Sunday, September 6, 2009
வந்தேன்...வந்தேன் மீண்டும் நானே வந்தேன்...!!!
முதற்கண் என் பிறந்த நாளை நினைவில் வைத்து வாழ்த்துக்களை பதிவு செய்த அன்புச் சகோதரி வல்லிக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!!!!
அப்பதிவுக்கு வந்த பின்னோட்டங்கள், ஆஹா! நமக்கும் இத்தனை பேர் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்களே...என்று ஆனந்தமாயிருந்தது.
Monday, August 24, 2009
பிறந்த நாள் வாழ்த்துகள் நானானி!!
நைன்வெஸ்ட்
தளத்தின் உரிமையாளரும்
இனிய குணம் கொண்டவரும்,
பதிவர்களின் அன்பரும்
நண்பருமான நானானிக்கு
இன்று பிறந்த நாள்.
அன்பு நானானியும்,அவர்தம் குடும்பமும் எல்லா வளமும் பெற வாழ்த்தலாம் வாருங்கள் .
ஹாப்பி பர்த்டே நானானி .
வரும் வருடங்கள் நல்ல வருடங்களாக அமைய ஆரோக்கியம் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறோம் .
வாழ்த்துக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!! வணக்கங்கள்!!!
10 Comments:
அபி அப்பா said...
ஹய் அக்காவுக்கு பர்த்டே வா??????? எனக்கு வாழ்த்த வயதில்லை!!!!!!!! ஆசி வேண்டும்!!!!!!!
என் மனமார்ந்த ஆசிகள் உங்களுக்கு என்றும் உண்டு, 'அபியும் நானும்' இல்லையில்லை அபி அப்பா!!!!!
ஆயில்யன் said...
நானானி அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
இனிய வாழ்த்துக்களுக்கு என் இனிப்பான நன்றிகள்!!
வல்லியம்மா, போட்டோ சூப்பர் :) அதே! அதே!!
மதுரையம்பதி said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி!
வல்லிசிம்ஹன் said...
அன்பு ஆயில்யன் நன்றி ம்மா.
நானானிக்கு இப்ப கையில் இணையத் தொடர்பு இல்லை. இல்லாவிட்டால் அவங்களே எல்லோருக்கும் நன்றி சொல்வாங்க.
அதுக்காகவே இச்சிறப்புப் பதிவு.
அன்பு அபி அப்பா உங்கள் வாழ்த்துகளைச் சொல்லுகிறேன்,. அவங்க கட்டாயம் ஆசிகளை அனுப்புவாங்க.
அனுப்பிட்டேனே!!!
அன்பு மௌலி கண்டிப்பா உங்க வாழ்த்துகளைச் சொல்கிறேன்
கேட்டுக் கொண்டேன்!!
துபாய் ராஜா said...
நானானி அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
துபாய் ராஜாவுக்கு என் வணக்கங்கள்!!
தமிழ் பிரியன் said...
நானானிம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மகனின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டேன்.
அவங்களைக் கொஞ்ச நாளாக் காணோமே அம்மா,
எங்கிருந்தாலும் No 9, west பக்கம் அனுப்பி வைங்கம்மா.
கொஞ்சம் பிஸியாகவும் இணைய தொடர்பு துண்டிக்கப் பட்டதாலும் சொந்த வீட்டுக்கே வரமுடியவில்லை. ரொம்ப தேடீட்டயா செல்லம்?
வல்லிசிம்ஹன் said...
அன்பு துபாய் ராஜா, அன்பு தமிழ்ப்பிரியன், இணைய இணைப்பு கிடைத்ததும்
மீண்டும் எழுதுவார்கள்.
தற்காலிகமாக ஒரு தொடர்பு கிடைத்தது. எனவே இப்பதிவு.
நான் தொலைபேசியில் சொல்கிறேன்.
சொன்னாங்களே!!!
கோமதி அரசு said...
நானானியை இன்று தான் நினைத்தேன்,
அவர்களுக்கு100 வயது.
ஆஹா! நூறு வயதா..?! அம்மாடியோவ்!!
கோமதி அரசுவின் முதல் வருகை வாழ்த்துக்களோடு வருகிறது. நன்றி!!
சேரீ.....என்னை எதற்காக அன்று நினைத்தீர்கள்? அத்த சொல்லவில்லையே?
நானானிக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
நன்றி!! கோமதி அரசு!!
முத்துலெட்சுமி/muthuletchumi said...
வாழ்த்துக்கள்.. :)
நன்றிகள்!!
கவிநயா said...
நானானி அம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
கவிநயாவுக்கு என் அன்பு!!!
(பூ ரொம்ப அழகா இருக்கு வல்லிம்மா! பிள்ளையார்/லக்ஷ்மி படமும் கண்ணை பறிக்குது!)
வெண்மை நிறத்தில் (என் மனசு போல்!!!!????) பளிச்சென்றிருக்குது.
மற்றும் பதிவைப் படித்துவிட்டு எனக்கு தகவலும் வாழ்த்துக்களும் போனில் சொன்ன துள்சிக்கும்
வருடாவருடம் தவறாமல் வாழ்த்துவது போல் இந்தவருடமும் வாழ்த்தி "மீ த ஃபஸ்டா?" என்று பதிவுலக மொழியில் கேட்டு உறுதி செய்து கொண்ட அன்பு மருமகள் ராமலக்ஷ்மிக்கும்
நேரில் வந்து வாழ்த்தி பரிசளித்த என் இரு சகோதரிகளுக்கும்
எதேச்சையாக பிறந்தநாள் அன்று சிகாகோவிலிருந்து என்னை போனில் அழைத்து வேறு விஷயங்கள் பேசிக்கொண்டிருந்த அன்பு சகோதரன் சகாதேவனிடம் ,"இன்று என் பிறந்தநாள்..வாழ்த்தத்தான் அழைத்தாய் என்று நினைத்தேன்." என்று அவரை திகைக்க வைத்து வாழ்த்துக்களை அவர் வாயிலிருந்து பிடுங்க வைத்த சகாதேவனுக்கும்
அழகான ஒரு புடவையை கிஃப்ட் பார்சல் செய்து, "ஆப்பி ஆப்பி ஆ தூ தூ யூ!"(ஹாப்பி பர்த்டே டூ யூ வாம்) என்று பாடி வாழ்த்தி என் கைகளில் தந்த என் செல்லப் பேரன் ஷன்னுவுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்!!!!!!!!!!!!!! இந்நினைவுகள் என்றும் பசுமையானவை.
பிலேட்டட் வாழ்த்துக்கள் போல் இது பிலேட்டட் நன்றிகள்!!!!!
பிகு:
குடும்பத்தில் எதிர்பாராத கடமைகள் என்றேனே? அதை உங்களோடும் பகிர்ந்து கொள்ள வேண்டாமா? ரங்கமணிக்கு ஒரு பை-பாஸ் சர்ஜரி போன மாதம் நடந்தது. அதனால்தான் பதிவுப் பக்கம் வரமுடியவில்லை. இப்போது நலமுடன் இருக்கிறார். இனி அப்பப்ப வருவேன்.
