ராஜெக்ட் லைப்ரெரி மானேஜ்மெண்ட். கொஞ்சம் திணறித்தான் போய்விட்டேன். அக்கா பையன் வந்து வந்து உதவிகள் செய்வான். மாலதியும் அவனிடம் நிறைய கேட்டுத்தெரிந்து கொள்வாள்.

ஒருவழியாக மாலதி புண்ணியத்தில் ப்ராஜெக்ட் முடித்து..முதல் வகுப்பில் தேறி சர்டிபிகேடோடு வெளிவந்தேன். மறக்க முடியாத அனுபவம்!!!

அடுத்து நான் படையெடுத்தது Exterior Interior Institute ராதாகிருஷ்ணா சாலையில் நீல்கிரீஸ்-க்கு எதிரே ஒரு சந்தில் இருந்தது. வாரம் மூன்று நாட்கள். அப்போதிருந்த ஆர்வத்தில் மின்சார ரயில் பிடித்து கிண்டி வந்து அங்கிருந்து 45B பிடித்து போவேன்.

அங்கும் இதுபோல் ஒரு நுழைவுத்தேர்வு. என்னை தயக்கமாய் ஒரு பார்வை பார்த்தார், ஆசிரியர். ரங்கமணி நன்றாக வரைவாள் என்று எடுத்துக்கொடுத்தார். ஒரு பேப்பரும் சில அளவுகளும் கொடுத்து வரையச் சொல்லிவிட்டு வகுப்புக்கு சென்றுவிட்டார். ரங்கமணியும் அலுவலகம் போய்விட்டார். தனியே தன்னந்தனியே நான் மட்டும் அந்த அறையில். கொடுத்த அளவைக்கொண்டு, ஸ்கேல்,பென்சில்,போர்டு, டி-ஸ்கோயர் ஆகியோர் உதவியோடு வரைந்து முடித்தேன். அதன் நேர்த்தியைக்கண்டு திருப்தியாகி உடனேயே வகுப்புக்குப் போகச் சொன்னார்.

வகுப்பில் நுழைந்தால் அங்கு எல்லா வயதினரும் கலந்தடித்து இருந்தார்கள். ஹாய்!..ஹாய்! என்று அறிமுகப்படலம் முடிந்தது. கணினி வகுப்பைவிட இது பிடித்திருந்தது.

ஒருவகுப்பில் ஸ்ஸர், ஒரு செல்லைக்குடுத்து(சுவர்கள் மட்டுமே உள்ள அறை) அதில் என்னவெல்லாம் இருக்கவேண்டுமென்று சொல்லி ஒவ்வொருத்தர் கற்பனைக்கும் ஏற்ற டிசைன் வரையச்சொன்னார். இடையில் என்ன சந்தேகமும் கேட்கலாமென்றார். எல்லோரும் கேட்க நான் மட்டும் தயங்கியவேறே இருந்தேன்.

இப்படிக்கேட்டால் சிரிப்பார்களோ? என் தயக்கத்தைப் பார்த்து,'நானானி! தயங்கவேண்டாம். எவ்வளவு முட்டாள்தனமாக(!) இருந்தாலும் கேள். இம்மாதிரி சந்தேகங்களிலிருந்துதான் நல்ல நல்ல டிசைன்கள் உருவாகியிருக்கின்றன. so don't think is it possible...is it possible. in designing field...NOTHING IS IMPOSSIBLE EVERYTHING IS POSSIBLE!!!'என்றார்.


NOTHING IS IMPOSSIBLE EVERYTHING IS POSSIBLE!!!

என்னவொரு தன்னம்பிக்கைதரும் உற்சாகம் ஊட்டும் சத்தியமான வாக்கியங்கள்!!!
டிசைனிங்க்குமட்டுமல்ல வாழ்கைக்கும் ஏற்ற புத்துணர்ச்சி தரும் டானிக்!!!

இப்பதிவை எழுத என் மனக்கிணறையும் தூர்வார்த்த துளசி கோபாலுக்கு நன்றி!
ஒரு பத்து நாட்கள் ஊரிலிருக்கமாட்டேன். என்னைத்தேடவேண்டாம்(!?) யாரோ தேட்ரா மாரிததான் நெனெப்பு!!ஹி..ஹி..
வந்து சந்திக்கிறேன்.

Saturday, February 23, 2008

காதலைச் சொல்லும் விதம் பலவிதம்!! இங்கு சொன்னவிதம் பிரமாதம்!!!!


