Saturday, July 17, 2010

கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் சகோதரி

என்ன தூக்குத்தூக்கி ஞாபகம் வந்துவிட்டதா?

“கொண்டு வந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டு வந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் பத்தினி
உயிர் காப்பான் தோழன்”

அனுபவத்தால் அறிஞர்கள் கூறும் வார்த்தைகள் பொய்யோ மெய்யோ தெரியாது
ஆனால் என்னைப் பொறுத்தவரை ரெண்டாவது வரியில் சகோதரியையும் சேர்த்துக் கொள்வதே
எனக்கு உவப்பானது. ஆம்! “கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் சகோதரி” என்றே வாழ்கிறேன். அன்பையும் பாசத்தையுமே கொண்டுவந்தால் போதுமானது.

ஆனால் சமீபகாலங்களில் என் கொள்கைக்கு பங்கம் வரும்படியான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன்.



எல்லாம் சின்னண்ணன் வீட்டு மாம்பழங்கள் செய்யும் ஜாலங்கள்.
சென்ற முறை ஊருக்குச் சென்றிருந்தபோது மதினி பச்சை மாங்காய்களாக ஏழெட்டு பையில் போட்டு கொண்டு போங்கள் என்றார்கள். ‘ஐயையோ! வேண்டாம்!” இது என் கொள்கைக்கு புறம்பானது என்று, கைக்குழந்தையோடு வந்த மேனகையைப் பார்த்து விஸ்வாமித்திரர் கொடுத்த போஸை நானும் கொடுத்தேன்.

வற்புறுத்திக் கொடுத்தமையால் அந்தப் பையும் என்னோடு ரயிலில் பயணித்தது.
வீடு வந்து சேர்ந்ததும் அப்பையை காற்றுப் புகாமல் இறுக்கி கட்டி வைத்து விட்டேன். ஒரு வாரம் கழித்து கம்மென்ற மணம் வந்தது பையிலிருந்து.
பிரித்துப் பார்த்தால் எல்லாம் அப்பழுக்கில்லாமல் பழுத்திருந்தது. ஒரு பழத்தை தோலுறித்து துண்டங்களாக நறுக்கி சுவைத்தால்......அப்பப்பா...! என்ன சுவை, என்ன இனிப்பு!!பங்கனப்பள்ளியும் ராஜபாளையம் சப்பட்டையும் தோத்தது போங்கள்!!!
இதில் வேடிக்கை என்னவென்றால் அங்கு மதினி, அண்ணனைத் தவிர யாருக்கும் மாம்பழமே பிடிக்காதாம். வீட்டிலேயே மாங்கனி இருக்க வேறு எந்தக் காயை கவரப் போகிறார்களோ? என்னடா இது மாம்பழத்துக்கு வந்த சோதனை!!!!

எங்கள் வீட்டுக்கு சின்னக்கா பிள்ளைகள் வரும் போது எல்லோருக்கும் மாம்பழம் நறுக்கி கிண்ணங்களில் போட்டுத்தருவேன், அப்போது அக்கா மகள், “சித்தி எனக்கு மாம்பழம் பிடிக்காது.” என்பாள்.

சும்மா டேஸ்ட் பாரு பிடிக்கும் என்பேன். ஆனாலும் நோன்னுடுவாள். மாம்பழம் பிடிக்காத........கூட உண்டா? என்று நினைத்துக் கொள்வேன்.
உடனே, “ஐயா...ஜாலி! என்று மற்ற பிள்ளைகள் அதை எடுத்துக் கொள்வார்கள்.

இந்தப் பழத்துக்காகத்தான் முருகன் மயிலேறி உலகத்தை சுற்றி வந்தும் கிடைக்காத்தால் கோபித்துக்கொண்டு குன்றேறினானோ? அதனால்தான் வடிவேலன் வீட்டில் இன்று மயில்கள் சுற்றி சுற்றி வந்துகொண்டிருக்கின்றனவோ? பழத்தை முருகனுக்குக் கொண்டு போய் கொடுக்க? பழம் அவ்வளவு ருசி!!!!!!!!!!!

என் கொள்கை பட்பட்டென்று தெறித்து வீழ்ந்தது. கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் சகோதரியாக இருந்த நான், இனி மாம்பழம் கொண்டு வந்தால்தான் சகோதரி என்றாகிப் போனேன். எப்படி இருந்த நான் இப்படியாகிப் போனேன்!!!

காரணம் சீசனில் மட்டுமே கிடைக்கும் மாம்பழத்துக்கு நான் அடிமை. முன்பே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன் மே, ஜூன் மாதங்களில் என் மதிய உணவு தயிர் சாதமும் மாம்பழமும் மட்டுமே!!



