செந்திருமாதும் கலைமாதும் சிவகாமியென்றோதும் மலைமாதும்
சொந்தமுடன் நவராத்திரி நாளன்று சேர்ந்திடுவார் ஒன்று கூடிடுவார்
பிள்ளைகளுக்கு விவரம் தெரிந்தவுடன்,'அம்மா! நாம்பளும் கொலு வைக்கலாம்மா...' என்று ஆசைப்பட்டார்கள். என் அம்மா வீட்டில் நவராத்திரி சமயம் ஒன்பது நாளும் கொண்டாட்டமாக இருக்கும். அம்மா இருந்தவரை பிரமாதமாக கொலு வைப்பார்கள். என் பெற்றொருக்கு நாங்கள் ஒன்பது பேர் அப்போது.....(மொத்தம் பத்து. ) ஒன்பது பேரும் ஒன்பது படிகளில் பொம்மைகள் போல் அம்ர்ந்து
கூத்தடித்தது எல்லாம் நவரசம் !!!! அம்மாவுக்குப் பிறகு முப்பெரும் தேவிகளான என் அண்ணிமார் மூவரோடு ஒன்று சேர்த்து கொலு
வைப்பதை விடாமல் நடத்தி வந்தோம் என் திருமணம் வரை. அந்தக்கதைகள் எல்லாம் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொண்டே எங்கள் வீட்டில் ஒரு குட்டிக் கொலுவைக்கத் தயாரானோம்.

முதலில் அவசியமான பொம்மைகள் மட்டும் வாங்கி மற்றும் அலங்காரப் பொருட்கள்....இத்தியாதி..இத்தியாதி எல்லாம் வாங்கி, சிங்கிள் பெட்ரூம் வீட்டில் ஹாலில் மூன்று படிகள் அமைத்து அடுக்கினோம். குழந்தைகள் இருவருக்கும் ரொம்ப சந்தோஷம்!! பார்க் வைக்கவேண்டும் என்று இருவரும் சேர்ந்து மணல் கொண்டுவந்து
பரப்பி தங்களுடைய டாய்ஸ் எல்லாம் இறக்கி.....அட்டையில் தியேட்டர் செய்து அப்போது வெளியான 'அக்னிநட்சத்திரம்' படத்தின் கட்டவுட்
வைத்து மிகவும் உற்சாகமாக செய்து முடித்ததர்கள்.

ஆரம்பித்தாயிற்று இனி வருடாவருடம் வைக்கவேண்டியதுதானே. பின்நாளில் அடையாரில் ரெண்டு பெட்ரூம் வீட்டுக்கு வந்ததும்....
'அரச்ச மாவ அரப்போமா..தொவச்ச துணிய தொவப்போமா..' என்பதுபோல் வைத்தபொமைகளையே தானே திருப்பி திருப்பி வைக்கிறோம்
ஏதாவது வித்தியாசம் காட்டவேண்டும் என்று கொலுபடிகளுக்கு மேற்புரம் back drop வித்தியாசமாக ஒவ்வொருவருடமும் வைக்கவாரம்பித்தேன். கொலுபார்க்க வருவதைவிட 'இந்த வருடம் என்ன back drop என்று பார்க்கவே விரும்பி
வருவார்கள்.
கொலுவுக்கு வரும் குட்டீஸ்களை பாட வைப்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். ஒரு சின்னஞ்சிறுமி வந்தாள்....பார்த்தாள். பாடச்சொன்னேன். faஸினாள். 'நீ பாடினால்தான் இந்த ரூமை விட்டுப் போகமுடியும்' என்று கண்டிஷன் போட்டேன் செல்லமாக.
குழந்தை பயந்து எழுந்து நின்று திங்..திங் என்று குதித்துக்கொண்டு 'பாபா ப்ளக் ஷீப்..' என்று ரைம்ஸ் பாடி குங்குமம் வாங்கிக்கொண்டு
தன் பாட்டியோடு ஓடியேவிட்டது.

இன்னொரு சிறுமி வந்தாள். அவளிடம் 'நீ பாடினால் எங்கள் வீட்டு மீனையும் பாடச்சொல்வேன்'
என்று கொலுவில் தொங்கவிட்டிருந்த மீனைக் காட்டினேன். US-லிருந்து பரிசாக வந்தது. 'எங்கே? பாடச்சொல்லுங்கள்!' என்றாள்,
'எங்கேடா பாடுபார்க்கலாம்?' என்ற தூக்குத்தூக்கி வசனம் மாதிரி. ஸ்விட்ச் ஆன் செய்தவுடன் மீன் ஆங்கிலப்பாடலொன்றைப்
பாடியது தன் தலையையும் வாலையும் ஆட்டிக்கொண்டே. அதை வியந்து பார்த்துவிட்டு அருமையான ஸ்லோகம் ஒன்றை அழகாகப்
பாடி அசத்தினாள்.

சிறுமிகளைச் சொல்லிவிட்டு எங்கள் ப்ளாட்டில் மூன்றாவது மாடியில் குடியிருந்த சிறுவன் ஒருவனை சொல்லாமல் விடலாமா? நான் கொலு வைத்தவுடன், தன் அம்மாவிடம் நச்சரிக்க ஆரம்பித்துவிடுவானாம். 'ஆன் டி, எப்போது அழைப்பார்கள்..நான் எப்போது போய் பாடுவது?' என்று.
கேட்கவே சந்தோஷமாகயிருக்கும்..நீ தினமும் வந்து பாடலாம் என்பேன். அழகாக வந்தமர்ந்து கொண்டு கொஞ்சம் ஸ்டார்டிங் ட்ரபுலோடு
வெட்கமாம்..ஆரம்பிப்பான். அவ்வளவுதான்...வண்டி பஸ்ட் கியர்..செகண்ட் கியர் என்று டாப் கியரில் ஜிவ்வென்று பறக்கும். அடுத்து இதைப்பாடவா...இதைப்பாடவா.. என்று ஒரு மினி கச்சேரியே நடத்திவிடுவான். ரொம்ப சந்தோஷத்தோடு குங்குமம் கொடுத்து வாழ்த்தியனுப்புவேன். இந்த வருடம் அவன் குடும்பம் பெங்களூருக்கு மாற்றலாகிச் சென்றுவிட்டது. அங்கு யார் வீட்டு கொலுவுக்கு
கொடுத்து வைத்திருக்கிறதோ?
பின்நாளில் ப்ளாக்கில் எழுதுவேன் என்று தெரிந்திருந்தால் பக்காவாக படம் எடுத்து வைத்திருப்பேன். கிடைத்த வரை
அந்த நவ நாட்களிலே நான் வைத்த கொலுக்களின் படங்கள் சில உங்கள் பார்வைக்கு.

செந்திருமாதும் கலைமாதும் மலைமாதும் வருடத்தில் இந்த ஒன்பது நாடகள் மட்டுமல்லாது வருடம் பூராவும் நம் இல்லங்களில்
எழுந்தருளி எல்லோருக்கும் எல்லா நலன்களும் கலைகளும் அருளுமாறு முத்தேவியரையும் வேண்டி ,வாழ்த்தி ,பாடி (பாடத்தெரிந்தால் )
வணங்குவோம்.