'ராஜீ! இதான் ஏ முடிவு. நா காட்டுற மாப்பிள்ளைக்குத்தான் நீ கழுத்தை நீட்டணும்.
எதாவது ஏடாகூடமா பண்ண நெனச்சே மகள்னு கூட பாக்க மாட்டேன், கொன்னுடுவேன்.'
அப்பாவின் மிரட்டலில் மிரண்டுதான் போனாள், ராஜி.
சென்னையில் பெரிய பிசினஸ் புள்ளி அவள் அப்பா தியாகராஜன். ஒரே மகள் அதுவும் தாயில்லாதவள். அவள் கேட்காத சௌகரியமெல்லாம்
கிடைத்தது. உறவென்றும், கூடப் பிறந்தவர்கள்ந்ன்றும் யாருமில்லாமல், வியாபர விஷயமாக தந்தையும் மாதத்தில் பாதி நாட்கள் வீட்டிலில்லாமல்
வேலைக்கார ஆயா துணையோடு அவ்வளவு பெரிய பங்களாவில்
தனிமையில் ஏங்கிக் கழித்தாள்.
ஒரு நாள் கல்லூரித் தோழி ஜெயா வீட்டிற்குப் போகும் சந்தர்ப்பம் வாய்த்தது. அங்கு போனதும் உடம்பெங்கும் புது ரத்தம் பாய்ந்தது போல் உணர்ந்தாள்.
ஜெயாவின் அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி என்று அங்கு நிலவிய பந்ததையும் பாசத்தையும் ஒருவரையொருவர் செல்லமாய் சீண்டி
விளையாடிக்கொள்வதையும் பார்த்து வியந்தாள்.
இப்படியெல்லாம் கூட இருக்குமா? வாழ்கையின் ஜீவனை அங்கு கண்டாள், தனை மறந்தாள்,
தன்னையும் அக்குடும்பத்தோடு இணைத்துக்கொள்ள ஆசைப்பட்டாள்.
'ஜெயா! உங்க வீட்டில் எல்லோரும் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள்!'
'இதிலென்ன ஆச்சரியம், ராஜி?அவரவர் இயல்போடு இருக்கிறோம். உங்க வீட்டில் இது போல கலகலப்பாக இருப்பதில்லையா?'
'கலகலப்பா? அதுக்கு எனக்கு அர்த்தமே தெரியாது ஜெயா! வீடு முழுக்க வேலைக்காரர்கள், துணைக்கு ஆயா, எப்பவாவது வரும் அப்பா, நிசப்தமான
வீடு. இதுதான் எங்க இயல்பு.' என்றாள் ராஜி சலிப்போடு.
'உங்க வீட்டில் நிலவும் அன்பு, பாசம், அன்யோன்னியம் எல்லாம் ரொம்பப் பிடிச்சிருக்கு ஜெயா!
நான் அடிக்கடி இங்கே வரலாமா?' ஏக்கம் ததும்பக் கேட்டாள் ராஜி.
'ஐயோ! ராஜி என்ன சொல்லிட்ட? இது உன் வீடு நீ எப்ப வேணாலும் வரலாம்.' என்றாள் ஜெயா அவள் கைகளை ஆதுரத்துடன் பற்றிக் கொண்டு.
அந்த வீடும் அதன் சூழ்நிலையும் பிடித்துப் போக அடிக்கடி போகவாரம்பித்தாள் ராஜி. நாளடைவில் ஜெயாவின் அண்ணன் மூர்த்தியின் அழகும் குணமும்
துறுதுறுப்பும் குடும்பத்தின் மேல் அவன் கொண்ட பற்றும்அவளை வெகுவாகக் கவர அவளறியாமல் மூர்த்தியை விரும்பவாரம்பித்தாள். அவன்
நிலையும் அதுவே.
ஜெயாவின் குடும்பத்தாரும் அவர்கள் விருப்பத்தை ஆமோதித்தனர். ராஜியின் தந்தையை எண்ணி தயங்கினாலும், ராஜியின் விருப்பமே அவர்கள்
விருப்பமும்.
தெரிய வேண்டிய நேரத்தில் ஒரு நாள் தியாகராஜனுக்குத் தெரிய வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தார். 'ராஜீ...! உனக்காக நான் பூனேயில் ஒரு பெரிய
பிசினஸ்மேனின் ஒரே மகனுக்கும் உனக்கும் திருமணம் பேசிவிட்டு வந்திருக்கிறேன். அம்மா இல்லை, உனக்கு மாமியார் தொந்தரவும் இருக்காது.
