Saturday, October 24, 2009

மண் வாசனை மணத்தது - சர்வேசன்500 ‘நச்’ சிறுகதைப் போட்டி

’என் கணவர் வாய் திறந்தால் நச்னு அவர் எந்த ஊர்காரர் என்று கண்டுபிடித்துவிடுவார்கள்.’ என்று பஸ்ஸில் வரும் போது தன் தோழியுடம் சொல்லிக் கொண்டே வந்தாள் சந்திரா.

’அதெப்படி? அப்ப நீ பேசும் போது மட்டும் கண்டுபிடிக்க மாட்டார்களா?’ மாலதி.

‘ஹூஹும்! நான் கூடிய மட்டும் எந்த வட்டார மொழியும் கலக்காமல் சுத்தமான தமிழில் பேசுவேனாக்கும்!’

‘ஓஹோ! செந்தமிழோ?’

‘அது செந்தமிழும் இல்லை கொச்சைத்தமிழும் இல்லை. வெறும் தமிழ், நல்ல தமிழ்.’

‘எங்கே ஓர் உதாரணம் சொல்லு பாக்கலாம்!’

‘என் கணவர், “இங்ஙன ஒரு பேப்பர் வச்சிருந்தேனே பாத்தியா? என்றால் நான் இங்க ஒரு பேப்பர் வச்சிருந்தேனே பாத்தியா? என்பேன்.
’பையப் போ’ என்றால் நான் மெதுவாப் போ என்பேன்.
‘வாரியல் என்றால் துடப்பம் என்பேன்.
இப்படியே உதாரணங்கள் சொல்லிக்கொண்டே வந்தாள் சந்திரா.

சிறிது நேரத்தில் கண்டக்டர், ‘டிக்கெட்....டிக்கெட்’ என்றவாறே அவர்களை நெருங்கி, ’டிக்கெட்’
என்றார். சரியாக அந்நேரத்தில் சந்திராவின் கண்ணில் தூசி விழுந்து கண்ணை கசக்கிக் கொண்டே இருந்தாள். கண்டக்டர்,’ என்னம்மா ஆச்சு?’ என்று கேட்டார்.


சந்திரா டக்கென்று அவளறியாமல் சொன்னாள், “கண் வலிக்கி!!!”
கண்டக்டர் நச்சென்று கேட்டார், “அம்மா நீங்க திருநெல்வேலியா?



பி.கு.
இக்கதை நச்னு இருந்தால் போட்டிக்கு, இல்லாங்காட்டி ச்சும்மா வாசிக்க. சேரியா?

Wednesday, October 21, 2009

தீபாவளி அன்று நான் ரசித்த இரு டிவி நிகழ்ச்சிகள்


வழக்கமான குத்தாட்டப் பாடல்களையும். மைக் பிடித்து மேடையில் பாடும் நிகழ்ச்சிகளையும் வெறுத்து ரிமோட்டை க்ளிக்கிக்கொண்டே வரும்போது எதேச்சையாக மதியம் ஜெயா டிவியில் கண்ட ‘வடிவேலுவோடு ’தூள்’ பாடகர் மாணிக்கவினாயகமும் டைரக்டர் மனோபாலாவும் தொகுப்பாளரும் இணைந்து நிகழ்த்திய உரையாடல் தொகுப்பு...வடிவேலு பற்றிய ஒருவரது எண்ணங்களை கட்டாயம் மாற்றியிருக்கும்.
அசந்து போனேன்!!!
தெளிவான கருத்துக்களோடு படப்பிடிப்பில் நடந்த சுவையான சம்பவங்களையும் மனோபாலாவோடு சேர்ந்து சிரிப்பு வெடிகளோடு(தீபாவளி அல்லவா?) விவரித்தவிதம் நன்றாக இருந்தது. தான் வல்கரான வசனங்களை பேசுவதை தவிர்த்து விடுவதையும் அக்கரையோடு சொன்னார்.
பாம்பாட்டி ஷூட்டிங்குக்கு கொண்டு வந்த பாம்பு பல் பிடுங்கியதுதான் என்று காட்ட தன் கையில் கொத்தவிட்டு சாய்ந்த கதையை நடித்தே காட்டியது, இன்னும் இதுபோன்ற பல காமடிகளை இருவரும் குலுங்க குலுங்க சொல்லியது எல்லாமே இன்னுமொரு படம் எடுக்கத் தேவையான சம்பவங்களைக்கொண்டது.

இது எல்லாவற்றுக்கும் மேலே.....அவர் எம்ஜியார் சிவாஜி பாடல்களைப் பாடுவார் என்பது மட்டுமே நமக்குத்தெரியும். ஆனால் இந்தளவுக்குப் பாடுவார் என்பது கண்டு கேட்டு மகிழ்ந்தே போனேன்.
மைக் பிடித்து மேடையில் பாடும் பாடகர்கள் எல்லோரும் முன்னால் ஒரு ஸ்டாண்டில் பாட்டுப் புத்தகத்தை வைத்துக்கொண்டு பாடுவார்கள்.
ஆனால் இவரோ..? மந்திரவாதி வெறும் காற்றில் கைகளை மாறிமாறி வீசி ரிப்பன், பூக்கள், புறா என்று வரவழைப்பது போல், தன் நினைவுக் காற்றிலிருந்து டக்டக்கென்று சிவாஜி பாட்டு, எம்ஜியார் பாட்டு என்று சுருதி சுத்தமாகவும் அட்ஷர சுத்தமாகவும் ஆர்கெஸ்ட்ராவோடும் இணைந்து, இசைந்து பாடியது கண்டு நிஜமாகவே
அசந்துதான் போனேன்!!!!

