
இந்த வருடம் பங்குனி உத்திரத் திருநாளில் பௌர்ணமியும் சேர்ந்துகொள்ள போதாதற்கு மிலாடிநபியும் புனிதவெள்ளியும் கைகோக்க மும்மதங்களும் இணைந்த திருநாட்களாக மக்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
நேற்று அதாவது மார்ச் 21-ம்நாள் பங்குனி உத்திரம் நாளில் எனக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. மேல்மருவத்தூரில் கருவறைப்பணி செய்யும் பேறுதான் அது.
அதி..அதிகாலை 2-மணிக்கு நானும் என்னோடு சின்னக்கா மகனும் மருமகளும் சேர்ந்துகொள்ள
காரில் கிளம்பினோம். செங்கல்பட்டு தாண்டி வருணபகவான் காலமில்லாத காலத்தில் தன் அளவில்லா பெருங்கருணையை வாரிவாரிப் பொழிந்து கொண்டிருந்தான். கோவிலுக்குள் நுழைவதற்குள் நன்றாக நனைந்துவிட்டோம். அன்று முழுவதும் ஈர உடையோடேயே பணிகள் செய்தோம். விரைவாகப்போயும் அபிஷேகம் முடிந்துவிட்டது. எங்கள் கைகளால் அபிஷேகம் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.
பரவாயில்லை என்று தேற்றிக்கொண்டு நமக்கென்ற பணியை அம்மா கூப்பிட்டுத்தருவாள் என்று கருவறை அருகே நின்றிருந்தேன். டக்கென்று "புற்று மண்டபத்தில் பணியிருக்கிறது வாருங்கள்." என்று ஒரு சக்தி அழைத்தார். நானும் மருமகளும் அவர் பின்னே புற்று மண்டபத்திற்குச் சென்று அங்கு அவர் சொன்ன பணிகளை சிரத்தையாக செய்து முடித்தோம். அங்கு முன் தினம் செய்திருந்த அலங்காரங்களைக் களைந்து வாடியமலர்களை சேகரித்து அப்புரப்படுத்தி அவ்விடத்தை பெருக்கி நீர் கொண்டு துடைத்து சுத்தப்படுத்தினோம்.
புற்றுமண்டப பணி செய்யும்போதே மனதில் திடீரென ஒரு மின்னலடித்தது!!ராகு தோஷத்துக்கு
திருநாகேஸ்வரம் சென்று பரிகாரம் செய்யச் சொன்னார்கள். போகமுடியாமல் தள்ளிக்கொண்டே போனது. அது மனதில் நெருடிக் கொண்டேயிருந்தது. "அங்கு போய் பரிகாரம் செய்ய முடியாவிட்டால் என்ன? என் சந்நிதியில் புற்றுமண்டபத்தில் போய் பணி செய்! அதுவே பரிகாரம் செய்ததற்குச் சமம் மகளே!" என்று அம்மா சொன்னதுபோல் உணர்ந்தேன். உடம்பெல்லாம் புல்லரித்தது...மனமெல்லாம் நிறைந்தது.
நம் மனதில் எழும் சந்தேகங்களுக்கும் சஞ்சலங்களுக்கும் தக்க பதில் தந்து அவள் அருள் மழை பொழிந்தாள். ஆம்! அன்று நாட்டு மக்கள் எல்லோருக்கும் தன் அருளை (எதிர்பாராத) மழையாய் பொழிந்து விட்டாள்.
அடுத்து அம்மா சந்நிதிக்கு முன் பெருக்கி சுத்தம் செய்ய அழைப்பு வந்தது. அதெற்கென்றிருந்த துடைப்பத்தை அங்கிருந்து எடுத்து சந்நிதியின் இருபுறமாக குறுக்கும்நெடுக்கும் செல்லாமல் சுத்தமாக பெருக்கி வாரி அப்புரப்படுத்தினேன். நம் மன அழுக்கையும் அம்மா சுத்தப் படுத்துவாள் அல்லவா?
அன்று பெய்த பெருமழையால் பிரகாரத்துக்குள் வழிந்த மழைநீரை வெளித்தள்ளும் பணி, ஓர் அதிகபடி பணியாக அமைந்துவிட்டது. தொண்டர்கள் அசரவில்லையே! விரைவாக நீர் வழியவழிய தள்ளிக்கொண்டே இருந்தார்கள்.

அன்று அருள்திரு அடிகளார் வெளிநாடு சென்றிருந்தமையால் மன்றத்தினர் பாதபூஜை செய்ய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அந்த கூடுதல் சிறப்பு இல்லாமல் போனது வருத்தம்தான்.
அதற்கு பதிலாக அன்று பௌர்ணமி நாளானதால் அம்மாவின் தங்கரதம் இழுக்கும் பெறும் பேறு கிட்டியது. எல்லோருக்கும் வாய்ப்பளிக்கும் விதமாக மூன்று சுற்றுகள் ரதம் இழுத்து நிலைக்கு கொண்டுவந்தோம். நம்மை நல்ல நிலைக்கு இழுத்துக் கொண்டுசெல்பவளை நாம் இழுத்து நிலைக்குக் கொண்டுவந்தோம்! என்ன பேறு செய்தோம் நாம்!!
மாலையில் திருவிளக்கு பூஜை. 108 விளக்குகள் வைரவடிவில் அமைக்கப் பட்டு மகளிர் எதிரெதிராக அமர்ந்து வேப்பிலை கொண்டு அர்ச்சனை செய்து வெகு சிறப்பாக செய்து முடித்தனர்.
பின்னர் கோவில் நடைசாத்தும் நேரமும் வந்தது. எல்லோரும் அம்மா சந்நிதி முன் அமர்ந்து பாடல்கள் பாடி அம்மாவை மகிழ்வித்து இறுதியில் வாழ்த்துபாடி நடைசாத்தி எங்கள் கருவறைப்பணி இனிதாக சிறப்பாக மனதுக்கு நிறைவாக நடந்து முடிந்தது.
செய்த பணி என்னவோ குறைவுதான் ஆனால் மனதுக்கோ பெரும் நிறைவுதான்!!!!
ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா!!!
குருவடிசரணம் திருவடி சரணம்!!!