அங்கே நீ ராணி மாதிரி வாழலாம். அதைவிட்டு ஒரு கூட்டுக் குடும்பத்தில் போய் உழல ஆசைப் படுகிறாயே? இதுக்கு நான் சம்மதிக்கவே மாட்டேன்.
இதுக்குப் பிறகுதான் முதல் பாராவில் அவர் சொன்ன வார்த்தைகள்.
அன்றிரவு த்னிமையில் அப்பாவிடம் தன் மனதிலுள்ளதை வெளிப்படுத்தினாள். 'அப்பா! இங்கும் நான் நாள் முழுதும் தனிமையில்தான் கழிக்கிறேன். நீங்க
பார்த்திருக்கும் இடமும் ஏறக்குறைய அப்படித்தான் அமையப் போகிறது. மாமனார், மாமியார் நாத்தனார்,கொழுந்தன், கணவர் என்ற கூட்டுக் குடும்ப
அமைப்புத்தான் நான் விரும்புவது. அப்படி ஒரு அழகான குடும்பம்தான் என் தோழி ஜெயாவுடையது. அன்பும் பாசமும் அரவணைப்பும் கலந்து
கொஞ்சிவிளையாடும் குடும்பம். அவளுடைய அண்ணன் மூர்த்தியை நான் விரும்புகிறேன். அக்குடும்பத்தில் ஒருத்தியாக அங்கு நான் ம்கிழ்ச்சியாக
இருப்பேன். என் சந்தோஷம் அங்குதானிருக்குதப்பா!' என்றாள் தயங்கிக்கொண்டே.
'நான் வாக்குக் கொடுத்துவிட்டேன். என் மானம், கௌரவம் எல்லாம் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு. இதில் எந்த வித மாற்றமும் இல்லை.'
என்று உறுமியவாறு சொல்லிக்கொண்டே அறையை விட்டு வெளியேறினார்.
செய்வதறியாது திகைத்தாள் ராஜி. சட்டியிலிருந்து அடுப்பில் தாவிய கதையாயிற்றே என்று வெம்பினாள். ஆனாலும் அடுப்பில் வீழ்ந்து கருகக்கூடாது
என்று முடிவெடுத்தாள். ஆனால் வழிதான் புலப்படவில்லை.
மறுநாள் கல்யாண அழைப்பிதழ்கள் அச்சடித்து வந்தன. ராஜியிடம் கொடுத்து வேண்டியவர்களுக்கு அனுப்புமாறு அவளிடம் விசிறியடித்தார்
தியாகராஜன். அதில் ஒன்றை எடுத்துப்பார்த்தாள். கல்யாணத் தேதியைப் படித்ததும் அவள் மூளையில் பளிச்சென்று பல்பு எரிந்தது. மாப்பிள்ளை வட
நாட்டைச் சேர்ந்தவர். புரிந்துகொள்வார் என்று தைரியமாக ஒரு முடிவெடுத்தாள். வாழப்போவது அவளல்லவா?
சமர்த்தாக அப்பா சொன்னபடி எல்லாம் கேட்டுக் கொண்டாள். அவரும் அவள் மனம் மாறிவிட்டதாக எண்ணி கல்யாண் வேலைகளில் மூழ்கினார்.
திருமணநாள் வந்தது. அலங்காரப் பதுமையாக மணமேடையில் வந்து மாப்பிள்ளை அருகில் அமர்ந்தாள். ஐயர் தாலி எடுத்துக் கொடுக்க அதை வாங்கி
அவள் கழுத்தில் கட்ட வந்தான் மணமகன். 'சற்றே பொறும் பிள்ளாய்!' என்னும் விதமாக கையமர்த்தி நிறுத்தினாள் ராஜி.
"நீங்க இதைக் கட்டும் முன்னால் நான் உங்களுக்கு ஒன்றைக் கட்ட விரும்புகிறேன்...என்றவாறே இடுப்பில் மறைத்து வைத்திருந்த பளபளவென ஜொலிக்கும் ராக்கி ஒன்றை அவன் கையில் கட்டினாள்.
'இன்று ஆவணி பௌர்ணமி! ரக்க்ஷா பந்தன் நாள்! இந்த ராக்கியை உங்கள் கையில் கட்டி உங்களை என் சகோதரனாக ஏற்றுக் கொள்கிறேன்!’ என்றவாறே தன் விருப்பத்தை அவனிடம் சொல்லி, தான் விரும்பியவரோடு சேர்த்து வைத்து வாழ்த்த வேண்டுமாறு வேண்டினாள்.
தியாகராஜன் முகத்தில் ஈயாடவில்லை.