Monday, July 20, 2009
தேடி வந்த விருதுகள்...வழங்கிய வள்ளல்கள்
இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!!!

நிறைய பதிவர்களின் பதிவுகளில் இந்த விருதுகளைப் பார்த்திருக்கிறேன். இப்ப நான் யாரைன்னு தேடுவது?
காற்று
ராஜா/KVR
வெடிவால்
அ.மு.செய்யது
இந்நால்வருக்கும் இந்த இரண்டு விருதுகளை வாரி வாரி வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
Saturday, July 18, 2009
சூப்பர் சிங்கரா...? பெக்கர் சிங்கரா...? பரிதாபம்!
சிறுவன் ஒருவன் பாட வருகிறான்...பாடி முடித்ததும் சிகப்பு விளக்கு எரிய ரிஜெக்ட் செய்யப்படுகிறான். ஓகேன்னு கம்பீரமாக வெளியேறினால் வெற்றி தோல்வியை சமமாக எடுத்துக்கொண்டான் எனலாம். மாறாக, "மேம்..மேம்..இன்னொரு சான்ஸ் கொடுங்க..ப்ளீஸ்! இம்முறை நன்றாகப் பாடுகிறேன்" என்று கெஞ்சுகிறான். ஜட்ஜோ..."சாரிடா..கண்ணா! இன்னும் நிறைய பேர் காத்துக்கொண்டிருக்கிறார்களே!!அடுத்த முறை நல்ல ப்ராக்டீஸ் செய்துவிட்டு வா!" என்று வழியனுப்புகிறார்கள்.
அடுத்ததாக ஒரு சிறுமியும் அவளது அம்மாவுமே பாடுமிடத்துக்கு வருகிறார்கள். அம்மா இல்லாமல் பாட வராது போலும். அவளும் ரிஜெக்ட் செய்யப்பட இம்முறை அம்மாவே குய்யோ முறையோ என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார். "வீட்டிலே நல்லாத்தான் பாடினாள். இப்போ மறுபடியும் பாடுவாள் பாருங்கள்...!" அனுமதியில்லாமலே மகளைப் பாடச் சொல்கிறார். என்ன...என்ன...இது? என்ன வகையான போட்டியிது?
குழந்தைகளை பாடச் சொல்லிக்கொடுக்கும் போதே வெற்றி தோல்வியைக் கண்டு மிரளாமல், அழாமல், தைரியமாக இருக்கக் கற்றுக் கொடுப்பதும் பெற்றோர் கடமைதானே? மாறாக அவர்களே துவண்டு, குழந்தைகளையும் துவளச்செய்து.....பார்க்கும் நமக்கும் கண்றாவியாய் இருக்கிறது. எங்க போய் முட்டிக் கொள்ள..?
நம் குழந்தைகளின் திறமையின் அளவுகோல் நமக்கே தெரிந்திருக்க வேண்டும். இந்த அளவில் ஏற்றுக்கொள்வார்களா...மாட்டார்களா..? என்பது நமக்கே தெரிந்திருக்க வேண்டும்.
இதை விட வேடிக்கை....பால்மணம் மாறா குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வந்து,
வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால், "கண்ணா! மாமாக்கு "அடியே கொல்லுதே! பாடிக்காட்டு!" என்போமே அந்த ரீதியில் சில பிஞ்சுகள் பாடும்போது,அதுவும் போட்டிக்களத்தில், நமக்கு பாவமாயிருக்கும்.
பெற்றவர்களின் பேராசை, குழந்தைகளின் மனத்தை எவ்வளவு தூரம் காயப் படுத்தும் என்பதையும் அவர்கள் உணரவேண்டும்.
அந்தக்காலம் போல் இல்லை...இப்போது குழந்தைகளுக்கு நிறைய, விதவிதமான எக்ஸ்போஷர்கள் இருக்கின்றன. முறையான சமயத்தில் தெளிவான திறமையோடு மேடையேற்றலாமே? வேண்டும் கொஞ்சம் பொறுமை!!!!!
இதையெல்லாம் பாக்கும் போது, என் ரெண்டரை வயது பேரன், "குட்டி! கண்களிரண்டால்..பாடு!" என்றதும் "நுன்னுனி..நுன்னுனி..." என்று மழலையில் ரொம்ப ரசித்துப் பாடுவான். அவனுக்குப் பிடித்த பாட்டு.
அடுத்தவார சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டிக்கு
அவனை அழைத்துப் போகட்டா.........?
Tuesday, July 14, 2009
ஜூலை பிட்- நினைவிடங்கள்.
அம்மையிலிருந்தே ஆரம்பிக்கலாம்..



Monday, July 13, 2009
House wife- ம் Computer Programmer-ம்
விஜயா கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு நல்ல வேலையில் இருக்கிறாள்.
பேஸிக் மொழியை விளக்கிக் கொண்டிருக்கிறாள். சுதாவும் கவனமாக கேட்டுக் கொள்கிறாள்.
"இப்ப நீ கடைக்குப் போய் ஐஸ்கிரீம் வாங்க வேண்டும் என்று வைத்துக் கொள். அப்ப என்ன செய்வாய்?"
"ஓயிப் போய் ஐகீம் வாங்கணும்" என்று அவள் மூன்று வயது தம்பியைப் போல் மழலையில் சொன்னாள்.
விஜயா சிரித்துக் கொண்டே....'சரி..அதுக்கு முன் என்னல்லாம் செய்வாய்? யோசி!'
'ங்ஏஏஏஏஏ' என்று விழித்தாள். நானே சொல்றேன்.
முதலில் கடைக்குப் போகிறாய் அதனால்;
1) நல்ல ட்ரெஸ் பண்ணிக்கணும்.
2) ஹாண்ட் பாகில் தேவையான பணம் எடுத்துக்கணும்.
3) கடையிருக்கும் தூரத்துக்கேற்ப, காரிலோ ஆட்டோவிலோ பஸ்ஸிலோ அல்லது நடந்தோ போவது பற்றி தீர்மானிக்கணும்.
4) அவ்வளவு தூரம் போகும் போது வேறு ஏதாவது வேலைகள் உள்ளனவா?என்று யோசித்து அதுக்குத் தேவையானவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
5) வீட்டைவிட்டு கிளம்பும் போது க்யாஸ்,லைட், ஃபான், டிவி இவற்றை மறக்காமல் ஆஃப் செய்துவிடவேண்டும்.
6) பூட்டு சாவியை எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டி சாவியை பையில் போட்டு காலில் செருப்பை மாட்டி கடைக்குப் போக வேண்டும்.
7) கடைக்குப் போய் தேவையான ஐஸ்கிரீம் வகையை தெரிவு செய்ய வேண்டும்.