ஒரு ரகசியம், அடுத்தவருடம் அம்மரத்துக் காய்களை அவர்கள் தேவைக்குப் போக மீதியை நான் குத்தகைக்கு எடுத்திருக்கிறேனாக்கும்! ஹுக்கும்!!!!

Thursday, July 15, 2010

மயிலோடு விளையாடி...மயிலோடு உறவாடி!!

காடுகளிலும் வயல்வெளிகளிலும் கூண்டுக்குள் அடைபட்ட நிலையில் காட்சியகத்திலும் மட்டுமே கண்களுக்கு தென்படும் மயில்கள், இங்கே நெல்லையில் அண்ணன் வீட்டில் சர்வ சுதந்திரமாக உலா வந்து கொண்டிருக்கின்றன. இயல்பான அவைகளின் நடமாட்டம் பார்க்கப் பரவசமாயிருக்கிறது.

அதிகாலை ஆறுமணிக்கு ஆறுமுகனின் வெஹிக்கிள் வந்து தன்னை ரீசார்ஜ் பண்ணிக்கொண்டும் ஃப்யூயல் ரொப்பிக்கொண்டும் என்ஜினை ஓவராயில் பண்ணிக் கொண்டும் ஃப்ரெஷாக வலம் வருகின்றன. காரணம் அண்ணனின் கம்பெனி வொர்க்‌ஷாப் எதிர்வீட்டிலேயே இருக்கிறது.


மயிலே உனக்கனந்த கோடி நமஸ்காரம்!!!! மதனி வாரியிறைக்கும் பொட்டுக்கடலையை ஒவ்வொன்றாக கொத்தித் தின்னும் அழகே அழகு.

மழையையும் அருவியையும் வானத்தையும் தொட்டியில் நீந்தும் மீன்களையும் பார்த்துக்கொண்டேயிருந்தால் எவ்வளவு அழகோ, எவ்வளவு கண்ணுக்கு குளிர்ச்சியோ அவ்வளவு அழகு, குளிர்ச்சி!!!!



பின் வாசலுக்கு நேரே ஒரு சின்ன தொட்டியில் தண்ணீரும் ஒரு கிண்ணத்தில் அரிசியும் எப்போதும் மயில்களுக்காகவே வைக்கப் பட்டிருக்கும். வாசலில் பொட்டுக்கடலை கொறித்துவிட்டு பின்பக்கம் வந்து அதுக்கான அரிசியையும் விழுங்கிவிட்டு தண்ணீர் அருந்தும் காட்சி ரசிக்க வேண்டிய ஒன்று.



என் பேரன், மயில் அரிசி சாப்பிடுவதை மீண்டும் பார்க்கவேண்டும் என்றதால் மதினி கையில் சிறிது அரிசியை வைத்துக்கொண்டு, ‘வாடா!’ என்று அழைத்தார்கள்.

ஹூஹும்!!! வரவில்லை. ‘ஆச்சி! அதுக்கு தொந்தி ஃபுல்லாயிடுச்சா? அதான் வரலையா?’ என்றான். அதுவும் ஒரு காரணம்.

நாங்கள் எல்லோரும் கூட்டமாக இருந்தோமல்லவா அதுதான் முக்கிய காரணம். நாங்கள் வீட்டுக்குள் வந்த பிறகு ஷன்னு மட்டும் பொட்டுக்கடலை கையில் வைத்துக்கொண்டு, “வாடா...வாடா...!” என்று அழைத்துக்கொண்டிருந்தான். அது தண்ணீர் தொட்டிக்குப் பின்னால் ஓடி மறைந்தது.

இங்கு அவைகளுக்கு பாதுகாப்பு கிடைக்குமென்பதால் இங்கே உலவி வருகின்றன. வேறு இடங்களில் மயிலைப் புடிச்சு, அடிச்சு குழம்பு வெச்சுடறாங்களாம்.(என்ன கொல வெறியான வார்த்தைகள்! மயிலே! எனக்கனந்த கோடி மன்னிப்பு!!)

மாலையில் பின்புற ஷெட்டின் மேற்கூரையில் அங்குமிங்கும் மயில்நடை நடந்து அங்கு கிடைப்பதை உண்டு பசியாறுகின்றன.

அந்த மரம் புளிய மரம், ஒரு வேளை புளியம்பழங்களைத்தான் கொத்துகின்றனவோ?

அங்கு கிடைத்த மயிலின் பலவகையான போஸ்கள்.