அமெரிக்காவின் மிசோரி மாநிலத்திலுள்ள செயிண்ட் லூயிஸ் நகரில் அத்துணைக்கண்டத்தின் நடுவில் அந்நாட்டின் முன்னோர்கள் வாழ்வாதாரத்தை தேடி மேற்கு திசை நோக்கி நுழைந்த இடம்.
அந்நினைவாக எழும்பியதுதான் செயிண்ட் லூயிஸ் ஆர்ச் (வளைவு). இந்த ஆர்ச் எழும்ப காரணமான தாமஸ் ஜெஃபர்ஸ்ன் பேரால் "Jefferson National Ezpansion Memorial" என்று அழைக்கப்படுகிறது.

பார்க்க சாதரணமாக தோன்றும் ஆர்ச் பல பிரமாண்டங்களை உள்ளடக்கியது. முக்கோண வடிவமாக பல அளவுகளில் செய்து ஒன்றன் மேல் ஒவ்வொன்றாக, குழந்தைகள் பில்டிங்செட் அடுக்குவது போல பதமாக அடுக்கி, உச்சியில் வைக்கவேண்டிய கடைசி முக்கோணத்தை விழா போல் கொண்டாடி முடித்தார்கள்.
பலமான காற்றடித்தால் ஆர்ச் லேசாக ஆடுமாம்!!

பேரனை இடுப்பில் இடுக்கிக்கொண்டு ஆர்ச் பார்க்கப் போகிறேன்!

இதன் விசேஷம், வெளியிலிருந்து பார்த்துவிட்டு மட்டும் செல்லாமல்..அதன் உள்ளேயும் சென்று, அதாவது ஆர்ச்சின் அடியிலிருந்து இரு பக்கமாகவும் மேலே சென்று உச்சியிலிருந்து ஊரின் அழகை ரசிக்கலாம். அடியிலிருந்து சின்னச்சின்ன பெட்டிகளாக ஐவர் அமர்ந்து செல்லக்கூடிய வகையில்..லிஃப்ட் அல்லது மினி டிரெயின் என்ற அமைப்பில் மேலே சென்றோம்.

மேலே போனவுடன் சமதளமாக இருக்கிறது. சுமார் 30-40 பேர் நிற்கலாம். இருபக்கமிருந்தும் வந்தவர்கள் அங்கிருக்கும் ஜன்னல்கள் வழியாக இருபக்கமும் பார்த்து ரசிக்கலாம். ஒரு புறம் அமைதியாக ஓடும் மிசோரி ஆறு, ஆர்ச்சை சுற்றியிருக்கும் புல்வெளி, பெரியபெரிய கட்டிடங்கள்,ஸ்டேடியம் ஆகியவை கண்களுக்கு விருந்து. சுமார் இருபது நிமிடங்கள் இருக்க அனுமதிக்கிறார்கள். பிறகு வந்த மாதிரி கீழேயிறங்கிவிடலாம்.

ஆர்ச்சின் அழகை சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தபோது மருமகள் அங்கு நடந்த சம்பவம் ஒன்றைச் சொன்னாள். மனதில் பதிந்துவிட்ட அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

தான் காதலிக்கும் பெண்ணிடம் வார்த்தைகளால் காதலைச் சொல்லத்தெரியாத காதலனொருவன்,
சில முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டு அவளை ஆர்ச்சுக்கு மேலே கூட்டிச் சென்றான்.
மேலே சென்றதும் குறிப்பிட்ட ஜன்னல் வழியே அவளைப் பார்க்கச்சொன்னான். அவளும் பார்த்தாள்...பரவசமானாள்..'தனை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!!'

அப்படி அவள் என்ன பார்த்தாள்?

சில முன்னேற்பாடுகள்..என்றேனே! அது.. குறிப்பிட்ட ஜன்னல்வழியே பார்த்தால் தெரியுமாறு ஆர்ச்சின் புல்வெளியில் தன் நண்பர்கள் சிலரை கருப்பு உடையணிந்து, 'I LOVE YOU' என்ற வடிவில் படுத்துக் கொள்ளச் செய்து மேலிருந்து பார்த்தால் பென்சிலால் எழுதியது போல் தெரியுமாறு ஏற்பாடு செய்திருந்தான் அந்த அருமைக் காதலன்!! பின் ஏன் அவள் புல்லரித்துப் போகமாட்டாள்? புல்லில் கிடந்ததென்னவோ அவன் நண்பர்களல்லவா?