8) உரிய பணத்தைக் கொடுத்து....ஒன்று..ஐஸ்கிரீமை அங்கேயே சாப்பிட வேண்டும். அல்லது உருகாதபடி பாக் செய்து வீடு வந்து, சாவியை வைத்துப் பூட்டைத் திறக்கணும்
9) கதவைத் திறந்து செருப்பைக் கழற்றி விட்டு உள்ளே போய் நிதானமாக ஐஸ்கிரீமை ரசித்து சாப்பிட வேண்டும்.
ஐயோ!!!எனக்கு ஐஸ்கிரீமே வேண்டாம்! என்று கூவினாள் காதிரெண்டையும் கைகளால் பொத்திக்கொண்டு. ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு இந்தப் பாடா?
இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டே வந்த அம்மா, "அட! அப்ப நானும் கூட ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர்தானோ?"
எப்படி அம்மா சொல்ற?
பின்ன? நானும் காலையில் எழுந்து ப்ரஷ் பண்ணி, முகம் கழுவி, காப்பிக்குத்தண்ணி வச்சுட்டு, அது கொதிக்கு முன் வாசல் தெளித்து கோலம் போட்டு, டிக்காஷன் போட்டு,பால் காய்ச்சி, காலை டிபன் ரெடி பண்ணி, மதியத்துக்கு உங்களுக்கு சாப்பாடு ரெடி பண்ணி, அதை டிபன் பாக்ஸில் போட்டு, தண்ணீர் பாட்டிலும் சேர்த்து கூடையில் தயாராக எடுத்து வைத்து, இடையில் உங்கள் கூவல்களுக்குப் பதில் சொல்லி,அப்பாவையும் விஜயாவையும் ஆபீஸுக்கும் சுதாவை ஸ்கூலுக்கும் அனுப்பிவிட்டுத்தானே என்னோட ப்ரோக்ராம் ரன் ஆகி எண்ட் ஆகுது?
கேட்டுக் கொண்டே வந்த அவள் தம்பி சங்கரன், "அக்கா! நீ ப்ரோக்ராமர் மட்டும் இல்லை.
அனாலிஸ்டும் நீயே! டீம் லீடும் நீயே! ஏன்? ப்ராஜெக்ட் மேனேஜரும் நீயே!!" என்றான்,
சரஸ்வதி சபதம் படப் பாடல் மாதிரி.
"நதி நீயே!"
கடல் நீயே!"
அக்கா! இனி நீ ஹவுஸ் வெய்ஃப்தான் என்று சொல்லாதே! நீதான் எல்லாம்.
உண்மைதானே? குடும்பத்தின் அச்சாணி அதன் தலைவிதானே?
ஒரு நாள்...ஒரே நாள் அவள் வேலைகளை அவள் துணையில்லாமல் பிற அங்கத்தினர்கள் யாராவது செய்து பார்க்கட்டுமே!!
"சீதா! உப்பு டப்பா எங்கிருக்கு?...பால் கார்ட் எங்க வெச்சிருக்கே? இப்படிப் பட்ட கேள்விகள்தான் பறக்கும்.
Tuesday, July 7, 2009
சரியாக கேட்கப் பட்ட கேள்வி! இப்ப பதில் சொல்லலாமா?
போன பதிவில் விளக்கமாக கேட்கப் படாமல் நான் சொதப்பியதின் விளைவு......பலர் பலவிதமாக புரிந்து கொண்டு பலவிதமான பதில்களை பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்.
கேள்வி இதுதான்:
சினிமா பத்திய ஒரு கேள்வி..... கேக்கலாமா?1950-களிலிருந்து இன்று வரை படத்தின் டைட்டில்களில் தவறாமல் இடம் பெறும்....."டெக்னீஷியன்கள்" பெயர்கள், (திரை மறைவில் படம் நன்றாக ஓட, இவர்களது பணி இன்றியமையாதது) குறைந்த பட்சம் மூன்று(எனக்கு அவ்வளவுதான் தெரியும்) பேர்களைச் சொல்லமுடியுமா? இவர்களது பணியின் முக்கியத்துவம் இப்போதுதான் உணரப்படுகிறது. விருதுகளும் வழங்கப் படுகின்றன.
இதுதான் சரியான கேள்வி. இப்போது புரிகிறதா?
இன்னும் உங்களை குழப்ப மனமில்லை.
சரி, நான் மூன்று பெயர்களை சொல்கிறேன். அவர்கள் எந்தத் துறையைச் சார்ந்தவர்கள், என்றாவது சொல்ல முடியுமா?
T.S. ரங்கசாமி
J.J. மாணிக்கம்
சுந்தரலிங்கம்
எனக்குத் தெரிந்தவரை இம்மூவரும் ஐம்பது வருடங்களாக அவர்தம் சார்ந்த துறைகளில் இன்றும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். படம் பார்க்கப் போனால் டைட்டிலிலிருந்தே பார்க்கப் பிடிக்கும். டைட்டிலை கவனமாகப் பார்ப்பேன். இதை வைத்து எல்லோரையும் ஒரு புரட்டு புரட்டலாமே என்று எண்ணியதன் விளைவுதான் இப்பதிவு.
Monday, July 6, 2009
அது எப்படிங்க...? இப்படி?
இன்னா பிரியணும்? சொல்லுமே! பிரியவெக்கரேன்.
சில விஷயங்களை இந்த சினிமா டைரக்டர்கள் ஏன் கவனத்தில் கொள்வதில்லை? இல்லை, உதவி டைரக்டர்களும் எடுத்து சொல்வதில்லை...பயமா?
கண்ணை உறுத்தும் இம்மாதிரியான சில சமாச்சாரங்களை பகுந்துக்கிறேன்.
அறுபதுகளிலிருந்து இன்றுவரை மனதில் உறுத்திக் கொண்டும் ஓடிக்கொண்டுமிருக்கிறது.
காதலிக்க நேரமில்லை படத்தில் பாலையா சிலித்துக்குவாரே...."என் பணமென்ன? என் அந்தஸ்தென்ன? என்று. அப்படிப் பேசும் போது அவர் தன் பிள்ளைகளுடன் டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அவ்வளவு
அந்தஸ்து உள்ளவரது சாப்பாட்டு மேஜையில் விதவிதமான பாத்திரங்களில் உணவு பாதார்த்தங்கள் இருக்குமா? இருக்காது. ஷூட்டிங்க்குக்காக ஏதோ ஒரு ஹோட்டலில் வாங்கி வந்த பெரிய டிபன் கேரியர் பாத்திரங்களே மேஜை மேல் பரப்பி வைக்கப்பட்டிருக்கும். அது, அப்போதே என் கண்களை உறுத்தியது. உங்கள் கண்களை...?
அடுத்து.....வீடுகள், அது பங்களாவானாலும் சரி நடுத்தர வர்க்கத்து வீடானாலும் சரி குடிசையானாலும் சரி, எது வேணானாலும் நுழையலாம் என்பது போல் திறந்தேயிருக்கும்.
வில்லன்கள் தடாலடியாக நுழைந்து கொலை செய்யவோ அல்லது தனியேயிருக்கும் ஹிரோயினை நாசம் செய்யவோ ஏதுவாயிருக்கும்.