அதிலும் குறிப்பாக ஒரு பாடல். ‘மண் குடிசை வாசலென்றால் தென்றல் வர மறுத்திடுமா..’ என்ற வரிகளைப் பாடிவிட்டு உடனே, ‘கிணுகிணு..கிணுகிணு..கிணுகிணு..’என்று அதன் பிஜியெம்மையும்(பின்ன்ணி இசை) சேர்த்து பாடினாரே பார்க்கலாம்!!
எந்த அளவுக்கு அப்பாடல்களையெல்லாம் அக்காலத்தில் ரசித்திருப்பார் என்பது, என்னைப்போல், வல்லியம்மாவைப் போல் சிறுவயதில் பள்ளிவிட்டு வந்ததும் காதுகளைப் பிய்த்து ரேடியோவின் ஸ்பீக்கரில் ஒட்டிவைத்துவிடும் பிரகஸ்பதிகளுக்கு நன்றாகவே புரியும்.

ஹைனா வல்லி?

அதுவும் அக்காலத்தில் வசதியில்லாத வடிவேலு எங்காவது ரேடியோ சத்தம் கேட்டால் அங்கு போய் நின்று கொள்வாராம். வெறும் கேள்வி ஞானத்தில்தான் வளர்ந்தது அவரது பாடும் திறமை.அவர் பாடிய பாடல்களில் நான் விரும்பிக் கேட்பது, ஒரு படத்தில் அம்மனை ஊஞ்சலில் வைத்து பாடும் தாலாட்டுப் பாடல், ‘சந்தனப் பொட்டு வச்சு...’ அழகான மெலோடி!!

தமிழ் திரையுலகம் வடிவேலுவை ஒரு நல்ல பாடகராகவும் நல்ல குணச்சித்திர நடிகராகவும் பயன் படுத்திக்கொண்டால் அவர் பல உச்சங்களைத் தொடலாம்.


மாலையில் அசத்தியது யாரு?
நடிகரும் ஓவியருமான சிவக்குமார்!!!
முழு நிகழ்ச்சியையும் ’ஒன்மேன் ஷோ’ வாக தன் பேச்சாற்றலால் நிகழ்த்திக் காட்டினார்.
திரையுலகத்திலிருந்து விலகியதும் தன்னுடைய ஓய்வு நேரத்தை எவ்வளவு உன்னதமாகவும் உபயோகமாகவும் கழித்திருக்கிறார் என்றறியும் போது அவர் மீது ஒரு மதிப்பு எழுவதை தவிர்க்க முடியாது. அவருள்ளிருந்த ஒரு தமிழன், தமிழ்காதலன், தமிழ் ஆர்வலன் வெளிவந்து, கம்பராமாயணம் என்ன, திருக்குறள் என்ன, சங்க இலக்கியங்கள் என்ன என்று அருவியாய்.....ஹூஹும்!! நயாகராவாய் பொங்கிப் பெருகி தமிழ்த் தேனாய் வழிந்தான்.
இந்தத் தலைமுறைக்கு எடுத்துரைத்த கருத்துக்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை. சட்டியில் இருந்து வழிந்த சரக்குப் போல்தான் சபையும் நிரம்பி வழிந்தது.

Monday, October 19, 2009

தீபாவளி சிறப்புப் பதிவு 2009

திடீரென்று என் மெயில் இன்பாக்ஸில் ஜில் ஜில் ஜில்னு ஒரே சதங்கை சத்தம் திறந்து பாத்தால்..இன்ப அதிர்ச்சியாம்..! வந்து பாருங்கோ என் அழைத்திருந்தார், நண்பர் சதங்கா. ஹூம்! எத்தனை வகையான அதிர்ச்சிகளையெல்லாம் பாத்திருக்கோம். இத்தப் பாக்க மாட்டோமா? ஆனா அங்க வெச்சிருந்தாரே ஓர் ஆப்பு! எவ்வளவோ தொடரெல்லாம் தொடர்ந்திருக்கோம்...இதையும் தொடருவோம், ஏன்னா? நம்ம மேலே இத்தனை நம்பிக்கை வச்சிருக்காரே சதங்கா...! அந்த நம்பிக்கையை சதாய்க்கலாமா? தட்டிருவோம்...! அட! கீ-போர்டைத்தானுங்க!

ஆட்டையை ஆரம்பிப்போம்.




1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

ஹம்பிள்,சிம்பிள் குடும்பத்தலைவி. என்னைச் சுற்றியிருப்பவர்களை சந்தோசப்படுத்திப் பார்க்கும் ஓர் ஆத்மா. மழலையின்பத்தில் மகிழும் ஜீவன். எதிர்காலத்தை அது எவ்விதமாயினும் ஏற்கத் தயாராயிருக்கும் ஒரு மனுஷி. போதுமா?

2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

சிறு வயதில் ஐந்து அண்ணன்மார்கள் மூன்று சகோதரிகளுடன் புத்தாடைகள் உடுத்தி பெற்றோர் ஆசி வாங்கி, பின் குன்னக்குடியில் குடி கொண்டு ஒரே திசையை நோக்கி வீற்றிருக்கும் நவகிரகங்கள் போல் ஒன்பது பேரும் ஒரே மாதிரி ஆளுக்கொரு கல்வெடி பாக்கெட்டுகளை(சிறிய பேப்பர் உருண்டைகள் போலிருக்கும்) எங்க வீட்டுத் திண்ணையிலிருந்து ஒரே நேரத்தில் தரையில் வீசிவீசி வெடிப்போமே அதுதான் மறக்க முடியாதது.

3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் போகும் காலமெல்லாம் மலையேறிவிட்டது. தீபாவளிக்கு மட்டுமல்ல எப்போதும் இருப்பது சென்னை அடையாறில்தான்.

4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

பிள்ளைகள் கூட இருந்த காலத்தில் வழக்கம் போல் அதிகாலை எழுந்து குளித்து புத்தாடைகள் அணிந்து பூஜைமுடித்து காலை உணவு இனிப்பு கார வகைகளோடு உண்டு வீட்டுக்கு வெளியில் பட்டாசுகள் வெடித்து சொந்தங்களை சந்தித்து மகிழ்ந்து கொண்டாடியது சில காலம் முன்பு. இப்போது இரு சீனியர் சிட்டிசன்கள் கொண்டாடும் தீபாவளி....வருடம் 365 நாட்களில் ஒன்று போல் கழிந்தது.