ம்யிலே..மயிலே! நீ இறகு போட வேண்டாம். அட்லீஸ்ட் கீழே இறங்கி வந்து உன் அழகான தோகை விரித்து....”ஆடிக்காட்ட மாட்டாயா...மயிலே, ஆடிக்காட்டமா...ட்டாயா?

எப்போதுதான் ஆடுமாம்? ரெண்டு வீடு தள்ளி ஆளில்லாத வீட்டின் தட்டட்டியில் ஆடியன்ஸ் தேவையில்லாமல் தனக்குத்தானே முழு தோகையையும் விரித்து மகிழ்ச்சியாக தன் ஆட்டத்தை தானே ரசித்துக்கொண்டு ஆடுமாம். என்னே தட்டட்டி செய்த பாக்கியம்!!!!!
இரவில் அவ்வீட்டின் தென்னை மரத்தின் மேல் மயில் துயில் கொள்ளுமாம்.

அதுக்கா மனசிருந்தா அழகா தோகை விரித்து ஆடுமாம். ஆடும் மயிலே ஆட்டமெங்கே?

இம்முறை எங்களுக்கு அந்த பாக்கியம் கிட்டவில்லை.

அடுத்த முறை கெஞ்சிக் கூத்தாடி ஆடச் சொல்லவேண்டும்.

மயில் எனக்காகவே கொடுத்த போட்டோ செஷன்!! எப்படி?

மேலே உள்ள படம்தான் எனக்குப் பிடித்தது.

அடுத்த செஷனில் இன்னும் சூப்பரா பிடிச்சிடுவோமில்ல!!!!! விரித்த தோகையோடு!!!

Monday, July 12, 2010

கோதுமை ரவா தோசை - சமையல் குறிப்பு

வெறும் பாம்பே ரவா தோசை சாப்பிட்டிருப்பீர்கள். நான் சொல்லப் போவது,
கோதுமை ரவா தோசை. ஐம்பது வகை தோசை, நூறு வகை தோசை லிஸ்டில் கூட நான் கண்டதில்லை உண்டதில்லை.

என் மகளின் மெனுகார்டில் உள்ளது இந்த கோதுமை ரவா தோசை!!

எப்படி செய்வது?

அரை கப் கோதுமை ரவையை(பொடி ரவை) ஒரு மணி நேரம் ஊர வைக்கவும். அதோடு ஒரு கப் கோதுமை மாவு, ஒரு கப் அரிசிமாவு கலந்து தண்ணீர் விட்டு நன்கு கரைக்கவும்.

கொஞ்சம் நீர்க்க இருக்கலாம், அப்போதுதான் தோசை முறுகலாக வரும்.
அதோடு பொடியாக அரிந்த வெங்காயம் பொடியாக அரிந்த பச்சை மிளகாய்-காரத்துக்கேற்ப, ஜீரகம்,மிளகு ஒரு டீஸ் ஸ்பூன், உப்பு சேர்த்து தயாராக்கவும்.

ஆங்..! மானே தேனேயை மறந்துவிட்டேனே!! அதாங்க கறிவேப்பிலை, கொத்தமல்லி!!!அவற்றையும் பொடியாக அரிந்து போட்டுக்கோங்க. சேரியா?

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி நன்கு காய்ந்ததும் கல்லின் ஓரங்களில் ஊற்றவும். அங்கிருந்து வழிந்து மீதி மாவு நடுவில் சேரும். சுற்றிலும் எண்ணை அல்லது நெய் ஊற்றி
இருபக்கமும் முறுகவிட்டு எடுக்கவும். தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி நன்கு இழையும்.

சூப்பராயிருக்கும் இத்தோசை ஊற்ற ஊற்ற டைனிங் டேபிளுக்கு போய்க் கொண்டேயிருக்கும், அடி பிடின்னு. ஊற்றுபவருக்குத்தான் கை வலிக்கும், அவருக்கும் டேஸ்ட்டுக்குக் கூட மிச்சம் மீதி இருக்குமோ என்னவோ?

Friday, July 9, 2010

வழிபாட்டு தலங்கள்- ஜூலை பிட்டுக்கு

நம்ம நாட்டில் வழிபாட்டுதலங்களுக்கு பஞ்சமேயில்லை. எல்லா தலங்களுக்கும் எல்லோரும் செல்ல வாய்ப்பு கிடைப்பதரிது, துள்சியைத் தவிர! யம்மா!!!இண்டு இடுக்கு இல்லாமல் சகல தலங்களையும் தரிசிக்கும் பெரும் பேறு வாய்த்தவர்.