இருவர் பேசும் ரகசியங்களை ஒட்டுக்கேக்கவும் இன்னும் எதுஎதுக்கோ வாக்காயிருக்கும். காலிங்பெல் என்பதே காலாவதியகியிருக்கும்.
குறைந்த பட்சம் நான்கு பேர் உள்ள வீடாயிருக்கும். ஆனால் நார்மலாகவோ அல்லது கொடுமைக்கார மாமியாராலோ, கிணற்றடியில் கழுவ பரத்திக் கிடக்கும்
பாத்திரங்களோ?...நம்ம கடோத்கஜன் சாப்பிட்டு முடித்த பாத்திரங்கள் போல் அண்டா குண்டாவாக இருக்கும். கொஞ்சம் லாஜிக்கை யோசித்துப் பார்த்தால் அது ஓங்கி உதைத்திருக்காது?
காதலர் இருவர் ரெஸ்டொரண்ட்க்குப் போவார்கள். ஒரு இட்லி வடையோ, சட்னி சாம்பாரோ.... ஒரு ஃபலூடாவோ அட! ஒரு சாதாரண ஐஸ்கிரீமோ ஆர்டர் செய்வார்களோ என்று பார்த்தால்...பிஸ்சாத்து, ' கூல்ட்ரிங்!' என்று கேட்பார்கள். ஃபாண்டாவோ பெப்ஸியோ பாட்டிலை உடைத்து வைக்கோலைப் போட்டுத் தருவான் சர்வர்.
அடப்பாவிகளா! இதை எந்த பெட்டிக்கடையிலும் கேட்டாலும் தருவான்களே!!
சரி வீடுகளுக்குப் போனால் உபசாரம் என்ற பேரில் காலி தம்ளாரையோ கப் ன் சாசரையோ காபி என்று நீட்டுவார்கள். அதை சிப்பிவிட்டு எடுக்கும் போது
உதடு காய்ந்தவாறு இருக்கும், தொண்டையில் ட்ரக் இறங்கிய சுவடே தெரியாது.அட்லீஸ்ட் தண்ணீரையாவது ரொப்பிக் கொடுக்கக் கூடாதா?
ஆபீஸில் வேலை செய்யும் நாயகனுக்கு நாயகியோ அல்லது வேலையாளோ ஐந்தடுக்கு டிபன் கேரியரில் சாப்பாடு கொண்டு போவார்கள். இது மாதிரி சமயங்களில் நாம் என்ன செய்வோம்?
கேரியரில் இருக்கும் குழம்பு, ரசம் இவைகள் சிந்தாமல் மெதுவாக தூக்கி மேஜைமேல் வைப்போம். ஆனால்...இங்கோ? அனாயாசமாக சொய்ய்ய்ய்ய்ய்ன்னு தூக்கி மேஜைமேல்
'டங்' என்று வைக்கப்படும். 'டங்' என்றால் காலிப் பாத்திரம் என்று அர்த்தம். கேலிக்கூத்து என்றால் இதுதானோ?
படத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரம் கோபித்துக்கொண்டோ....கெட்வுட் என்று சொல்லப் பட்டோ வீட்டைவிட்டு வெளியேறுகிறது என்று வைத்துக்கொள்வோம், ஒரு சின்ன சூட்கேஸ் அல்லது ஒரு ஒரு பை எடுத்து கட்டிலில் மேல் போட்டு பீரோவில் ஹங்கரில் தொங்கும் நாலு பாண்ட் சட்டையோ அல்லது நாலு புடவையோ(ஜாக்கெட் வேண்டாம் போல) அள்ளி திணித்துக்கொண்டு ஜிங்ஜிங் என்று வெளியேறிவிடுவார்கள். மற்ற இன்னர் உடுப்புகள், பெஸ்ட் பிரஷ் மற்றும் கை செலவுக்குப் பணம் இதெல்லாம் பின்னாலேயே யாராவது கொண்டு வருவார்களோ?
வெளியூரிலிருந்து ரெண்டு மூணு லக்கேஜ்களோடு வருவார்கள். அவற்றைத் தூக்கி வரும் அழகைப் பாக்கணுமே!!! உள்ளே காற்றுதான் இருக்கும் போல. எவ்வளவு சுலபமாக எடுத்து வருவார்கள்!!!!டைரக்டர் கொஞ்சம் கவனம் செலுத்தி, கனமாக இருப்பது போல் தூக்கி வரச் சொல்லியிருக்கலாமில்ல? உதாரணம்..."புதிய வானம் புதிய பூமி...", மலையாளக் கரையோரம் தலையாட்டும் குருவி..."
இன்றைய இளம் தலைமுறை டைரக்டர்கள் இவற்றையயெல்லாம் பாத்து என்னைப் போல் நொந்து போயிருப்பர் போலும். இப்போது போலித்தனம் இல்லாமல் எல்லாம் இயல்பாகவே இருக்கிறது. உதாரணத்துக்கு சமீபத்தில் வெளிவந்த "சுப்ரமணியபுரம்" . எழுபதுகளை கவனத்தில் கொண்டு என்ன அழகாக உடைகள், பேச்சு, சுவற்றில் ஒட்டியிருக்கும் தங்கம் தியேட்டர் போஸ்டர், இடயில் சிறுவன் ஓட்டிச் செல்லும் மூணுசக்கர சைக்கிள், கதாநாயகி அணிந்திருக்கும் டாலர் செயின் என்று பார்த்து பார்த்து செதுக்கியிருப்பார்கள். படம் பாத்ததும் என் மனதில் இருந்த உறுத்தல்கள் எல்லாம் போயே போச்! சினிமா இனி இயல்பாயிருக்கும் என்ற நம்பிக்கையும் வந்தாச்!
சினிமா பத்திய ஒரு கேள்வி..... கேக்கலாமா?
1950-களிலிருந்து இன்று வரை படத்தின் டைட்டில்களில் தவறாமல் இடம் பெறும்....."டெக்னீஷியன்கள்" பெயர்கள், (திரை மறைவில் படம் நன்றாக ஓட இவர்களது பணி இன்றியமையாதது) குறைந்த பட்சம் மூன்று(எனக்கு அவ்வளவுதான் தெரியும்) பேர்களைச் சொல்லமுடியுமா? இவர்களது பணியின் முக்கியத்துவம் இப்போதுதான் உணரப்படுகிறது. விருதுகளும் வழங்கப் படுகின்றன.
எனக்குத் தெரிந்ததை நாளை சொல்லவா?
Thursday, July 2, 2009
நலங்கெட புழுதியில்....உரையாடல் சிறுகதை பாகம் மூன்று.
ஹிந்தோள ராகத்தில் பஞ்சமத்தை சேர்த்தாற்போல் அபசுரமாக ஒலித்த அவள் வாழ்கையில் அவளாக இருந்த நேரங்கள் அவள் தன் அறையில் அழித்த காலங்கள்தான்.