5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

எப்போதும் போல் ‘ராசி சில்க்ஸ்’

6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

வீட்டில் பலகாரக் கடாய் வைக்க வேண்டுமே என்று நான் செய்தது SPLENDA SWEETNER சேர்த்து செய்த பாதாம் அல்வா. ரங்கமணிக்காக. மற்றபடி வருவோர்க்கு, அக்கம் பக்கம் கொடுக்க கடையில் வாங்கினேன். மிக்ஸர், தட்டை, லட்டு, பாதுஷா, மஸ்கோத்து அல்வா. அம்புட்டுதேன்.


7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

தொலைபேசி, கைபேசி மூலம்தான். ‘வாழ்த்துஅட்டை!?’ எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்?

8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

ரெண்டும் கொஞ்சம் கொஞ்சம்.

9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

இந்த வருடம் அப்படியேதும் இல்லை. மற்றபடி நாங்கள் வழக்கமாக உதவி செய்யும் தொண்டு நிறுவனம்....”உதவும் கரங்கள்”

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

அவர்கள் அலறாவண்ணம் நான் அழைக்கும் நால்வர்:

KVR/ராஜா http://kvraja.blogspot.com/
அபிஅப்பா http://abiappa.blogspot.com/
ஆயில்யன் http://kadagam.blogspot.com/
சீனா http: //cheenakay.blogspot.com/


வலையுலக சக்கரவர்த்திகளல்லவா? அன்போடு அழைக்கிறேன். மெல்ல வந்து பதிந்து போகவும்.

ஆவணி பௌர்ணமி - சர்வேசன்500 ‘நச்’னு ஒரு சிறுகதை

'ராஜீ! இதான் ஏ முடிவு. நா காட்டுற மாப்பிள்ளைக்குத்தான் நீ கழுத்தை நீட்டணும்.
எதாவது ஏடாகூடமா பண்ண நெனச்சே மகள்னு கூட பாக்க மாட்டேன், கொன்னுடுவேன்.'
அப்பாவின் மிரட்டலில் மிரண்டுதான் போனாள், ராஜி.

சென்னையில் பெரிய பிசினஸ் புள்ளி அவள் அப்பா தியாகராஜன். ஒரே மகள் அதுவும் தாயில்லாதவள். அவள் கேட்காத சௌகரியமெல்லாம்

கிடைத்தது. உறவென்றும், கூடப் பிறந்தவர்கள்ந்ன்றும் யாருமில்லாமல், வியாபர விஷயமாக தந்தையும் மாதத்தில் பாதி நாட்கள் வீட்டிலில்லாமல்

வேலைக்கார ஆயா துணையோடு அவ்வளவு பெரிய பங்களாவில்
தனிமையில் ஏங்கிக் கழித்தாள்.

ஒரு நாள் கல்லூரித் தோழி ஜெயா வீட்டிற்குப் போகும் சந்தர்ப்பம் வாய்த்தது. அங்கு போனதும் உடம்பெங்கும் புது ரத்தம் பாய்ந்தது போல் உணர்ந்தாள்.

ஜெயாவின் அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி என்று அங்கு நிலவிய பந்ததையும் பாசத்தையும் ஒருவரையொருவர் செல்லமாய் சீண்டி

விளையாடிக்கொள்வதையும் பார்த்து வியந்தாள்.
இப்படியெல்லாம் கூட இருக்குமா? வாழ்கையின் ஜீவனை அங்கு கண்டாள், தனை மறந்தாள்,
தன்னையும் அக்குடும்பத்தோடு இணைத்துக்கொள்ள ஆசைப்பட்டாள்.

'ஜெயா! உங்க வீட்டில் எல்லோரும் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள்!'
'இதிலென்ன ஆச்சரியம், ராஜி?அவரவர் இயல்போடு இருக்கிறோம். உங்க வீட்டில் இது போல கலகலப்பாக இருப்பதில்லையா?'
'கலகலப்பா? அதுக்கு எனக்கு அர்த்தமே தெரியாது ஜெயா! வீடு முழுக்க வேலைக்காரர்கள், துணைக்கு ஆயா, எப்பவாவது வரும் அப்பா, நிசப்தமான

வீடு. இதுதான் எங்க இயல்பு.' என்றாள் ராஜி சலிப்போடு.
'உங்க வீட்டில் நிலவும் அன்பு, பாசம், அன்யோன்னியம் எல்லாம் ரொம்பப் பிடிச்சிருக்கு ஜெயா!
நான் அடிக்கடி இங்கே வரலாமா?' ஏக்கம் ததும்பக் கேட்டாள் ராஜி.
'ஐயோ! ராஜி என்ன சொல்லிட்ட? இது உன் வீடு நீ எப்ப வேணாலும் வரலாம்.' என்றாள் ஜெயா அவள் கைகளை ஆதுரத்துடன் பற்றிக் கொண்டு.

அந்த வீடும் அதன் சூழ்நிலையும் பிடித்துப் போக அடிக்கடி போகவாரம்பித்தாள் ராஜி. நாளடைவில் ஜெயாவின் அண்ணன் மூர்த்தியின் அழகும் குணமும்

துறுதுறுப்பும் குடும்பத்தின் மேல் அவன் கொண்ட பற்றும்அவளை வெகுவாகக் கவர அவளறியாமல் மூர்த்தியை விரும்பவாரம்பித்தாள். அவன்

நிலையும் அதுவே.
ஜெயாவின் குடும்பத்தாரும் அவர்கள் விருப்பத்தை ஆமோதித்தனர். ராஜியின் தந்தையை எண்ணி தயங்கினாலும், ராஜியின் விருப்பமே அவர்கள்

விருப்பமும்.