ஏதோ எள்ளுருண்டை போல் நான் சென்ற தலங்களின் படங்களை போட்டிக்கு பரத்தியிருக்குறேன். பாத்திட்டு சொல்லுங்க மக்களே!!



மதுரையில் கோலோச்சும் மகராணி மீனாட்சியின் திருக்கோயில், குளத்தில் பொற்றாமரையுடன்



என்னப்பன் முருகனின் திருச்செந்தூரில் ஆடிய வேல் கோபுரத்தின் மேல் நிலை கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறது.


சங்கடம் தீர்க்கும் சனிபகவானிந்திருக்கோயிலும் மேலே பறக்கும் அவனின் வாகனமும்.



பக்தர்கள் செய்து முடித்த வேள்விப் புகையூடே தரிசனம் தரும் பெருமான்.



ஆலமரத்தடி, அரசமரத்தடி கிடைத்தால் கூட போதும் என்று எளிமையாய் அருள் தரும் ஓர் அரசமரத்தடிப் பிள்ளையார்.



துவஜஸ்தம்பதோடு காட்சியளிக்கும் தலம்.

Monday, June 14, 2010

ஹவாக்கே ஸாத் ஸாத்.....கட்டாக்கே சங் சங் சாத்தி சல்ல்ல்...

கடுங்கோடை காலத்தில் பள்ளிப் பிள்ளைகள் வீட்டிலேயே அடைந்து கிடக்கவும் முடியாமல் வெளியில் போகவும் முடியாமல் தவிக்கும் பிள்ளைகளுக்காகவே வந்ததுதான் “சம்மர் கேம்ப்”கள்.

எத்தனை வகையான கேம்ப்புகள்....!!!ட்ராயிங், பெயிண்ட்டிங், க்ராப்ட் வேலைகள், ஸ்போக்கன் இங்லீஷ், ஸ்விம்மிங், கராத்தே, வாய்ப்பாட்டு, கீபோர்டு, டான்ஸ், ஸ்கேட்டிங்...இத்தியாதி...இத்தியாதி.

இந்த இத்தியாதிகளில் ஒன்றான ஸ்கேட்டிங்-ஐ தன் மகனுக்காக தேர்ந்தெடுத்தாள் என் மகள்.
அதற்கு ஒரு மாசம் கோர்ஸ்க்கான பணம் கட்டி, தேவையான ரத,கஜ,துரக,பதாதிகளையும் வாங்கிவந்தாள்.
மறுநாள் மாலை ஐந்து மணிக்கு பெசண்ட்நகர் பீச்சில் ஸ்கேட்டிங் தளத்துக்குப் போனோம்.
அதற்கு முன்பே குழந்தையிடம் என்னென்ன செய்யணும், செய்யக்கூடாது எல்லாம் கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லி அழைத்துப்போனோம்.

ர.க.து.பதாதிகளையெல்லாம் மாட்டிக்கொண்டு கிளம்பியாச்சு. கெட் செட் கோ....

முதல்நாள், வேகமாக உருளாதவாறு சக்கரங்களை சிறிது டைட் செய்துவிட்டார் மாஸ்டர்.
பின் கைகளை முன்பக்கம் நீட்டியவாறு கால்களை தூக்கி தூக்கி வைத்து நடக்க வைத்தார்.

அம்மாக்கள் கூட போக வேண்டாம் என்றாலும் சில அம்மாக்கள் பிள்ளைகள்கூடவே நடந்தார்கள். அவர்களில் மகளும் ஒருத்தி. ஷன்னு எப்பவும் வெளியே போனால் அக்கம்பக்கம்
என்ன நடக்கிறது என்று கவனித்துக்கொண்டே வருவான்.

அதேபோல் ரோலரோடு நடக்கும் போதும் அக்கம்பக்கம் பார்க்காமல் மேலே பார்த்துக்கொண்டே வந்தான். “அம்மா! ஏரோப்ளேன்!!!!அம்மா! காக்கா!!!என்று கூவிக்கொண்டே நடந்தான்.
மாஸ்டர் ஓடிவந்து, ‘’நோ..நோ..நேரே பாத்து நடக்கணும்.” என்றது கொஞ்சதூரம் நேரே பார்த்துப் போவான், திடீரென்று நான் உட்கார்ந்திருக்கும் இடத்தை கண்டவுடன், “ஆச்சீ...என்று ட்ராக் என்னை நோக்கி திரும்பிவிடும். பேரன் நடப்பதைப் பார்க்கும் ஆசையில் உக்காந்திருப்பேன். உடனே, அம்மா..அம்மா நீ இங்கே உக்காராதேயேன், ப்ளீஸ்...! பீச்சில் கொஞ்சநேரம் வாக் போய்ட்டு வா!என்று என்னை துரத்திவிடுவாள். நானும் தேமேன்னு மணலில் அரைமணி நேரம் வாக்கிவிட்டு வருவேன்.
என்னடா...கண்ணா? அதுக்குள் டயர்டாச்சா? கமான் கெட்டப்!