முதுமை வரவர அதற்குத்தேவையான நோய்களும் அவளை அண்ட ஆரம்பித்தன. ஆஹா! இவைகளாவது தன்னிடம் வருகிறதே என்று அற்ப சந்தோஷமடைந்தாள் ஜெயா.
ஸ்ரீனிவாசன் அந்த குறையெல்லாம் வைக்கவில்லை. முறையான வைத்திய பரிசோதனைகள் நடத்தி, தேவையான மருந்துகள் வாங்கிக்கொடுத்து கவனித்துக்கொண்டான்.
ஆனால் உள்ளுக்குள்ளேயே புழுங்கிக்கொண்டிருந்த அந்த இதயம் ஒரு நாள் தன் துடிப்பை நிறுத்திக் கொண்டது. குழந்தைகள் ராஜுவும் சித்ராவும் ஆடித்தான் போனார்கள். இழப்பிலேதானே அருமை தெரியும்!
எந்த உறுத்தலும் இல்லாமல் மகன் ராஜுவைக் கொண்டு அவள் கடைசி காரியங்களை செய்து முடித்தான்.
ஒரு வாரம் கழித்து ராஜுவையும் சித்ராவையும் அழைத்துக்கொண்டு ஜெயாவின் அறையைத் திறந்தான். படுசுத்தமாக நேர்த்தியாக அது அது இருக்கவேண்டிய இடத்தில் இருந்தது அவளது அறை.
பெரிய மேஜை, மேஜை விளக்கு, எழுதும் பாட், பேனாக்கள், கத்தை கத்தையாக எழுதாத பேப்பர்கள். மேஜை ட்ராயரைத்திறந்தார்கள்.....அங்கே அழகாக தொகுக்கப்பட்டு , ஐந்தாறு பைல்கள் இருந்தன.
தாயின் ரத்தமும் ஓடியதால் ராஜுவுக்கும் சித்ராவுக்கும் இயல்பிலேயே சங்கீத ஞானம் இழைந்து ஓடியது.
பைல்கள் ஒவ்வொன்றாக படித்துப் பார்த்தார்கள். வா...வ்!!! அத்தனையும் பொக்கிஷங்கள்!! பலவகையான ராகங்களைக் கலந்து எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை, அமிர்தவர்ஷிணி ராகத்துக்கு மழை பெய்யுமா? அது எப்படி? என்ற விளக்க உரை. சங்கீத மும்மூர்த்திகளையும் அவர்களது கீர்த்தனைகளையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட மற்றொரு ஆராய்ச்சிக் கட்டுரை...இப்படி அள்ள அள்ள குறையாத அட்க்ஷய பாத்திரம் போல் வந்து கொண்டேயிருந்தது. பிள்ளைகள் மனமெல்லாம் பொங்கிப் பூரித்தது, அம்மாவின் திறமைகளை கண்கூடாக கண்டபோது. இறுதியாக ஒரு டைரி! தனது அவல வாழ்கையையும் அணுஅணுவாக ரசித்து எழுதியிருந்தாள்.
படித்துவிட்டு முகமும் கண்களும் சிவக்க தாயின் தெய்வீகத்தை தரிசிக்க விடாமல் மறைத்த தந்தையை ஏறிட்டார்கள். அவற்றின் உஷ்ணம் தாளாமல் தலையை குனிந்து கொண்டான். இனி அவன் தலை நிமிரவே முடியாது.
வாழும் போது தாயின் அருமை பெருமை தெரிய மாட்டாமல் வளர்ந்த தங்கள் விதியை நொந்து கொண்டு குமுறி அழ ஆரம்பித்தார்கள். தேற்ற வந்த தந்தையை வெறுப்போடு உதறித் தள்ளினார்கள்.
இனி ஜெயாவின் அறை ஸ்ரீனிவாசனுக்குத்தான்.
உடலால் புழுதியில் கிடந்த தாயின் நினைவுகளை தூசிதட்டி எடுத்து கோபுரத்தில் ஏற்றி வைத்து கும்பாபிஷேகமும் நடத்தி கண்களில் கண்ணீர் வழிய அம்மாவின் ஆத்மாவுக்கு அமைதியையும் தந்து அஞ்சலி செய்தார்கள்.
நலங்கெட புழுதியில்...உரையாடல் சிறுகதை பாகம் இரண்டு
உற்றார் உறவினர் வாழ்த்த செல்வன் ஸ்ரீனிவாசன் செல்வி ஜெயலக்ஷ்மியின் கரம் பிடித்தான்.
பிடி சரியான கிடுக்கிப் பிடி.
திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குள் ஜெயா நுழைந்து ஒருவாரம் நன்றாகவே சென்றது.
ஒரு நாள்..
'அம்மா ஜெயா! உன்னைத் தேடி யாரோ வந்திருக்கா பார்!' மாமனார் அழைத்தார்.
'இதோ வரேன் மாமா!' என்றபடியே மாடியிலிருந்து இறங்கி வந்தாள். அன்றிலிருந்து ஆரம்பித்தது இறக்கம்.
வந்தவர் சபா செகரட்டரி. 'அம்மா! வரும் 28-ம் தேதி வாணிமகாலில் கச்சேரி இருக்குது. ஞாபகப் படுத்தான் வந்தேன்.'
'நல்ல நினைவிருக்கு ஸார்! கட்டாயம் வந்திடுவேன்.' என்று உறுதியளித்தாள் வழக்கம் போல். வழக்கம் இப்போது மாறியிருப்பதை அறியாதவளாக.
குடுகுடுவென்று மாடிக்கு ஓடினாள். ஆசையாக கணவனைப்பார்த்து, 'ஸ்ரீ!' என்றளைத்தாள் செல்லமாக. விருட்டென்று திரும்பினான். அவன் முகபாவத்தை கவனிக்காதவளாக, 'ஸ்ரீ! நாளன்னைக்கு
எனக்கு கச்சேரி இருக்கு. வழக்கமாக அம்மாதான் எனக்கு புடவை நகை செலக்ட் பண்ணித் தருவாள். இனிமே நீங்கதான் எனக்கு செலக்ட் பண்ணணும்.' என்றாள் முகமெல்லாம் மகிழ்ச்சியாக.
ஸ்ரீனிவாசன் இந்த உற்சாகத்தை உடனே உடைக்க வேண்டாம் என்று எண்ணினானோ என்னவோ?
'உனக்கு எது பிடிக்குதோ அதையே போட்டுக்கொள்.' என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.
மாலையில் ஆபீசிலிருந்து போன் செய்து, 'ஜெயா! எனக்கு நிறைய வேலையிருக்கு. நீ அப்பா அம்மா கூட கச்சேரிக்குப் போய்வா.' என்று தன்மையாக சொல்லிவிட்டான்.
'மகளே! வீட்டுக்கு வா, உனக்கு கச்சேரி அங்கிருக்கு.' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
இரவு வீடு திரும்பியதும் அம்மா, 'சீனி! நீயும் வந்திருக்கணும். என்ன அருமையா பாடினாள் தெரியுமா!'