அங்கு பொது இடங்கள் எங்கு போனாலும் திருமண ஜோடிகள் சொந்தங்களோடு உலா வருவதைப் பார்க்கலாம். திருமணம் மணப்பெண் தன் கையிலுள்ள பூங்கொத்தை ஒரு உயரமான இடத்தில் திரும்பி நின்று கொண்டு தலைக்குமேலே வீசியெறிவாள் அதைப்பிடிக்க திருமணமாகாத அவளது உறவுப்பெண்கள் மற்றும் தோழிகள் அவள் பின் நின்றுகொண்டு அலைபாய்வார்கள்.
யார் கையில் கிடைக்கிறதோ அப்பெண்ணுக்கு அடுத்து திருமணமாகுமாம். நம்பிக்கைகளும் பலவிதம்!

Thursday, February 21, 2008

விடுபட்ட இரு விளையாட்டுகள்...பல்லாங்குழி, கழச்சிக் கல்!

பல்லாங்குழியும் கழச்சிக் கல்லும் விடுபட்டுவிட்டதே...என்று சொன்னார்கள். மறக்கவில்லை. அதைத் தனி பதிவாக போடலாமென்றிருந்தேன்.

பல்லாங்குழியில் அப்போதெல்லாம் வட்டம் பார்த்ததில்லை...குழியின் உள்ளே கிடக்கும் முத்துக்கள்..அதாவது சோழிகள், புளியங்கொட்டைகள், காக்காமுத்து (செந்தில் இதை தரையில் சூடு பரக்க உரசி கவுண்டமணியின் தொடையில் வைப்பாரே அதேதான்) இவைகளைத்தான் பார்த்திருக்கிறோம்.

எல்லாக்குழியிலும் ஐந்தைந்து முத்துக்களாக நிரப்பி ஆட்டையை ஆரம்பிக்கலாம். இதற்கு தேவை கொஞ்சம் மனக்கணக்கு. எந்தக் குழியில் ஆரம்பித்து முடித்தால் மேலும் கீழுமாக இரு குழியிலும் உள்ள முத்துக்களை அள்ளலாம் என்று கண்டுபிடிக்க வேண்டும். இரு குழியிலும் அள்ளிவிட்டால் அது குமுக்கு குமுக்குதான்!! இல்லாவிட்டால் வெறும் குழியைத்தடவினால் அது தக்கம் தக்கம்தான்.

இந்த விளையாட்டை அம்மா முதல் அக்கா,தங்கை,அண்ணன் வரையும் விளையாடியிருக்கிறேன்.
அப்புரம் இரண்டு தலைமுறை கழித்து அண்ணன் பேரன்...8வயது, அவனோடும் விளையாடியிருக்கிறேன். அவன் வாயிலிருந்து LBW, runout, noball என்றெல்லாம் வரவேண்டிய வயதில்...காலகட்டத்தில், 'குமுக்கு..தக்கம்' என்று வருவது கேட்க நன்றாகயிருந்தது.
தலைமுறை இடைவெளி குறுகிவிட்டது பற்றி மகிழ்ச்சி.

கழச்சிக் கல்!! மலச்சிக்கல் போன்று ஒலிக்கக்கூடாது என்பதால் கல்லை தனியாக பிரித்துக் காட்டியிருக்கிறேன். கண்ணுக்கும் கவனத்துக்கும் கைக்கும் கைவிரல்களுக்கும் ஏற்ற பயிற்சி!
பாபநாசம் போகும் போது அருவியில் விழுந்து ஆற்றில் வழுவழு..மொழுமொழுவென்று உருண்டு வரும் ஒரே சைசிலான கற்கள் எடுத்துவருவோம். இப்போது கடைகளிலேயே அம்மாதிரி கற்கள் pebbles என்ற பெயரில் கிடைக்கிறது.

அம்மா கற்றுக்கொடுத்த விளையாட்டு இது. ஏழு கற்கள்தேவை. ஆறு கற்களை தரையில் பரத்திவிட்டு ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அதை மேலே....மேலே என்றால் சும்மா ரெண்டு மூன்றடி உயரத்துக்கு வீசி அது கீழே வருமும் ஒரு கல்லை கையில் எடுத்து மேலிருந்து கீழே வரும் கல்லையும் பிடிக்கவேண்டும். இதுபோல் ஒவ்வொரு கல்லாக எடுக்கவேண்டும்.

இது முதல் ரவுண்ட். இரண்டாவது ரவுண்டில் ஒன்றை மேலே வீசி ரெண்டுரெண்டாக எடுக்கவேண்டும். அடுத்தது முன்று மூன்றாக...அடுத்தது ஒன்று ஐந்தாக... கடைசியாக ஆறையும் மொத்தமாக எடுக்கவேண்டும். இப்படி...போகும் ஆட்டம். மேலே வீசிய கல்லை தவறவிட்டால் ஆட்டம் க்ளோஸ்!