நந்து மாஸ்டர் வந்து தட்டிக் கொடுத்து ரோலரில் உருட்டி விடுவார். மறுபடி கிளம்பும். ரெண்டு நாள் கழித்து ஸ்க்ரூவை கொஞ்சம் லூஸ் பண்ணி விட மெதுவாக உருளப் பழகினான்.
ஒரு வாரம் நல்லாவே இருந்தது. பிறகு அம்மா கால் வலிக்குது நோ ஸ்கேட்டிங் என்று சொல்லவாரம்பித்தான். “நீ ஒழுங்கா ஸ்கேட்டிங் போனால் வரும் போது ப்ளானடெம்மில் பாட்டரி கார் ஓட்டலாம், தோசை சாப்பிடலாம்” என்றெல்லாம் தாஜா பண்ணி மேலும் நாலு நாட்கள் ஓடியது. உண்மையிலேயே குழந்தைக்கு முடியவில்லை போலும், கால்களில் அணிந்திருந்த ரோலரின் கனம் அவனுக்கு தாங்கவில்லை, பார்த்தாலே தெரிந்தது. வேண்டாம் போதும் இந்த வயசுக்கு இது அதிகம். அடுத்த வருடம் பாத்துக்கலாம் என்று மாஸ்டரிடமும் சொல்லிவிட்டு அவரின் ஒப்புதலோடு, அன்றோடு ‘தம்மானது’.

ஆனாலும் அவன் ஸ்கேட்டிங் போன நாட்களில் நான் கண்ட காட்சிகள் மனதுக்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. நம் குழந்தையை மட்டும் ரசிக்காமல் அங்கு ஸ்கேட்டிக் கொண்டிருந்த பல சிறுவர் சிறுமிகளையும் இன் கேமராவுக்குள் அடக்கினேன். பார்க்கப் பார்க்க பரவசம்!!! காற்றிக் கிழித்துக்கொண்டு அவர்கள் சல்லுன்னு பறப்பதைப் பார்க்கும் போது நாமும் கால்களில் ரோலரை மாட்டிக் கொண்டு பறக்கலாம் போலிருக்கும்

தனியே தன்னந்தனியே...
உக்கார்ந்திருக்கும் அம்மாக்கள்
என்ன ஒரு லாவகம்....!!!!!
இடையில் மாஸ்டர் விசிலடித்து அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து பயிற்சிகள் கொடுக்கிறார். ஸ்கேட்டிங் செய்யும் போது தேவையான நெழிவு சுழிவுகளை செய்து காட்டுகிறார்.
சிட்...ஸ்டாண்ட்!!!!
குனிந்து நிமிர்ந்து

பெரியவர்களோடு குட்டீஸ்களும் அரக்கப் பரக்கப் பார்த்து செய்வது பார்க்கப் பரசவசமாயிருக்கும்
நந்து மாஸ்டரின் கவனிப்பில் குழந்தைகள்.
அப்பாடா.....!!!கொஞ்சம் ரெஸ்ட்!!!!
ஸ்பைடர் மேன் உடையில் வந்த ரெட்டைச் சிறுமிகளில் ஒருத்தி. அவர்களின் அப்பாவிடம் இருவரையும் சேர்த்து படமெடுக்க அனுமதி கேட்டேன். அவர் ஓகே என்றார். அதற்குள் கேட்டுக் கொண்டே வந்த அம்மா நோ...நோ...! என்றுவிட்டார். அவரிடத்தில் நான் இருந்திருந்தால் அப்படித்தான் சொல்லியிருப்பேன். திருஷ்டி அல்லவா? முன்பின் தெரியாதவர்கள் தானே நாம். ஆனாலும் விடவில்லை. ஒரு குட்டி இங்கே!!
இன்னொரு குட்டி இங்கே
ஸ்பைடர்கேர்ள் தொப் என்று விழுந்துவிட்டாள்.

ரோலரில் வழுக்கி வழுக்கி தொப் தொப் என்று விழுவதும் ரசிக்கும்படியாயிருக்கும்.
வேகம் வேகம் போவோம் போவோம்.....
மாஸ்டரின் ஆணைப்படி நன்கு பழகிய சிறுவர்கள் ரயில் வண்டி மாதிரி வரிசையாக சல்லுன்னு காற்றைக் கிழித்துக்கொண்டு போகிறார்கள்.