தெரிய வேண்டிய நேரத்தில் ஒரு நாள் தியாகராஜனுக்குத் தெரிய வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தார். 'ராஜீ...! உனக்காக நான் பூனேயில் ஒரு பெரிய

பிசினஸ்மேனின் ஒரே மகனுக்கும் உனக்கும் திருமணம் பேசிவிட்டு வந்திருக்கிறேன். அம்மா இல்லை, உனக்கு மாமியார் தொந்தரவும் இருக்காது.

அங்கே நீ ராணி மாதிரி வாழலாம். அதைவிட்டு ஒரு கூட்டுக் குடும்பத்தில் போய் உழல ஆசைப் படுகிறாயே? இதுக்கு நான் சம்மதிக்கவே மாட்டேன்.
இதுக்குப் பிறகுதான் முதல் பாராவில் அவர் சொன்ன வார்த்தைகள்.

அன்றிரவு த்னிமையில் அப்பாவிடம் தன் மனதிலுள்ளதை வெளிப்படுத்தினாள். 'அப்பா! இங்கும் நான் நாள் முழுதும் தனிமையில்தான் கழிக்கிறேன். நீங்க

பார்த்திருக்கும் இடமும் ஏறக்குறைய அப்படித்தான் அமையப் போகிறது. மாமனார், மாமியார் நாத்தனார்,கொழுந்தன், கணவர் என்ற கூட்டுக் குடும்ப

அமைப்புத்தான் நான் விரும்புவது. அப்படி ஒரு அழகான குடும்பம்தான் என் தோழி ஜெயாவுடையது. அன்பும் பாசமும் அரவணைப்பும் கலந்து

கொஞ்சிவிளையாடும் குடும்பம். அவளுடைய அண்ணன் மூர்த்தியை நான் விரும்புகிறேன். அக்குடும்பத்தில் ஒருத்தியாக அங்கு நான் ம்கிழ்ச்சியாக

இருப்பேன். என் சந்தோஷம் அங்குதானிருக்குதப்பா!' என்றாள் தயங்கிக்கொண்டே.

'நான் வாக்குக் கொடுத்துவிட்டேன். என் மானம், கௌரவம் எல்லாம் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு. இதில் எந்த வித மாற்றமும் இல்லை.'

என்று உறுமியவாறு சொல்லிக்கொண்டே அறையை விட்டு வெளியேறினார்.

செய்வதறியாது திகைத்தாள் ராஜி. சட்டியிலிருந்து அடுப்பில் தாவிய கதையாயிற்றே என்று வெம்பினாள். ஆனாலும் அடுப்பில் வீழ்ந்து கருகக்கூடாது

என்று முடிவெடுத்தாள். ஆனால் வழிதான் புலப்படவில்லை.

மறுநாள் கல்யாண அழைப்பிதழ்கள் அச்சடித்து வந்தன. ராஜியிடம் கொடுத்து வேண்டியவர்களுக்கு அனுப்புமாறு அவளிடம் விசிறியடித்தார்

தியாகராஜன். அதில் ஒன்றை எடுத்துப்பார்த்தாள். கல்யாணத் தேதியைப் படித்ததும் அவள் மூளையில் பளிச்சென்று பல்பு எரிந்தது. மாப்பிள்ளை வட

நாட்டைச் சேர்ந்தவர். புரிந்துகொள்வார் என்று தைரியமாக ஒரு முடிவெடுத்தாள். வாழப்போவது அவளல்லவா?

சமர்த்தாக அப்பா சொன்னபடி எல்லாம் கேட்டுக் கொண்டாள். அவரும் அவள் மனம் மாறிவிட்டதாக எண்ணி கல்யாண் வேலைகளில் மூழ்கினார்.

திருமணநாள் வந்தது. அலங்காரப் பதுமையாக மணமேடையில் வந்து மாப்பிள்ளை அருகில் அமர்ந்தாள். ஐயர் தாலி எடுத்துக் கொடுக்க அதை வாங்கி
அவள் கழுத்தில் கட்ட வந்தான் மணமகன். 'சற்றே பொறும் பிள்ளாய்!' என்னும் விதமாக கையமர்த்தி நிறுத்தினாள் ராஜி.

"நீங்க இதைக் கட்டும் முன்னால் நான் உங்களுக்கு ஒன்றைக் கட்ட விரும்புகிறேன்...என்றவாறே இடுப்பில் மறைத்து வைத்திருந்த பளபளவென ஜொலிக்கும் ராக்கி ஒன்றை அவன் கையில் கட்டினாள்.

'இன்று ஆவணி பௌர்ணமி! ரக்க்ஷா பந்தன் நாள்! இந்த ராக்கியை உங்கள் கையில் கட்டி உங்களை என் சகோதரனாக ஏற்றுக் கொள்கிறேன்!’ என்றவாறே தன் விருப்பத்தை அவனிடம் சொல்லி, தான் விரும்பியவரோடு சேர்த்து வைத்து வாழ்த்த வேண்டுமாறு வேண்டினாள்.

தியாகராஜன் முகத்தில் ஈயாடவில்லை.

Friday, October 9, 2009

நீயும் பொம்மை..நானும் பொம்மை - அக்டோபர் பிட்டுக்கு

அக்டோபர் புகைப் படப் போட்டிக்கு என் பங்களிப்பு
நிமிர்த்திப் போட்டால் பூந்தொட்டி....கவுத்திப் போட்டால்....? வேறென்ன? பொம்மைதான்!!

Sunday, September 6, 2009

வந்தேன்...வந்தேன் மீண்டும் நானே வந்தேன்...!!!