ஒவ்வொரு ரவுண்டுக்கும் ஒருஒரு பாட்டு உண்டு. நல்லாருக்கும். எனக்கு மறந்துவிட்டது.
அக்காலத்தில் பின்வீட்டுப் பெண்ணோடு விளையாடுவேன். அவள் நன்றாகப் பாடுவாள். நமக்கு எப்பவுமே கொஞ்சம் ரவுசு ஜாஸ்தில்ல!! நான் விளையாடும் போது எனக்காகப் பாடச்சொல்வேன்.
நான் ஆட...நடனம் இல்லீங்க...அவள் எனக்காக பின்னணிப்பாட ஆட்டை நன்றாகவே களை கட்டும்.

எப்போதும் இப்படித்தான். பிள்ளைகளோடு சீட்டு விளையாடினால் என் முறைக்கு அவர்களில் யாராவதுதான் சீட்டை கலைத்துப் போடவேண்டும். கேரம் ஆடினால் யாராவதுதான் காய்களை அடுக்கவேண்டும். அவர்களும் செல்லமாக சிணுங்கிக்கொண்டே செய்வார்கள்.

இப்போது கடைகளில் பல்லாங்குழி, கழச்சிக் கல், பம்பரம் போன்ற பழங்கால விளையாட்டுகள் அழகான துணிப்பைகளில் போட்டு சுருக்கிட்டு அநியாயவிலையில் ஓடிசி, லேண்ட்மார்க் போன்ற பந்தா கடைகளில் விற்கிறார்கள்!!

ஒரு ரூபாய் பம்பரம்+கயிறு வெல்வெட் பையில் போட்டதால் நாற்பது ரூபாயாயிற்று.

Wednesday, February 20, 2008

இதுதான்...ஆண்மை!!

சுஜி பேப்பரும் கையுமாக சமையறைக்குள் நுழைந்தாள். அங்கு அவள் அத்தை,'சுஜி! உனக்கு பரீட்சை முடியும்வரை இந்த பக்கம் வரக்கூடாதுன்னு சொல்லிருகேன்லே!' என்று செல்லமாக மருமகளை விரட்டினாள். 'இல்லத்த..எனக்கு பரீட்சை டைம்டேபிள் வந்துவிட்டது. அதைச் சொல்லத்தான் வந்தேன்.' என்றாள் சிரித்துக்கொண்டே.

சுஜி, இரண்டு குழந்தைகளுக்குத்தாய். திருமணம் சொந்த அத்தை மகனோடு. பள்ளிப்படிப்பு முடித்த நிலையில் மருத்துவப்படிப்பில் ஆர்வமிருந்தவளை சொந்தம் விட்டுப்போகாமலிருக்க சம்சாரசாகரத்தில் விட்டுவிட்டார்கள். அத்தை மகனோ ஊரில் பெரிய புள்ளியின் பேரன். படிப்பில் அக்கறை இல்லாமல் பள்ளிப்படிப்பைகூட தாண்டவில்லை. ஆனால் குழந்தை மனசு.

அவர்களது சந்தோஷ வாழ்கையின் சின்னமாக இரண்டு குழந்தைகள் பிறந்து சில வருடங்கள் கழிந்ததும்...மெதுவாக தன் ஆசையை மாமா,அத்தை,கணவன் மூவரிடமும்,'எனக்கு மேலே படிக்க ஆசை...படிக்கலாமா?'என்று கேட்டாள். மூவரிடமிருந்தும் மொத்தமாக தொப்பென்று வந்து விழுந்தது பதில்! 'தாராளமாக படி!'

தபால்மூலம் யூனிவர்சிட்டியில் சேர்ந்தது. பீ.ஏ. முடித்தாள். முடித்தது பெரிதல்ல. அதற்கு அவளுக்கு கிடைத்த குடும்பத்தார்...குறிப்பாக கொண்டவனின் ஒத்துழைப்பு கவனிக்கவெண்டிய ஒன்று. படிப்பது வீட்டிலிருந்தே படித்துக் கொள்ளலாம்....பரீட்சை எழுதுவது? அது வெளியூரில்தான் இருக்கும்.

பள்ளிசெல்லும் குழந்தையை தந்தை பார்த்துக்கொள்ள...கைகுழந்தையோடு வெளியூருக்கு அவள் அத்தை துணைவருவாள். பார்க்கப் பரவசமாக இருக்கும். இவர்கள் எப்போதும் இப்படியே இருக்கவேண்டும் என்று வாழ்த்தத்தோன்றும். இவ்வாறே எம்.பீ.ஏ. மற்றும் பிசினஸ் கோர்ஸ் என்று ஆசை தீர படித்து முடித்தாள்.