பார்ப்போம் அடுத்த வருடம் எங்கக் குட்டி இப்படி சல்லுன்னு போகிறானா என்று.

Sunday, June 13, 2010

சக்தி, ஜென்ம நட்சத்திரம் - சிறுகதை


சௌந்திரம் வழக்கம் போல் அதிகாலை கோவிலுக்கு கிளம்பினாள். இன்று விளக்கேற்றுவது அவள் முறை. அதாவது கோவிலிலுள்ள விளக்குகளூக்கெல்லாம் எண்ணை ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றுவது. வாராவாரம் அவள் முறை வரும்போது தவறாமல் அதிகாலை எழுந்து காலை வேலைகளை முடித்து. எண்ணை பாட்டிலும் திரி பாக்கெட்டுமாக புறப்பட்டு விடுவாள். ஒவ்வொருநாளும் ஒவ்வொருவர் என்று முறை வைத்துக் கொண்டார்கள்.


கோவிலை அடைந்து பூக்காரியின் பெட்டியருகே செருப்புகளை கழற்றி விட்டு அவளிடம் அர்ச்சனைக்கான பொருட்கள், பூ, தேங்காய்,பழம், வெற்றிலை,பாக்கு முதலியவற்றை வாங்கி, தான் கொண்டுவந்திருந்த பூக்கூடைக்குள் வைத்துக்கொண்டு கோவிலுக்குள்ளே நுழைந்தாள்.

சந்நதி சந்நதியாகச் சென்று விளக்குகளுக்கு எண்ணை விட்டு திரி இட்டு தீபம் ஏற்றினாள்.
அந்த தீப ஒளியில் அவள் முகம் தெய்வீகமாக ஒளிர்ந்தது.
தீபம் ஏற்றிவிட்டு மெயின் சந்நதிக்கு வந்தாள்.

அங்கு காத்திருந்த அர்ச்சகர் அவளிடமிருந்து அர்ச்சனைத்தட்டை வாங்கி சங்கல்பம் செய்து சௌந்திரத்தின் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள், நட்சத்திரம் அனைத்தையும் மனப்பாடமாக ஒப்பித்து, (ஆம்! வருடக்கணக்காக வருபவள்ளல்லவா) கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்து சுவாமிக்கு மந்திரங்கள் ஓதி அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார்.

கேட்டுக்கொண்டிருந்த சௌந்திரத்துக்கு திடீரென்று பொறி தட்டியது.

ஆஹா!!ஒரு நபரை விட்டுவிட்டோமே!
இதுவரை கணவர், தான், மகள், மருமகன், பேரன் பேத்தி, திருமணத்துக்கு தயாராய் நிற்கும் மகன் ஆகியோர் பெயர்களைத்தான் அர்ச்சனைக்கு கொடுப்பாள். இன்று என்ன தோன்றியதோ?

மனதுக்குள், ‘ஸ்வாமி! வரப்போகும் மருமகள், அவள் யாரென்று உனக்குத்தெரியும், அவள் நட்சத்திரமும் உனக்கே தெரியும். ஆகவே அவளையும் இந்த அர்ச்சனையில் சேர்த்துக்கொள்.’ என்று மனமாற வேண்டினாள்.

மனசு லேசாச்சு. அதோடு வீடு திரும்பினாள்.

ஒவ்வொரு முறையும் கோவில்களுக்குச் செல்கையில் இவ்வாறே வேண்டிக்கொண்டாள். அதோடு சீக்கிரமே அவளை என்னிடம் சேர்த்து விடு என்ற வேண்டுதல் வேறு.

வெளியில் இது பற்றி சொன்னால் சிரிப்பார்களோ என்று நினைத்து தனக்குள்ளேயே வைத்துக்கொண்டாள்.

சில நாட்கள் கழித்து, தன் உயிர்த்தோழியும் சிறந்த அம்மன் பக்தையுமான பூரணியிடம் மட்டும் இது பற்றி சொன்னாள்.

அதைக்கேட்டு அவள்,’ இதற்கு ஏன் இவ்வளவு தயக்கம்?
மனசுக்குள் சொல்லிக்கொள்வதை தைரியமாக வெளிப்படையாகச் சொல்லலாமே!’ என்றாள்.

‘எப்படி..எப்படி..யாராவது கேலி செய்ய மாட்டார்களா?’

‘இதில் கேலி எங்கே வந்தது? இது உனக்கும் தெய்வத்துக்குமான பந்தம். இடையில் யாரும் வர முடியாது.’