குடும்பத்தில் திடீரென்று நிறைவேற்ற வேண்டிய சில கடமைகளாலும் இணையத் தொடர்பு சரிவர அமையாத காரணத்தாலும் பதிவுலகிலிருந்து சில காலம் விலகியிருக்க வேண்டியதாகி விட்டது. "நானானி காணும்...நானானி காணும்"ன்னு தேடியிருப்பீர்கள். ஆம்! அன்பு வல்லியின் பதிவிலிருந்து தெரிந்து கொண்டேன். உள்ளம் சிலிர்த்தது, அவ்வன்பு நெஞ்சங்களை நினைத்து.

முதற்கண் என் பிறந்த நாளை நினைவில் வைத்து வாழ்த்துக்களை பதிவு செய்த அன்புச் சகோதரி வல்லிக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!!!!
அப்பதிவுக்கு வந்த பின்னோட்டங்கள், ஆஹா! நமக்கும் இத்தனை பேர் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்களே...என்று ஆனந்தமாயிருந்தது.


Monday, August 24, 2009
பிறந்த நாள் வாழ்த்துகள் நானானி!!

நைன்வெஸ்ட்
தளத்தின் உரிமையாளரும்
இனிய குணம் கொண்டவரும்,
பதிவர்களின் அன்பரும்
நண்பருமான நானானிக்கு
இன்று பிறந்த நாள்.

அன்பு நானானியும்,அவர்தம் குடும்பமும் எல்லா வளமும் பெற வாழ்த்தலாம் வாருங்கள் .

ஹாப்பி பர்த்டே நானானி .
வரும் வருடங்கள் நல்ல வருடங்களாக அமைய ஆரோக்கியம் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறோம் .

வாழ்த்துக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!! வணக்கங்கள்!!!

10 Comments:
அபி அப்பா said...
ஹய் அக்காவுக்கு பர்த்டே வா??????? எனக்கு வாழ்த்த வயதில்லை!!!!!!!! ஆசி வேண்டும்!!!!!!!

என் மனமார்ந்த ஆசிகள் உங்களுக்கு என்றும் உண்டு, 'அபியும் நானும்' இல்லையில்லை அபி அப்பா!!!!!


ஆயில்யன் said...
நானானி அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
இனிய வாழ்த்துக்களுக்கு என் இனிப்பான நன்றிகள்!!


வல்லியம்மா, போட்டோ சூப்பர் :) அதே! அதே!!

மதுரையம்பதி said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி!

வல்லிசிம்ஹன் said...
அன்பு ஆயில்யன் நன்றி ம்மா.
நானானிக்கு இப்ப கையில் இணையத் தொடர்பு இல்லை. இல்லாவிட்டால் அவங்களே எல்லோருக்கும் நன்றி சொல்வாங்க.
அதுக்காகவே இச்சிறப்புப் பதிவு.

அன்பு அபி அப்பா உங்கள் வாழ்த்துகளைச் சொல்லுகிறேன்,. அவங்க கட்டாயம் ஆசிகளை அனுப்புவாங்க.
அனுப்பிட்டேனே!!!

அன்பு மௌலி கண்டிப்பா உங்க வாழ்த்துகளைச் சொல்கிறேன்
கேட்டுக் கொண்டேன்!!


துபாய் ராஜா said...
நானானி அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
துபாய் ராஜாவுக்கு என் வணக்கங்கள்!!


தமிழ் பிரியன் said...
நானானிம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மகனின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டேன்.

அவங்களைக் கொஞ்ச நாளாக் காணோமே அம்மா,
எங்கிருந்தாலும் No 9, west பக்கம் அனுப்பி வைங்கம்மா.
கொஞ்சம் பிஸியாகவும் இணைய தொடர்பு துண்டிக்கப் பட்டதாலும் சொந்த வீட்டுக்கே வரமுடியவில்லை. ரொம்ப தேடீட்டயா செல்லம்?


வல்லிசிம்ஹன் said...
அன்பு துபாய் ராஜா, அன்பு தமிழ்ப்பிரியன், இணைய இணைப்பு கிடைத்ததும்
மீண்டும் எழுதுவார்கள்.
தற்காலிகமாக ஒரு தொடர்பு கிடைத்தது. எனவே இப்பதிவு.
நான் தொலைபேசியில் சொல்கிறேன்.
சொன்னாங்களே!!!


கோமதி அரசு said...
நானானியை இன்று தான் நினைத்தேன்,
அவர்களுக்கு100 வயது.
ஆஹா! நூறு வயதா..?! அம்மாடியோவ்!!
கோமதி அரசுவின் முதல் வருகை வாழ்த்துக்களோடு வருகிறது. நன்றி!!
சேரீ.....என்னை எதற்காக அன்று நினைத்தீர்கள்? அத்த சொல்லவில்லையே?
நானானிக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
நன்றி!! கோமதி அரசு!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...
வாழ்த்துக்கள்.. :)
நன்றிகள்!!

கவிநயா said...
நானானி அம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
கவிநயாவுக்கு என் அன்பு!!!

(பூ ரொம்ப அழகா இருக்கு வல்லிம்மா! பிள்ளையார்/லக்ஷ்மி படமும் கண்ணை பறிக்குது!)
வெண்மை நிறத்தில் (என் மனசு போல்!!!!????) பளிச்சென்றிருக்குது.