'சரி சரி எனக்கு தூக்கம் வருது. படுக்கப் போறேன்.' என்று ரூமுக்குள் சென்று விட்டான்.
மூவரும் சாப்பிட்டு முடித்தவுடன் ஜெயா மாடிக்குச் சென்றாள். அங்கு...தூக்கமாவது ஒண்ணாவது! கட்டிலில் கொட்டகொட்ட விழித்திருந்தான், மகா கனம் பொருந்திய ஸ்ரீமான் ஸ்ரீனிவாசன்!!
'ஜெயா! இப்படி வா! இந்த கச்சேரி கிச்சேரி எல்லாம் இன்றோடு விட்டுவிடு. எனக்கு இதெல்லாம் பிடிக்கலை. பொண்டாட்டியா லட்சணமா வீடோடு இருந்து வீட்டையும் என்னையும் கவனித்தால் போதும்! முதல் தடவையானதால் சம்மதித்தேன். இனிமேல் இதெல்லாம் வேண்டாம். கச்சேரியில் உன் பாட்டைக் கேக்க பத்து பேர் வந்தால் உன் அழகை ரசிக்க நுறு பேர் வருவான்கள்.' என்று தன் வக்கிர மனத்தையும் முகத்தையும் ஒரு சேரக் காட்டினான்.
வானத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென்று கடலில் விழுந்தாற்போல், பெரிய சுனாமி வந்து தன்னை சுருட்டிக் கொண்டு போனாற்போல், வானமே இடிந்து தலையில் விழுந்தாற்போல், இன்னும் என்னவெல்லாமோ போல் உணர்ந்து விக்கித்து செய்வதறியாது நின்றாள் பாடும் அந்தக் குயில்! ஆகாயத்தில் சுதந்திரமாக பறந்துகொண்டிருந்த அக்குயிலின் விரிந்த இறக்கையிலிருந்து பிடுங்கியெறியப் பட்டது முதல் இறகு.
பிறந்ததிலிருந்து அச்செல்ல மகளுக்கு நினைத்தெதெல்லாம், கேட்டெதெல்லாம் கிடைத்தது. எதையும் போராடிப் பெற வேண்டிய அவசியமில்லாமலிருந்தது. எனவே எதிர்த்துப் பேச அறியாத அப்பாவை
அடங்கினாள். அது அக்காலமாதலால் அது சாத்தியமானது. இப்போனா...? பிடி டைவோர்ஸ்! என்று பிறந்தகம் ஏகியிருப்பாள்.
அடுத்த ப்ரோக்ராம் வந்தபோது இவளே முந்திக்கொண்டு போன் செய்து, 'உடம்பு முடியவில்லை. தயவு செய்து கான்சல் செய்துவிடுங்கள்.' என்று சொல்லிவிட்டாள்.
அறைக்குள் நடந்தது தெரியாத மாமியார், ' என்னம்மா? நல்லத்தானே இருக்கே! ஏன் வரலைன்னு சொன்னாய்?' என்று கேட்டுக் கொண்டிருந்தபோது, அங்க வந்த ஸ்ரீனிவாசன், 'அம்மா! நாந்தான் இனிமே கச்செரிக்கெல்லாம் போகவேண்டாமென்று சொல்லிவிட்டேன்.' என்றான். முதல்முதல் அவள் கச்சேரியை கேட்ட போது அவளுக்குக் கிடைத்த பாராட்டுகளும் புகழாரங்களும் பரிசுகளும் அவன் மனதில் அசூயை அரக்கனையும் பொறாமை சாத்தானையும் வலிய வரவழைத்து இருத்திக்கொண்டான். எங்கே விட்டால் தன்னை விட பேர் வாங்கிவிடுவாளோ என்ற அகங்காரம் ஆட்டிவைத்தது. விளைவு? குயிலைப் பிடித்தான் கூட்டிலும் அடைத்தான் ஆனால் பாட மட்டும் சொல்லவில்லை.
கலையரசியை வீட்டுக்காவலில் வைத்ததுக்கு சங்கீத உலகமே அவனை சபித்தது. எதைப்பற்றியும் அவன் கவலைப் படவில்லை.
காலம் ஓடியது ஆணொன்றும் பெணொன்றுமாக குழந்தைகளும் பிறந்தன. பத்து வயது வரை 'அம்மா அம்மா!' என்று தன் காலைச் சுற்றிவந்த குழந்தைகளை 'அம்மாவுக்கு ஒண்ணூம் தெரியாது.' என்று சொல்லிச் சொல்லி அவர்கள் மனங்களிலும் விஷ விதைகளை விதைத்தான். அவள் இறக்கைகளிலிருந்து ஒவ்வொரு இறகாக விழவாரம்பித்தன. விபரமறியாத குழந்தைகள் தந்தை சொல் மந்திரமோ என்று விதைத்த விதைகளுக்கு தண்ணீர் ஊற்றின....உரமிட்டன. அன்று முதல் குழந்தைகளுக்கும் தாய்க்குமிடையே பெரும் பள்ளம் விழுந்தது. அம்மா என்றால் நமக்கு வேண்டியதைச் செய்யவும் உணவு சமைத்துத் தரவுமே படைக்கப் பட்டவள் என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்தது.
ஜெயாவும் தன்னை மறந்து, தன் நாமம் கெட்டு வாழப் பழகிக்கொண்டாள். காலையில் வேலைகள் முடிந்து தன் அறைக்குள் சென்று முடங்கிக் கொள்வாள். மாலையிலும் அப்படியே. அங்கு அவள் என்ன செய்கிறாள் என்று யாருக்கும் தெரியாது, தெரிந்துகொள்ள அக்கறையுமில்லை.
தொடரும்
Wednesday, July 1, 2009
நலங்கெட புழுதியில்....(உரையாடல்- சிறுகதை) பாகம் ஒன்று
நலங்கெட புழுதியில்....
'ஜெயா! மோகன ராகத்துக்கு நிஷாதம் உண்டா? உண்டு என்கிறேன் நான், இல்லை என்கிறான் என் சிநேகிதன் முரளி. நீ சொல்லு.' என்று சமையற்கட்டிற்கு ஓடிவந்தான் ஜெயாவின் கணவன் ஸ்ரீனிவாஸ்.
'கிடையாதுங்க மோகனத்துக்கு மத்தியமும் நிஷாதமும் கிடையாது. அவர் சொல்வதுதான் சரி.' என்றாள் ஜெயா மெதுவாக. உர்ர்ர்ர்ர்ரென்று முகம் வைத்துக் கொண்டு திரும்பினான்.
மற்றொருநாள் இதேபோல் ஓடிவந்தான் சமையலறைக்குள். 'ஜெயா! தாளவகைகளில் சிரமமான தாளம் எது?' வழக்கம் போல் மெல்லிய குரலில், 'அடதாளம்ங்க.' என்று நிறுத்திக் கொண்டாள்.