கல்விப் பாதையில் கணவன் ஆரம்பத்தில் நின்ற இடத்திலேயே நிற்க...சுஜி அவனைத்தாண்டி வெகுதூரம் சென்றுவிட்டாள். அவனுக்கு அதுபற்றி எந்த பொறாமையும் இல்லை..காரணம் படிக்க வைத்தவனே அவன்தானே! அவளும் எந்த கர்வமுமின்றி வளையவந்தாள்.

படித்தபடிப்பை வீணாக்காமல்,' நான் ஏதாவது வேலைக்குப் போகட்டுமா?' என்று கேட்டாள்.பணவசதிக்கு குறையில்லாததால் அவள் ஆசைக்கு மதிப்பளித்து அதற்கும் மனதார அனுமதியளித்தான். அருகிலுள்ள கல்லூரில் விரிவுரையாளராக சேர்ந்து பணியாற்றினாள்.

இதற்கிடையில் அவன் தனியாக ஒரு தொழில் தொடங்கி அதில் சுஜியையும் ஒரு பார்ட்னராக்கி அவள் பார்த்துவந்த வேலையை விடச்சொல்லி தனக்கு ஒரு காரியதரிசி போல் வைத்துக்கொண்டான்.

தொழில் சம்பந்தமான கடிதப்போக்குவரத்து, வாடிக்கையாள்கள் தொடர்பு, பணவரவு செலவு முதலியவற்றை பார்த்துக்கொண்டாள். வீட்டிலேயே கணினி, fax, ISD,INTERNET போன்ற சகல வசதிகளும் வந்தன.

தான் படிக்காவிட்டாலும் தன்னவளை படிக்கவைத்து தொழிலிலும் சமூகத்திலும் அவளை முன்நிறுத்திப்பார்க்கும் மனம் எத்தனை ஆண்களுக்கு வரும்!!!

கதையின் க்ளைமாக்ஸ்!!

வீட்டுக்கு வந்த உறவினர்கள் ஹாலில் அமர்ந்திருக்க fax மெஷினிலிருந்து fax ஒன்று வந்தது.
ஸ்டைலாக அதை உருவியெடுத்து, விருந்தினர்களுக்கு காபி,டிபன் எடுத்துவர உள்ளே சென்ற இல்லாளை கூவி அழைத்தான். எப்படி? இப்படித்தான்.

"சுஜீ..........!இங்கிலீஷில் லெட்டர் ஒன்று வந்திருக்கிறது. என்னான்னு படிச்சு சொல்லு!!!"

விருந்தினர்கள் சுற்றி அமர்ந்திருக்க தன் படிப்பறிவின்மையை எந்தத் தயக்கமுமிலாமல் எவ்வளவு கம்பீரமாக வெளிப்படுத்திவிட்டான். இவனல்லவோ உண்மையான ஆண்மகன்!!!

எத்தனை ஆண்களுக்கு இந்தத் தைரியம் வரும்.

Monday, February 18, 2008

போர் அடிக்காத போர்டுகேம் - SCRABBLE !!


எங்கள் வீட்டில் அம்மா முதல் அண்ணன்கள், அக்காக்கள், தங்கச்சி, மதனிகள் எல்லோருக்கும் இண்டோர் கேம்ஸ் விளையாடுவது மிகவும் பிடிக்கும். தாயக்கட்டம், கேரம், சைனீஸ்செக்கர்ஸ் என்று உற்சாகமாக பொழுது போக்குவோம்.