மற்றும் பதிவைப் படித்துவிட்டு எனக்கு தகவலும் வாழ்த்துக்களும் போனில் சொன்ன துள்சிக்கும்

வருடாவருடம் தவறாமல் வாழ்த்துவது போல் இந்தவருடமும் வாழ்த்தி "மீ த ஃபஸ்டா?" என்று பதிவுலக மொழியில் கேட்டு உறுதி செய்து கொண்ட அன்பு மருமகள் ராமலக்ஷ்மிக்கும்

நேரில் வந்து வாழ்த்தி பரிசளித்த என் இரு சகோதரிகளுக்கும்

எதேச்சையாக பிறந்தநாள் அன்று சிகாகோவிலிருந்து என்னை போனில் அழைத்து வேறு விஷயங்கள் பேசிக்கொண்டிருந்த அன்பு சகோதரன் சகாதேவனிடம் ,"இன்று என் பிறந்தநாள்..வாழ்த்தத்தான் அழைத்தாய் என்று நினைத்தேன்." என்று அவரை திகைக்க வைத்து வாழ்த்துக்களை அவர் வாயிலிருந்து பிடுங்க வைத்த சகாதேவனுக்கும்

அழகான ஒரு புடவையை கிஃப்ட் பார்சல் செய்து, "ஆப்பி ஆப்பி ஆ தூ தூ யூ!"(ஹாப்பி பர்த்டே டூ யூ வாம்) என்று பாடி வாழ்த்தி என் கைகளில் தந்த என் செல்லப் பேரன் ஷன்னுவுக்கும்

என் மனமார்ந்த நன்றிகள்!!!!!!!!!!!!!! இந்நினைவுகள் என்றும் பசுமையானவை.

பிலேட்டட் வாழ்த்துக்கள் போல் இது பிலேட்டட் நன்றிகள்!!!!!


பிகு:
குடும்பத்தில் எதிர்பாராத கடமைகள் என்றேனே? அதை உங்களோடும் பகிர்ந்து கொள்ள வேண்டாமா? ரங்கமணிக்கு ஒரு பை-பாஸ் சர்ஜரி போன மாதம் நடந்தது. அதனால்தான் பதிவுப் பக்கம் வரமுடியவில்லை. இப்போது நலமுடன் இருக்கிறார். இனி அப்பப்ப வருவேன்.

Monday, July 20, 2009

தேடி வந்த விருதுகள்...வழங்கிய வள்ளல்கள்

நான் கேட்கவில்லை....எதிர்பார்க்கவுமில்லை. தேமேன்னு எனக்குத்தெரிந்ததை, பார்த்ததை, ரசித்ததை, கேட்டதை....இன்னும் பலவகையான தை..தை..தைகளை உங்களோடு ஆர்வத்தோடு, தேங்கிக்கிடந்த அணை நிரம்பி மதகை திறந்து விட்டாற்போல் எனக்கும் ஒரு வடிகாலாக வந்து வாய்த்தது, 'பதிவர் உலகம்!' கப்புன்னு பிடிச்சிக்கிட்டேன். விறுவிறுவென்று மேலேறியிருக்கிறேன் போலும். அடுத்ததடுத்து கைகளில் விழுந்தன விருதுகள். என்னதான் நமக்குள்ள்ளே நாமே நம் முதுகை தட்டிக் கொடுப்பது போலென்றாலும் 'விருது' என்றாலே ஒரு விருவிருப்பு இருக்கில்ல? அந்த மகிழ்ச்சியோடு எனக்கு இவற்றை வழங்கிய சகோதரிகள், திருமதி செல்விசங்கர், என்னை பட்டாம்பூச்சியாக சிறகடிக்க வைத்தவர், அடுத்து திருமதி கோமா, சுவாரஸ்யமான பதிவர் என்ற முத்திரையை என் மேல் பதித்திருக்கிறார்.

இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!!!


செல்விசங்கர் வழங்கிய பட்டாம்பூச்சி விருது!!!


கோமா முத்திரையிட்ட பதக்கம்!!!

நிறைய பதிவர்களின் பதிவுகளில் இந்த விருதுகளைப் பார்த்திருக்கிறேன். இப்ப நான் யாரைன்னு தேடுவது?

காற்று
ராஜா/KVR
வெடிவால்
அ.மு.செய்யது

இந்நால்வருக்கும் இந்த இரண்டு விருதுகளை வாரி வாரி வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

Saturday, July 18, 2009

சூப்பர் சிங்கரா...? பெக்கர் சிங்கரா...? பரிதாபம்!

விஜய் டீவீயில் "சூப்பர் சிங்கர்" ஜூனியருக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் பெற்றொர்களின் அவசரமும் குழந்தைகளின் அதீத ஆர்வமும் கலந்து கட்டி நிகழ்ச்சியை ஒரு வழி பண்ணிக்கொண்டிருக்கிறது.

சிறுவன் ஒருவன் பாட வருகிறான்...பாடி முடித்ததும் சிகப்பு விளக்கு எரிய ரிஜெக்ட் செய்யப்படுகிறான். ஓகேன்னு கம்பீரமாக வெளியேறினால் வெற்றி தோல்வியை சமமாக எடுத்துக்கொண்டான் எனலாம். மாறாக, "மேம்..மேம்..இன்னொரு சான்ஸ் கொடுங்க..ப்ளீஸ்! இம்முறை நன்றாகப் பாடுகிறேன்" என்று கெஞ்சுகிறான். ஜட்ஜோ..."சாரிடா..கண்ணா! இன்னும் நிறைய பேர் காத்துக்கொண்டிருக்கிறார்களே!!அடுத்த முறை நல்ல ப்ராக்டீஸ் செய்துவிட்டு வா!" என்று வழியனுப்புகிறார்கள்.

அடுத்ததாக ஒரு சிறுமியும் அவளது அம்மாவுமே பாடுமிடத்துக்கு வருகிறார்கள். அம்மா இல்லாமல் பாட வராது போலும். அவளும் ரிஜெக்ட் செய்யப்பட இம்முறை அம்மாவே குய்யோ முறையோ என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார். "வீட்டிலே நல்லாத்தான் பாடினாள். இப்போ மறுபடியும் பாடுவாள் பாருங்கள்...!" அனுமதியில்லாமலே மகளைப் பாடச் சொல்கிறார். என்ன...என்ன...இது? என்ன வகையான போட்டியிது?

குழந்தைகளை பாடச் சொல்லிக்கொடுக்கும் போதே வெற்றி தோல்வியைக் கண்டு மிரளாமல், அழாமல், தைரியமாக இருக்கக் கற்றுக் கொடுப்பதும் பெற்றோர் கடமைதானே? மாறாக அவர்களே துவண்டு, குழந்தைகளையும் துவளச்செய்து.....பார்க்கும் நமக்கும் கண்றாவியாய் இருக்கிறது. எங்க போய் முட்டிக் கொள்ள..?