’அப்ப எப்படி செல்வது? சாமி அவளை உனக்குத்தெரியும் நட்சத்திரமும் தெரியும் என்று எப்படி சொல்ல?’

‘அடி...அசடே! ஏன் தலையை சுத்தி மூக்கைத் தொடுகிறாய்? வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று போட்டு உடை.’

’அதுதான் எப்படி என்கிறேன்.’

‘நீ வணங்கும் அந்த சக்திவடிவான தெய்வத்தின் பேரையே ’சக்தி’ என்று வரப்போகும் மருமகள் பேராக சொல்லி, உனக்குத்தெரியாத, தெய்வத்துக்குத் தெரிந்த அவளது நட்சத்திரமாக ’ஜென்மநட்சத்திரம்’ என்று பொத்தாம்பொதுவாக சொல்லிவிடு. மற்றதை அந்த ஜெகன்மாதா பார்த்துக்கொள்வாள்.’

கேட்டுக்கொண்டிருந்த சௌந்திரத்துக்கு மெய்சிலிர்த்தது. தெய்வமே பூரணி ரூபத்தில் வந்து தனக்கு தெளிவு தந்து வழியும் சொல்லியது போல் உணர்ந்தாள்.

அதன் பிறகு அர்ச்சனைக்கு கொடுக்கும் போது அர்ச்சகர் வழக்கம் போல் பெயர்கள், நட்சத்திரங்கள் சொல்லி முடிக்கும் போது டக்கென்று, ‘சக்தி, ஜென்மநட்சத்திரம்!’ என்று முகம் நிமிர்த்தி அதையும் சேர்த்துக் கொள்ளச் சென்னாள்.

இந்தம்மாவுக்கு என்னாச்சு? என்று தயங்கிய அர்ச்சகரைப் பார்த்து,’ ம்ம்ம்ம்! இனி இந்தப் பேரையும் சேர்த்து சொல்லுங்க.’ என்ற போது பெருமையும் கம்பீரமும் மிளிர்ந்தது. என்னவோ புது மருமகளே அருகில் வந்து நிற்பது போல.

இரண்டு மூன்று மாதங்கள் கழித்து, வந்தாளே அந்த சக்தி!!!!”மாதங்கி” என்ற பேரில்.
மாதங்கி என்றால் மா + தங்கி. அவளிடம் ஜெகன்மாதாவே தங்கியிருப்பாளாம். என்ன அருமையான பெயர்!! சௌந்திரம் பூரித்துப் போனாள்.

புது மருமகளைப் பார்த்து. “அம்மாடி!! இனி உன்னை நான் ‘சக்தி’ என்றுதான் கூப்பிடுவேன்.” என்றாள் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன்.

Friday, June 11, 2010

ங்கொப்பமவனே சிங்கண்டா......! - சிறுகதை

ஏஏஏ...சிங்கி!!!!


என்னடா...சிங்கா!!!

கத சொல்லப் போறேன், கேக்குறயா?

என்னா கத?

எல்லா நம்ம சொந்தக்கததாங்!

சொந்தக் கத சோகக்கதயா?

அட! ஆமாங்குறேன். நம்மக் கததா....ஆனா நம்மக் கதயில்ல. சோகக் கததா ஆனா சோகக் கதயில்ல.

அடங்கொப்புறானே! வடிவேலு மாதிரியில்லா பேசுறீங்க. அந்தக் கதயத்தா
சொல்லுங்குறே!!


சொல்லுறே...கேட்டுக்கோ




வேலாயுதம் குட்டிபோடப் போகும் பெண்சிங்கத்துக்கு காவலிருக்கும் ஆண்சிங்கம் மாதிரி குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறிருந்தார்.

. அவரது கம்பெனியில் முக்கியமான பத்து பேர் ஓய்வு பெறுகிறார்கள். அதை சிறப்பாக கொண்டாடி அவர்களை மகிழ்ச்சியோடு வழியனுப்பிவைக்க, விழா ஏற்பாடுகளை கவனிக்க கிளம்பிக்கொண்டிருந்தார். அவரது தந்தை அவர் கைகளில் ஒப்படைத்த கம்பெனியை மென் மேலும் சிறப்பாக வளர்த்து, இன்று அதை தலைசிறந்த ஸ்தாபனமாக உருவாக்க தம் கடும் உழைப்பை ஈந்து, இன்று பல சிறப்புகளையும் விருதுகளையும் பெற்று நகரில் ஒரு பெரிய மனிதராக நிற்கிறார்.