கேரம் போர்டில் நடுவிரலை மட்டும் அழுத்தி அம்மா காய்களை பாக்கெட் செய்வது ஓர் அழகு!
தாயக்கட்டம் விளையாடும்போது ஒரே கூச்சலும் சிரிப்பும் அமர்க்களப்படும். அதன் பாஷையே தனி.தாயம் போடுவதில் ஆரம்பித்து வரிசையாக ஐந்து, ஆறு, சோணா, பன்னிரண்டு...இந்த பன்னிரண்டு போட்டால் உடனே மூன்று விழவேண்டும். இல்லாவிட்டால் போட்ட எல்லாமே கான்சல் ஆகிவிடும். இப்படி வரிசையாக போடுவதற்கு 'விருத்தம்' என்று பேர். யாருக்காவது இப்படி விருத்தம் விழவாரம்பித்துவிட்டால்....சினிமாவில் மயிர்கூச்செரியும் காட்சி வந்தால் எப்படி இருக்கையின் நுனிக்கு வந்துவிடுவார்களோ?...அது போல் மற்றவர்க்கெல்லாம் பரபர என்றிருக்கும். வாய்ப்பாடு சொல்வதுபோல்...தாயம், ஐந்து, ஈரரைந்து, மூவைந்து, ஆறு, மூவாறு, சோணா, இருச்சோணா, முச்சோணா, இருத்தாயம்....என்று எல்லோரும் சொல்லிக்கொண்டேயிருப்போம். இவ்வளவும் விழுந்து ஒரு இரண்டோ, நான்கோ அல்லது மூன்றோ விழுந்தால் பிழைத்தார். அல்லெங்கில் ஒரு பன்னிரெண்டு விழுந்து வைத்தால்....அடுத்தது மூன்று விழவேண்டும். விழுந்தால் அது 'ஜாக்பாட்' மாதிரி. அத்தனை எண்ணிக்கைக்கும் சப்ஜாடாக காய்களை நகர்த்திக்கொண்டே போகலாம். வழியில் அடுத்தவர் காய்கள் எத்தனை அடிபடுமோ...வெட்டுப்படுமோ? படு பரபரவென்றிருக்கும். அந்த மூன்று விழும்வரை எத்தனை பிரார்த்தனைகள்...வேண்டுதல்கள்!!!

மூன்று விழுந்தாலும் விழாவிட்டாலும் யாராவது ஒரு தரப்புக்கு கொண்டாட்டம்தான். அந்நேரம் எழும் சிரிப்பலைகள்!!வீடே அதிருமில்ல! அதிலும் சின்னண்ணன் சிரிப்பு இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.


பொதுவாக இந்த விளையாட்டு நாலுபேர் விளையாடக்கூடியது. ஆனால் நாங்கள் ஐந்துபேர் சேர்ந்தால் 'PENTAGON' போல் வரைந்து கொண்டும்...ஆறு பேர் சேர்ந்தால் 'HEXAGON' போலும்..எட்டு பேர் சேர்ந்தால் 'OCTAGAON' போலும் வரைந்துகொண்டு எங்கள் வீட்டு முற்றத்தில் பெர்மனெண்டாக கட்டியிருந்த 'மணவடை' இட்லிவடையெல்லாம் இல்லை..சரியாகச் சொல்வதானால் 'மணமேடை'யில் நடுவில் வரைந்து கொண்டு சுற்றிலும் அமர்ந்த்து கொண்டு விளையாடும் போது நாங்கள் போடும் கூச்சலில் அக்கம்பக்கமெல்லாம் எட்டிஎட்டிப் பார்ப்பார்கள்.

இது தவிர லெக்சிகன் என்றொரு சீட்டு விளையாட்டு. அதையும் விரும்பி விளையாடுவோம்.
சாதரண சீட்டு எண்களை 1,2,3 என்று சேர்ப்பது போல் அதில் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு வார்த்தைகளை சேர்க்கவேண்டும்.

இப்படி அப்போது வழக்கிலிருந்த விளையாட்டுகளை விளையாடி பொழுதுகளை சுவையாக கடத்திக் கொண்டிருந்த வேளையில்....1970-ல் ரங்கமணியின் தம்பி அமெரிக்காவிலிருந்து வரும் போது வழக்கம்போல் எல்லோருக்கும் பரிசுகள் வாங்கிவந்திருந்தார். அதில் அவர் அண்ணன் மகனுக்கு, பள்ளிமாணவன் அவனுக்கு கொடுத்தது......


SCRABBLE!!! அப்போது அது இந்தியாவில் அறிமுகமாயிருக்கவிலை. அது என்னவென்று கூட பார்க்காமல் அவன் தனது ஷெல்பில் வைத்துவிட்டான்.
நான் அதை வாங்கிப் பார்த்து...ஆஹா!!!என்ன அற்புதமான விளையாட்டு!!மனசு துள்ளிக்குதித்தது. இருந்தாலும் அடுத்தவர்க்கு கொடுத்த பரிசு என்று திருப்பிக்கொடுத்துவிட்டேன்.

பொதுவாக புகுந்தவீட்டில் யாருக்கும் இப்படிப்பட்ட விளையாட்டுகளில் ஆர்வமில்லை. என் நாத்தனார், கொழுந்தன் முதலியோரை அது என்னவென்று பார்த்து விளையாடலாமா? என்று கேட்டேன். ஹூஹும் மசியவில்லை. சரி என்று விட்டுவிட்டேன்.