நம் குழந்தைகளின் திறமையின் அளவுகோல் நமக்கே தெரிந்திருக்க வேண்டும். இந்த அளவில் ஏற்றுக்கொள்வார்களா...மாட்டார்களா..? என்பது நமக்கே தெரிந்திருக்க வேண்டும்.

இதை விட வேடிக்கை....பால்மணம் மாறா குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வந்து,

வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால், "கண்ணா! மாமாக்கு "அடியே கொல்லுதே! பாடிக்காட்டு!" என்போமே அந்த ரீதியில் சில பிஞ்சுகள் பாடும்போது,அதுவும் போட்டிக்களத்தில், நமக்கு பாவமாயிருக்கும்.
பெற்றவர்களின் பேராசை, குழந்தைகளின் மனத்தை எவ்வளவு தூரம் காயப் படுத்தும் என்பதையும் அவர்கள் உணரவேண்டும்.

அந்தக்காலம் போல் இல்லை...இப்போது குழந்தைகளுக்கு நிறைய, விதவிதமான எக்ஸ்போஷர்கள் இருக்கின்றன. முறையான சமயத்தில் தெளிவான திறமையோடு மேடையேற்றலாமே? வேண்டும் கொஞ்சம் பொறுமை!!!!!

இதையெல்லாம் பாக்கும் போது, என் ரெண்டரை வயது பேரன், "குட்டி! கண்களிரண்டால்..பாடு!" என்றதும் "நுன்னுனி..நுன்னுனி..." என்று மழலையில் ரொம்ப ரசித்துப் பாடுவான். அவனுக்குப் பிடித்த பாட்டு.
அடுத்தவார சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டிக்கு

அவனை அழைத்துப் போகட்டா.........?

Tuesday, July 14, 2009

ஜூலை பிட்- நினைவிடங்கள்.

உலகெங்கினும் நினைவிடங்களுக்காப் பஞ்சம்? எனக்கேத்த எள்ளுருண்டையாக என்னிடம் இருப்பவைகளை தந்திருக்கிறேன். பாத்துட்டு தெரிவு செய்து சொல்லுங்கோ.
அம்மையிலிருந்தே ஆரம்பிக்கலாம்..

மதுராபுரி ஆளும் மகராணி, எண்ணும் வரமெல்லாம் கடைக் கண்ணால் தரும் மீனாட்சி அம்மையின் திருக்கோயில் கோபுரமும் பொற்றாமரைக் குளமும். எட்டு அதிசயங்களுக்குள் ஒன்பதாவதாக இணைய முடியாமல் போனது. இழப்பு அதிசயங்களுக்கல்ல.


அமெரிக்காவில் விஸ்கான்சின் மாநிலத்தில் அமைந்துள்ள 'மில்வாக்கி மியூசியம்'. அற்புதமான கட்டிடக்கலைக்கொரு எடுத்துக்காட்டு.
அதன் இன்னுமொரு கோணம். பலமான காற்று வீசினால் பறவையின் ரெக்கைகள் போல் இவைகள் ஆடுமாம்.



மிசோரி மாநிலத்தில் செயிண்ட் லூயிஸ் நகரில் எழுப்பப்பட்டுள்ள வளைவு. ஆங்கிலேயர்கள் முதன்முதலில் அமெரிக்காவுக்குள் நுழைந்தது இந்நகர் வழியாகத்தான். அந்த நினைவாக வளைந்ததுதான்.


சொல்லவே வேண்டாம் சுதந்திரதேவியின் சிலை. கையும் தோளும் வலிக்காதோ?

வலிக்கும்தான். அவள் தேவியல்லவா? 33% கிடைக்கும் வரை இப்படித்தான் நிற்பாள் போலும்.


அமெரிக்காவின் பெருமை மிகும் நினைவுச் சின்னம். மிக அருகில் சென்ற போது பிடித்தது.


கலிபோர்னியாவில் பசிபிக் பெருங்கடல் மேல் அமைந்துள்ள "தங்கப்பாலம்"

Monday, July 13, 2009

House wife- ம் Computer Programmer-ம்

"ஓர் உதாரணம் சொல்றேன். அப்ப உனக்குப் புரியும்." என்றாள் விஜயா, தன் தங்கை சுதாவைப் பார்த்து. சுதா எட்டாவது படிக்கிறாள். தனியே கம்ப்யூட்டர் க்ளாஸும் போகிறாள்.
விஜயா கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு நல்ல வேலையில் இருக்கிறாள்.
பேஸிக் மொழியை விளக்கிக் கொண்டிருக்கிறாள். சுதாவும் கவனமாக கேட்டுக் கொள்கிறாள்.

"இப்ப நீ கடைக்குப் போய் ஐஸ்கிரீம் வாங்க வேண்டும் என்று வைத்துக் கொள். அப்ப என்ன செய்வாய்?"
"ஓயிப் போய் ஐகீம் வாங்கணும்" என்று அவள் மூன்று வயது தம்பியைப் போல் மழலையில் சொன்னாள்.
விஜயா சிரித்துக் கொண்டே....'சரி..அதுக்கு முன் என்னல்லாம் செய்வாய்? யோசி!'

'ங்ஏஏஏஏஏ' என்று விழித்தாள். நானே சொல்றேன்.