இது வழக்கமாக அவர்கள் வீட்டில் நடக்கும் ஒரு நாடகம். ஆம் நாடகம்தான். வரும் விருந்தினர் முன்னிலையில் தான் ஒரு சங்கீத ரசிகன் என்று காட்டிக்கொள்ள, சங்கீத சம்பந்தமான உரையாடலில் வரும் சந்தேகங்களை கிச்சனில்....கிச்சனிலேயே இருக்கும் ஜெயாவிடம் வந்து சந்தேகம் கேட்பதும் அவளும் கிசுகிசுத்த குரலில் அவன் கேள்விக்கு மட்டும் விடையளித்து விட்டு மௌனமாவதும் அடிக்கடி நடக்கும் நாடகம்.
ஏன் ஜெயாவும் விருந்தினரோடு அமர்ந்து உரையாடவில்லை? இந்த கேள்விக்கு நாம் சுமார் இருபத்தைந்து வருடங்கள் காலச்சக்கரத்தை பின்னோக்கி உருட்ட வேண்டும்.
ஜெயா சமையலறை சுவரில் சாய்ந்து மனச்சக்கரத்தை இருபத்தைந்து வருடங்கள் பின்னோக்கி உருட்டினாள்.
'ஜெயா! இன்னிக்கி உன் கச்சேரி மேடையிலேயே நீ பாடும் போதே உன்னைப் பெண்பார்க்க வருகிறார்கள், மாப்பிள்ளையும் அவர் அப்பா அம்மாவும்.' என்று பெருமையோடு சொன்னாள் அம்மா.
'அம்மா! கச்சேரியிலா..அதுவும் பாடும் போதா....?' சிணுங்கினாள்.
'அவர்களுக்கும் நேரமில்லை...உனக்கும் நேரமில்லை. எங்களுக்கும் வேறு வழி தெரியவில்லை'
ஜெயாவும் வேறு வழியில்லாமல் சம்மதித்தாள்.
நாரதகான சபாவில் கச்சேரி. ஜெயா அப்போது பிரபலமான கர்நாடக சங்கீத பாடகியாக பரிமளித்துக் கொண்டிருந்த நேரம். டிசம்பர் ஜனவரி விடாத ப்ரோக்ராம்கள். அது முடிந்ததும் திருவாரூர் பயணம். அது முடிந்து சிறிது ஓய்வு. பிறகு மே மாதம் முதல் ஜூலை வரை வெளிநாட்டு கச்சேரிகள். இப்படி ஒளிர்ந்து கொண்டிருந்தது அவளது கலை.
நாரதகான சபாவில் கச்சேரி ஆரம்பித்து அரைமணி நேரமாயிற்று. கரகரப்பிரியாவில் சக்கனிராஜாவை கலகலப்பாக்கிக் கொண்டிருந்தாள். அப்போது கடகடவென்று சபையில் நுழைந்து முதல் வரிசையில் ரிசர்வ் செய்திருந்த ஆசனங்களில் அமர்ந்தனர் மூவர்.
அவர்கள்தான் கச்சேரியிலேயே பாடகியைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையும் அவனது பெற்றோரும்.
'நல்லா பாத்துக்கடா...சீனி! அப்புரம் வந்து நொள்ளை சொல்லக் கூடாது.'
'நொள்ளை சொல்ல என்னம்மா இருக்கு? கண்ணுக்கு லட்சணமா இருக்கா? அப்புரமென்ன?'
'அவ சங்கீத ஞானம் எப்படி?'
'அதப் பத்தி எனக்கென்னம்மா? அழ..காருக்கா. அது போதும்.'
இந்த உரையாடலை ஜெயாவும் அவளது பெற்றோரும் கேட்டிருந்தால்...அவளது தலையெழுத்தே மாறியிருக்கும். விதி வலியது என்று சும்மாவா சொன்னார்கள்?
பையன் நல்லாயிருக்கான், நல்ல வேலை, கை நிறைய சம்பளம், நல்ல குடும்பம், ஜெயா அதிர்ஷ்டக்காரி என்று தீர்மானித்து திருமணத்தை நிச்சயம் செய்தார்கள்.
தொடரும்
Monday, June 29, 2009
என் கேள்விகளுக்கு என் பதில்கள்!! 32 கேள்விகள்.
ஹப்பா! இன்றுதான் நேரம் வாய்த்தது. அதுவும் ஒரு மணி நேரம்தான். 'என்ன? நேரப்படிதான் எல்லாம் செய்வாயோ?' என்றது மனசாட்சி..தன் செவ்வாய் திறந்து. ஹி..ஹி..ச்சும்மா எல்லாம் ஒரு பில்டப்தான்.
வாருங்கள் கேள்விகளுக்குப் போவோம். கேள்வியை நீ கேட்கிறாயா..அல்லது நான் கேட்கவா?
'மடச்சி! ரெண்டுமே நீதாண்டி!' என்றது மறுபடியும் உட்குரல். சேரி...சேரீ..!
1. உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
அந்தக்காலத்தில் நாமிருவர் நமக்கிருவர் தத்துவமெல்லாம் கிடையாது. முதல் ரெண்டு ஆண்பிள்ளைகளுக்கும் அப்பா தாத்தா, அம்மா தாத்தா பெயர்கள்...அடுத்து ரெண்டு பெண்பிள்ளைகளுக்கும் அப்பா ஆச்சி, அம்மா ஆச்சி பெயர்களை எழுதி வாங்கிக் கொண்டேதான் பிறப்பார்கள். அடுத்தடுத்து வரும் பிள்ளைகளுக்கு தெய்வங்களின் பெயர்கள். நம் நாட்டில் சாமி பேர்களுக்கா பஞ்சம்? அந்த வகையில் மூன்றாவதாகப் பிறந்த எனக்கு அம்மா ஊரான ஆழ்வார்குறிச்சியில்(சிவசைலம்) கோயில் கொண்டிருக்கும் பரம கல்யாணி அம்மனின் பேரைத்தான் நான் கொண்டிருக்கிறேன். ரொம்பப் பிடிக்கும்.
2. கடைசியாக அழுதது எப்போது?
மூன்று வருடங்கள் முன்பு அருமை சின்னக்காவின் திடீர் மறைவின் போது. இப்போதும் இரவில் கண்மூடினால் 'ஹ..லோ!' என்று அழைத்து கண்களுக்குள் வந்து நிற்பாள்.
3. உங்கள் கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
என்னக்குப் பிடிக்காம..? தலையெழுத்து எப்படியோ? கையெழுத்து நல்லாவே இருக்கும். கான்வெண்டில் ஹாண்ட்ரைட்டிங் என்று ஆங்கிலமும் தமிழும் நோட்டு நோட்டாக கை ஒடிய எழுதியது வேறு எதற்காம்?
4. பிடித்த மதிய உணவு என்ன?
பூண்டு போட்டு வத்தக் குழம்பு, சௌசௌ கூட்டு, தயிர்சாதம் பழங்கறி,சுண்டக்கீரை + மாம்பழம்!!ஊஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!