என் மனசுக்குள்தான் ஒரு நண்டு எதெற்கெடுத்தாலும் ப்ராண்டுமே!!ப்ராண்டிக்கொண்டேயிருந்தது.

ஒரு பத்து நாள் நான் என் பிறந்தவீட்டுக்கு கிளம்பினேன். நண்டு 'கேள்..கேள்..'என்றது.
'நான் இதை கொண்டு போய்விட்டு கொண்டு வரலாமா?' என்று கேட்டேன். 'தாராளமா!' என்று பதில் வந்தது.

எப்போதுமில்லாத உற்சாகத்தோடு பிறந்தவீடு வந்து சேர்ந்தேன். வந்து போர்டைப் பிரித்ததுதான் தாமதம்!!!எல்லோரும் வந்து மொய்த்துக்கொண்டார்கள். அவ்வளவுதான்! முதல் நாள் பிரித்த போர்டு பத்து நாட்களும் மூடவேயில்லை. நாலு பேர்தான் விளையாடமுடியும் என்பதால் செட்செட்டாக சேர்ந்து கொள்வோம்.

யாராவது ஒருவர் எழுந்துவிட்டால் அடுத்தவர் அந்த 'ஆட்டையை' தொடர்வார். இப்படியாகத்தானே ஆட்டை 'நான் - ஸ்டாப்பாக' ஓடிக்கொண்டேயிருக்கும். double , tripple letter மற்றும் double word , tripple word என்று வைக்கும் போது உற்சாகமாயிருக்கும். அதிலும் 7-letter word வைக்கும் போது பாயிண்ட்கள் அள்ளிக்கொண்டு போகும். குறிப்பாக முதலில் ஆரம்பிப்பவர் 7-letter word வைத்துவிட்டு துள்ளிக் குதிப்பார். மற்றவர் முகங்களெல்லாம் எள்ளும்கொள்ளும் வெடிக்கும், காதிலிருந்து புகை கிளம்பும். ஆனாலும் சந்தோஷமாக இருக்கும்.

எங்கள் வீட்டிலிருந்து கிளம்ப ஸ்க்ராபில் போர்டுக்கு மனமேயில்லை. ரொம்ப நாள் என்னிடமே இருந்தது...அனுமதியோடுதான். பின்னர் 2-3 வருடங்கள் கழித்து இந்தியன் சந்தைக்குள்ளும் scrabble நுழைந்தது. கையோடு எங்கள் எல்லோர் இல்லங்களுக்குள்ளும் நுழைந்தது. ஆக யார் வீட்டுக்குப் போனாலும் உடனே ஸ்க்ராபில் போர்டு விரிந்துவிடும். பின்னர் ஆட்டம்தான் பாட்டம்தான் கொண்டாட்டம்தான். பின்னர் உரிய மரியாதையோடும் நன்றியோடும் உரியவரிடம் சேர்ப்பித்துவிட்டேன். என்னயிருந்தாலும் அந்த மரத்தாலான காய்களின் வழவழப்பு நமது பிளாஸ்டிக் காய்களிடம் இல்லை.

எங்கள் எல்லோரையும் சில வருடங்களேயானாலும் ஒரு ஆட்டு ஆட்டிவிட்டது 'SCRABBLE'.

Sunday, February 10, 2008

தெரிந்த பெயர்தான்!......ஆனால்!?


விளக்கமளிக்க சிறிது யோசனை செய்ய வேண்டியது இருக்கிறது!!!

எழுச்சி நினைவூட்ட ஓர் அறிமுக முயற்சி.

1) "ஆலயம்"- என்பதன்பொருள் என்ன?

2) எங்கும் நிறைந்த இறைவனுக்கு கோவில் எதற்கு?

3) இந்துமத கோவில்களின் சிறப்புகள் யாவை?

4) பூஜையின் அர்த்தம் என்ன?

5) பூஜை எத்தனை வகைப்படும்?

6) அபிஷேகப் பொருள்கள் எவை?

7) பூஜையில் செய்யப்படும் உபசாரங்கள் என்னென்ன?

8) பூஜையில் கற்பூரம் காட்டப்படுவது ஏன்?

மேலெழுந்தவாரியாக நமக்கு தெரியும். அவற்றின் உள்ளார்ந்த விபரங்கள் தெரியுமா?
தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள விளக்கங்கள் இதோ...இதோ..!

1) ஆலயம் என்பதை ஆ + லயம் எனப் பிரிக்கலாம். 'ஆ' - என்பதற்கு 'ஆன்மா' என்று பொருள். 'லயம்' என்பதற்கு 'லயிப்பதற்கு அல்லது சேருவதற்கு' உரியது என்பது பொருள். எனவே ஆலயம் என்பதற்கு இறைவனது திருவடியில் ஆன்மா சேருவதற்கு உரிய இடம் என்பது பொருள்.

2) இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் ஆலயங்களில் விசேஷமாக நின்று அருள் செய்கிறார். அதனால்தான் அவரது அருள் பெற ஆலயம் செல்கிறோம்.

3) கோபுரம், கொடிமரம், பிரகாரங்கள் மற்றும் மண்டபங்கள் ஆகியவை சிறந்த தத்துவங்களை விளக்கும்படி அமைக்கப்பட்டுள்ளன. பஞ்சசுத்தி, பூஜை, நைவேத்தியம், தீபாராதனை, உற்சவம் முதலியனவும் சிறந்த கருத்துக்களை வெளிக்காட்டுகின்றன. கோபுரம் ஸ்தூல லிங்கத்தை உணர்த்துகின்றது.

கொடிமரம், மனம் முதலிய கரணங்கள் யாவும் நின்று பிரபஞ்சமே தோன்றாது சிவதரிசனம் உண்டாகும் என்னும் உண்மையை தெரிவிக்கின்றது. பிரகாரங்கள் 5 வித கோசங்களைக் குறிக்கின்றன. 3 பிரகாரங்கள் 5 கோசங்களிலான ஸ்தூல சுட்சும காரணம் என்னும் மூவகை சரீரங்களை விளக்குகின்றன. பிரகாரங்களை சுற்றும் போது பஞ்ச கோசங்களையும் மூவகை சரீரங்களையும்கடந்து இறைவன் விளங்குகின்றான் என்பதை நினைப்பதற்காகும்.

கர்ப்பகிரகம் என்பது பிரதான மூர்த்தியை வைத்து வணங்கும் இடம். மண்டபங்கள் நிவிருத்தி, பிரதிஷ்டை, வித்தியை, சாந்தி, சாந்தியாதீதம் என்னும் கலைகளை உணர்த்துகின்றன.

4) பூஜை என்பதற்கு ஞானத்தை உண்டாக்க கூடிய சாதனம் என்பது பொருள்.

5) பூஜை ஆன்மார்த்த பூஜை, பராத்த பூஜை என இரண்டு வகைப்படும். ஆன்மார்த்தபூஜை ஒருவர் மட்டுமே உய்வதற்காகவும் பரார்த்த பூஜை பிறர் உய்வதற்காகவும் செய்யும் பூஜைகளாகும்.

6) வடித்தெடுத்த நீர், வாசனைத் திரவியங்கள் கலந்த நீர், இளநீர், பன்னீர், எண்ணெய், பால், பஞ்சாமிருதம், விபூதி, சந்தனம், களபம், புஷ்பம் முதலியன.

7) பூஜையில் செய்யப்படும் உபசாரங்கள் பதினாறு ஆகும். ஆவாஹனம், தாபனம், சந்நிதானம், ஸந்நிரோதனம், அவகுண்டனம், தேனுமுத்திரை, பாத்தியம், ஆசமநியம்,அருக்கியம், புஷ்பதானம், தூபம், தீபம், நைய்வேத்தியம், பாநீயம், ஐபசமர்பனை, ஆராத்திரிகம் என்பன.

8) கற்பூரம் முற்றிலும் கரையப் பெற்று ஆகாயத்துடன் கலந்து விடுவது போல் ஆன்மாவானது சத்துவ குணத்தை அடைந்து ஞானமாகிய அக்னியுடன் சம்பந்தம் பெற்று மூவகைச் சரீரங்களும் எல்லாப் பற்றுக்களும் நீங்க பெற்று பரமுக்தி அடைதல் என்னும் பாவனையாகும்.

எட்டு..,இந்த பதிவில் மீதி எட்டு? அடுத்த பதிவில். நிச்சயமாக இவைகள் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்தாம்.

நானென்றும் வாரியார் சுவாமிகள் போலவோ அல்லது திருமதி சிவானந்த விஜயலஷ்மி போலவோ மேடை போட்டு இவற்றையெல்லாம் பொழியவில்லை. திருநெல்வேலியில் ஒரு கெட்டு-கெதரில் எல்லோரும் தெரிந்துகொள்ள கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட தகவல்களின் பிரதி ஒன்று என் கைகளில் மாட்டியது...விடலாமா? உங்கள் பார்வைக்கும் தராமல் விடலாமா? சந்தோஷமாக லபக்கிக்கொண்டு வந்து உங்களுக்காக வழங்குகிறேன்!!!

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...