ஆச்சு..., இன்று அவர் மகன் குமாரும் தலையெடுத்து கம்பெனி பொறுப்புகளை தன் கைகளில் வாங்க தயாராகி வருகிறான். வேலாயுதம் தன் மனைவி ராகாவை (ராகினியை அவர் அப்படித்தான் அழைப்பார்) கூப்பிட்டு, ‘ராகா! குமாருக்கு வயசாச்சு சீக்கிரம் அவனுக்கு கல்யாணம் செய்துவிட வேண்டும்.’ என்றார். ‘அதெற்கென்ன செஞ்சாப் போச்சு! ஜோஸ்யரை வரச் சொல்லி நல்ல பெண்ணாகப் பார்க்கச் சொல்லுங்கள்.’

குமாருக்கும் வேளை வர மடமடவென்று எல்லாம் நிகழ்ந்தன. ஒரு நல்ல நாளில் நித்யா கழுத்தில் தாலி கட்டி மனைவியாக்கிக்கொண்டான். வருடங்கள் உருண்டோட மணி மணியாக ரெண்டு குழந்தைகள் பிறந்தன.
காலச்சக்கரம் சுழலச்சுழல ஒரு கட்டத்தில் தந்தைக்கு ஓய்வு கொடுக்க விரும்பினான் குமார். சுறுசுறுப்பாய் பணிகளை செய்து கொண்டிருக்கும் அவரிடம் எப்படிச் சொல்லுவது?

வந்தது தந்தையின் ஐம்பதாவது திருமணநாள்!!! அதை ஊரே வியக்கும் படி சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகளை செய்யலானான். அம்மாவிடம் மட்டும் அப்பாவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமென்ற தன் எண்ணத்தை தெரிவித்து விட்டான். அம்மாவும் ஒத்துக் கொண்டார்கள்.

ஊரே திரண்டு வந்து வேலாயுதத்தின் திருமணநாளை அதுவும் ஐம்பதாவது திருமணநாளை கோலாகலமாகக் கொண்டாடியது.

அன்று தாய்தந்தையரை தன் குடும்பத்தோடு வணங்கியெழுந்த குமார், “அப்பா!!இந்த நல்ல நாளில் என்னோட ஓர் ஆசையை நிறைவேற்ற வேண்டும்.’ என்று கேட்டான்.
‘என்னடா? கேள் கட்டாயம் செய்கிறேன்.’ என்று யோசிக்காமல் வரமளித்தார்.

‘அப்பா! இத்தனைக் காலம் நீங்கள் இரவு பகல் பாராமல், ஓய்வு ஒழிவு இல்லாமல் உழைத்ததெல்லாம் போதும். உங்களுக்காக எதையுமே செய்து கொள்ளவில்லை. எந்த சுகத்தையும் அனுபவித்ததில்லை. அதனால்....இனி உங்களுக்கு ஓய்வு தரவேண்டுமென்று ஆசைப் படுகிறேன். அம்மாவோடு ரிலாக்ஸ்டாக பொழுதைக் கழிக்க வேண்டும். வெளிநாடு சுற்றுப்பயணம் போக வேண்டும். இனி கம்பெனி பொறுப்புகளை உங்கள் வழிகாட்டுதலின் படி நான் கவனித்துக்கொள்கிறேன்.” என்றவாறு கம்பெனி பெயரில் உள்ள ஒரு சிங்கத்தின் அதுவும் தங்க முலாம் பூசிய ஒரு சிங்கத்தின் சிலையை பரிசாகக் கொடுத்தான்.

அவன் பேசப்பேச வேலாயுதத்துக்கு உள்ளுக்குள் சுறுசுறுவென்று கோபம் பொங்கியது. என்னக்கென்ன வயசாச்சுன்னு இப்படிப் பேசுறான். இன்னும் பத்து வருஷம் கூட என்னால் உழைக்க முடியும் என்று எண்ணியவாறே ராகாவைப் பார்த்தான்.

அவரது உள்மனதைப் புரிந்து கொண்டவள், அவரது நினைப்பை மாற்ற எண்ணி, ‘ என்னங்க! சிங்கம் அழகாயிருக்குல்ல...?” என்று கேட்டாள்.

“உர்ர்ர்! அது கூண்டுக்குள்ளல்ல இருக்கு!!!!” என்று மனைவிக்கு மட்டும் கேட்குமாறு உறுமினார்.




தனயன் அன்போடு பரிசளித்த கூண்டிலடைபட்ட தங்கச்சிங்கம். இனி அவன் அப்பாவின் நிலையும் இதுதானோ?

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...