5. நீங்கள் வேறு யாருடனும் உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
மாட்டேன். அலைவரிசை ஒத்துப் போகுதா என்று கொஞ்சம் நிதானிப்பேன். காரணம் நட்பல்லவா? அது வைரம் மாதிரி பழுதோ தோஷமோ இல்லாமலிருக்கணும். என்ன நாஞ் சொல்றது?
6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடலில் முழங்கால் நனைய நிற்கத்தான் பிடிக்கும். அருவி? ஆஹா!!உச்சரிக்கும் போதே முதுகில் தொம்தொம் என்று விழுகிறதே!குற்றாலம், மணிமுத்தாறு திற்பரப்பு இந்த அருவிகளில் எல்லாம் குளிக்கப் பிடிக்கும். சீசனை மிஸ் பண்ணுகிறேனே!!
7. முதலில் ஒருவரை பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகத்தை. பின் கண்களை அவை சொல்லிவிடும் அவரது நடைஉடை பாவனைகளை.
8.உங்க கிட்டே உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காதது என்ன?
யாருக்கும் உதவி என்றால் ஓடுவது. பேசவேண்டிய நேரத்தில் பேசாமல், பிறரை எந்தவிதத்திலும் காயப்படுத்திவிடுமோ என்று நான் காக்கும் மௌனம்.
9. உங்க சரிபாதி கிட்டே உங்களுக்கு பிடித்த விஷயம் எது. பிடிக்காத விஷயம் எது?
அவர் சேர்த்து வைத்திருக்கும் நண்பர்கள் கூட்டம். வெளியே கிளம்பியதும் பர்ஸை சாவியை தேடுவது.
10. யார் பக்கத்தில் இல்லாததற்கு வருந்துகிறீர்கள்?
என் அம்மாதான்!!
11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?
க்ரீம் கலரில் ஆஷ் கலரில் பிரிண்ட் போட்ட புடவை. அஃகோர்ஸ்! மேட்சிங் ப்ளவுஸ்.
12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்கிறீங்க?
மானிட்டரைப் பார்த்து தட்டிக் கொண்டிருக்கிறேன். இன்று வாங்கிய எம்.எல். வசந்தகுமாரியின் சினிமா பாடல்கள் அடங்கிய சிடி. பாடல், 'பத்துவிரல் மோதிரம் எத்தனை ப்ராகாசம்...'
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
பச்சை நிறமே பச்சை நிறமே!!!
14. உங்களுக்கு பிடித்த மணம்
பன்னீர் ரோசாவின் நறுமணம். ஸ்ப்ரே செய்யும் பாட்டிலில் பன்னீர் கொஞ்சம் தண்ணீர் நிரப்பி வைத்திருக்கிறேன். தேவைப்படும் போது முகத்தில் ஸ்ப்ரே செய்து புத்துணர்ச்சி பெறுகிறேன்.
15. நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? அவர்களை ஏன் பிடிக்கும்? அழைக்க காரணம் என்ன?
யாரைத்தான் சொல்லுவதோ..? அநேகமாக எனக்குத்தெரிந்த பதிவர்கள் அனைவரும் பதில் சொல்லிவிட்டார்கள். திரும்ப அழைத்தால், சத்யராஜ் மாதிரி இருந்த இடத்திலிருந்தே அடிப்பார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் பாத்து நான் அழைப்பது,
ஸ்க்கிரிபிளிங் வித்யா
செல்வி சங்கர்
தமிழ்பிரியன்
இவர்களையெல்லாம் எனக்குப் பிடிக்கும். அம்புட்டுத்தான்.
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் பிடித்த பதிவு எது?
சீனா அவர்கள பின்னூட்டங்கள் இட்டே பேர் வாங்கியவர்.
புதுகைத் தென்றல் ஸேம் ப்ளட்.
சகாதேவன் நல்ல தகவல்களைத் தேடித்தேடி பொறுக்கியெடுத்து பதிபவர்.
17. உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
ஃப்ரீசெல், ஸ்க்ராபிள், கார்ட்ஸ்.
18.நீங்கள் கண்ணாடி அணிபவரா?
கழற்றாமல் இருப்பவர். (கேப்பீகளே! தூங்கும் போதும் குளிக்கும் போதும் மட்டும் கழற்றுபவர்)
19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
சிரித்து சிரித்து கண்கள் பனித்து வயிறு வலிக்கும் படியான சுத்தமான வசனங்கள் உள்ள படங்கள்(கலாட்டா கல்யாணம், மற்றும் க்ரேஸி மோகன் வசனமெழுதிய படங்கள். இவர் படங்களில் வசனங்களை ஃபாலோ செய்யாவிட்டால் சிரிக்க முடியாது.)
20. கடைசியாக பார்த்த படம் எது?
அபியும் நானும். மனதை வருடிச் சென்ற படம்.
21. உங்களுக்கு பிடித்த பருவ காலம் எது?
தென்மேற்கு பருவக்காற்று வீசும் காலம்.
22. இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் எது?
நான் ஒரு கூட்டுப் புழுங்க. புத்தகப் புழு இல்லை. கேட்டதற்காக...இன்று வந்த மங்கையர்மலர்.
23. உங்கள் டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?
நினைக்கும் போதெல்லாம்.
24. உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
மெல்லிய குழலோசை. ஒரு தகர துண்டை சுவற்றில் இழுக்கும் போது வரும் சத்தம். ஐயோ! உடம்பெல்லாம் அதிருமில்ல.
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அமெரிக்கா, கனடா.
26.உங்களுக்கு தனித்திறமை ஏதாவது இருக்கிறதா?
கொஞ்சம் வரைவேன், கொஞ்சம் பெயிண்ட் செய்வேன், கொஞ்சம் வீணை வாசிப்பேன். ஆனா முழுசா ஒண்ணுமேயில்லையே!?
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியத ஒரு விஷயம்
நாட்டு நடப்பு
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்
வெளியேயும் அதுதானிருக்கு. அது ஒரு முரட்டு சாத்தான்.
29. பிடித்த சுற்றுலா தலம்.
கொடைக்கானல். மிதமான குளிர்.
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
காலம் கடந்த கேள்வி. இப்போது போல் கடைசி வரை இருந்தாலே போதும்.
31. மனைவி/கணவர் இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்
ஷாப்பிங்.
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.
கிடைத்ததில் திருப்தி, நன்றே வரினும் தீதே வரினும் இரண்டையும் ஒன்றாகப் பாவித்து மன அமைதியோடு வாழ்வதுதான் "வாழ்வு"
ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு
ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...
-
வருந்தாதே மனமே - நீயே வருந்தாதே மனமே ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே.. வருந்தாதே மனமே இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பா...
-
என்ன தூக்குத்தூக்கி ஞாபகம் வந்துவிட்டதா? “கொண்டு வந்தால் தந்தை கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் சீர் கொண்டு வந்தால் சகோதரி கொலையும் செய்...