முதலில் கடைக்குப் போகிறாய் அதனால்;
1) நல்ல ட்ரெஸ் பண்ணிக்கணும்.
2) ஹாண்ட் பாகில் தேவையான பணம் எடுத்துக்கணும்.
3) கடையிருக்கும் தூரத்துக்கேற்ப, காரிலோ ஆட்டோவிலோ பஸ்ஸிலோ அல்லது நடந்தோ போவது பற்றி தீர்மானிக்கணும்.
4) அவ்வளவு தூரம் போகும் போது வேறு ஏதாவது வேலைகள் உள்ளனவா?என்று யோசித்து அதுக்குத் தேவையானவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
5) வீட்டைவிட்டு கிளம்பும் போது க்யாஸ்,லைட், ஃபான், டிவி இவற்றை மறக்காமல் ஆஃப் செய்துவிடவேண்டும்.
6) பூட்டு சாவியை எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டி சாவியை பையில் போட்டு காலில் செருப்பை மாட்டி கடைக்குப் போக வேண்டும்.
7) கடைக்குப் போய் தேவையான ஐஸ்கிரீம் வகையை தெரிவு செய்ய வேண்டும்.
8) உரிய பணத்தைக் கொடுத்து....ஒன்று..ஐஸ்கிரீமை அங்கேயே சாப்பிட வேண்டும். அல்லது உருகாதபடி பாக் செய்து வீடு வந்து, சாவியை வைத்துப் பூட்டைத் திறக்கணும்
9) கதவைத் திறந்து செருப்பைக் கழற்றி விட்டு உள்ளே போய் நிதானமாக
ஐஸ்கிரீமை ரசித்து சாப்பிட வேண்டும்.

ஐயோ!!!எனக்கு ஐஸ்கிரீமே வேண்டாம்!
என்று கூவினாள் காதிரெண்டையும் கைகளால் பொத்திக்கொண்டு. ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு இந்தப் பாடா?

இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டே வந்த அம்மா, "அட! அப்ப நானும் கூட ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர்தானோ?"

எப்படி அம்மா சொல்ற?
பின்ன? நானும் காலையில் எழுந்து ப்ரஷ் பண்ணி, முகம் கழுவி, காப்பிக்குத்தண்ணி வச்சுட்டு, அது கொதிக்கு முன் வாசல் தெளித்து கோலம் போட்டு, டிக்காஷன் போட்டு,பால் காய்ச்சி, காலை டிபன் ரெடி பண்ணி, மதியத்துக்கு உங்களுக்கு சாப்பாடு ரெடி பண்ணி, அதை டிபன் பாக்ஸில் போட்டு, தண்ணீர் பாட்டிலும் சேர்த்து கூடையில் தயாராக எடுத்து வைத்து, இடையில் உங்கள் கூவல்களுக்குப் பதில் சொல்லி,அப்பாவையும் விஜயாவையும் ஆபீஸுக்கும் சுதாவை ஸ்கூலுக்கும் அனுப்பிவிட்டுத்தானே என்னோட ப்ரோக்ராம் ரன் ஆகி எண்ட் ஆகுது?

கேட்டுக் கொண்டே வந்த அவள் தம்பி சங்கரன், "அக்கா! நீ ப்ரோக்ராமர் மட்டும் இல்லை.
அனாலிஸ்டும் நீயே! டீம் லீடும் நீயே! ஏன்? ப்ராஜெக்ட் மேனேஜரும் நீயே!!" என்றான்,
சரஸ்வதி சபதம் படப் பாடல் மாதிரி.
"நதி நீயே!"
கடல் நீயே!"

அக்கா! இனி நீ ஹவுஸ் வெய்ஃப்தான் என்று சொல்லாதே! நீதான் எல்லாம்.

உண்மைதானே? குடும்பத்தின் அச்சாணி அதன் தலைவிதானே?
ஒரு நாள்...ஒரே நாள் அவள் வேலைகளை அவள் துணையில்லாமல் பிற அங்கத்தினர்கள் யாராவது செய்து பார்க்கட்டுமே!!

"சீதா! உப்பு டப்பா எங்கிருக்கு?...பால் கார்ட் எங்க வெச்சிருக்கே? இப்படிப் பட்ட கேள்விகள்தான் பறக்கும்.

Tuesday, July 7, 2009

சரியாக கேட்கப் பட்ட கேள்வி! இப்ப பதில் சொல்லலாமா?

போன பதிவில் விளக்கமாக கேட்கப் படாமல் நான் சொதப்பியதின் விளைவு......பலர் பலவிதமாக புரிந்து கொண்டு பலவிதமான பதில்களை பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்.


கேள்வி இதுதான்:


சினிமா பத்திய ஒரு கேள்வி..... கேக்கலாமா?1950-களிலிருந்து இன்று வரை படத்தின் டைட்டில்களில் தவறாமல் இடம் பெறும்....."டெக்னீஷியன்கள்" பெயர்கள், (திரை மறைவில் படம் நன்றாக ஓட, இவர்களது பணி இன்றியமையாதது) குறைந்த பட்சம் மூன்று(எனக்கு அவ்வளவுதான் தெரியும்) பேர்களைச் சொல்லமுடியுமா? இவர்களது பணியின் முக்கியத்துவம் இப்போதுதான் உணரப்படுகிறது. விருதுகளும் வழங்கப் படுகின்றன.



இதுதான் சரியான கேள்வி. இப்போது புரிகிறதா?


இன்னும் உங்களை குழப்ப மனமில்லை.


சரி, நான் மூன்று பெயர்களை சொல்கிறேன். அவர்கள் எந்தத் துறையைச் சார்ந்தவர்கள், என்றாவது சொல்ல முடியுமா?


T.S. ரங்கசாமி


J.J. மாணிக்கம்


சுந்தரலிங்கம்


எனக்குத் தெரிந்தவரை இம்மூவரும் ஐம்பது வருடங்களாக அவர்தம் சார்ந்த துறைகளில் இன்றும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். படம் பார்க்கப் போனால் டைட்டிலிலிருந்தே பார்க்கப் பிடிக்கும். டைட்டிலை கவனமாகப் பார்ப்பேன். இதை வைத்து எல்லோரையும் ஒரு புரட்டு புரட்டலாமே என்று எண்ணியதன் விளைவுதான் இப்பதிவு.







ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...